Saturday, November 3, 2012

Tamil Bhagavad Gita Chapter - 13



ஸ்ரீ மத் பகவத்கீதை பதின்மூன்றாம் அத்தியாயம்

Tamil Srimad Bhagavad Gita Chapter - 13 




ஷேத்ர ஷேத்ரக்ஞ விபாக யோகம்

ஸ்ரீபகவாநுவாச

அர்ஜுந உவாச

ப்ரக்ருதிம் புருஷம் சைவ ஷேத்ரம் ஷேத்ரஜ்ஞமேவ ச 
ஏதத்வேதிதுமிச்சாமி ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச கேஸவ

அர்ஜுந உவாச கேஸவ-அர்ஜுனன் சொல்லுகின்றான், கேசவா, ப்ரக்ருதிம் புருஷம் ஷேத்ரம் ஷேத்ரஜ்ஞ ச-பிரகிருதி, புருஷன், ஷேத்ரதிரம், ஷேத்ரதிரக்ஞன், ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஏவ ச - ஞானம், ஞேயம் என்னும், ஏதத் வேதிதும்-இவற்றை அறிய, இச்சாமி-விரும்புகிறேன்.

பொருள் : அர்ஜுனன் சொல்லுகின்றான் பிரகிருதி, புருஷன், ஷேத்ரதிரம், ஷேத்ரதிரக்ஞன், ஞானம், ஞேயம் என்னும் இவற்றை அறிய விரும்புகிறேன்.

ஸ்ரீ பகவாநுவாச

1. இதம் ஸரீரம் கௌந்தேய ஷேத்ரமித்யபிதீயதே 
ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹு: ஷேத்ரஜ்ஞ இதி தத்வித:  

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், கௌந்தேய-குந்தி மகனே, இதம் ஸரீரம் ஷேத்ரம் இதி-இந்த உடம்பு ஷேத்ரதிரம் என்று, அபிதீயதே-சொல்லப்படுகிறது, ஏதத் ய: வேத்தி-இதனை எவன் அறிகிறானோ, தம் ஷேத்ரஜ்ஞ இதி-அவனை ஷேத்ரதிரக்ஞன் என்று
தத்வித: ப்ராஹு:-ஞானிகள் கூறுகிறார்கள்.

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: குந்தி மகனே, இந்த உடம்பு ஷேத்ரதிரம் என்று சொல்லப்படுகிறது. இதனை அறிந்து நிற்போனை ஷேத்ரதிரக்ஞ னென்று பிரம்ம ஞானிகள் சொல்லுகிறார்கள்.

எது கெட்டுப் போகாது காப்பாற்றப்படுகிறதோ அது ஷேத்ரதிரம். உடலானது அங்ஙனம் காப்பாற்றப்படுகிறது. இனி, ஷேத்ரதிரம் என்பதற்கு மற்றொரு பொருள் வயல் என்பதாம். வேலை செய்வதற்கு ஏற்றவளவு அது விளைவு தரக்கூடியது. நல்லது கெட்டது ஆகிய இரண்டும் பூமியில் விளையும். நமது தேகம் ஷேத்ரதிரம் எனப்படுகிறது. இதில் அவரவர் கர்மபலனை அனுபவிக்கின்றனர். ஆக, ஜீவனுக்கு தர்ம ஷேத்ரதிரமாவது அவனது உடல். உள்ளே இருந்து உடலை அறிகிற பொருள் எதுவோ அது ஷேத்ரதிரக்ஞன்.

மானிட சரீரம் ஒரு பானையைப்போன்றுள்ளது. மனம், புத்தி, இந்திரியங்கள் அப்பானையில் இடப்பட்ட ஜலம், உருளைக்கிழங்கு, அரிசி இவைகளுக்குச் சமானம். இவையெல்லாம் அடங்கிய பானை யொன்றை அடுப்பின்மீது வைத்தால், அடுப்பின் நெருப்பு அவைகளை வேகச் செய்யும். அவைகளை ஒருவன் தொட்டால் அவனது விரல்களைச் சுட்டுவிடும். என்றாலும் அவ்வுஷ்ணம் வாஸ்தவத்தில் பானையினுடையதன்று. ஜலம், அரிசி, உருளைக்கிழங்கு இவைகளினுடையதுமன்று. அதுபோலவே, மனிதனிடம் உள்ள பிரம்மத்தின் சக்தியால்தான் அவனுடைய மனம், புத்தி, இந்திரியங்கள் எல்லாம் தத்தம் வேலைகளைச் செய்கின்றன.

அண்டத்திலுள்ள ஷேத்ரதிரங்களுக்கிடையில் தொடர்வு ஏதேனுமுண்டா? விடை வருகிறது :

2. ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வஷேத்ரேஷு பாரத 
ஷேத்ரஷேத்ரஜ்ஞயோர்ஜ்ஞாநம் யத்தஜ்ஜ்ஞாநம் மதம் மம  

பாரத-பாரதா, ஸர்வஷேத்ரேஷு-எல்லா ஷேத்ரதிரங்களிலும், ஷேத்ரஜ்ஞம் அபி-ஷேத்ரதிரக்ஞனும், மாம் வித்தி-நானே என்றுணர், ச ஷேத்ரஷேத்ரஜ்ஞயோ:-ஷேத்ரதிரமும், ஷேத்ரதிரக்ஞனும் (பற்றி அறியும்), யத் ஜ்ஞாநம்-எது ஞானம், தத் ஜ்ஞாநம் மம மதம்-அதுவே ஞானமென்பது என் கொள்கை.

பொருள் : பாரதா, எல்லா ஷேத்ரதிரங்களிலும் ஷேத்ரதிரக்ஞன் நானே என்றுணர். ஷேத்ரதிரமும், ஷேத்ரதிரக்ஞனும் எவை என்றறியுஞ் ஞானமே உண்மையான ஞானமென்பது என் கொள்கை.

ஷேத்ரதிரம் என்பது பிரகிருதி; ஷேத்ரக்ஞன் என்பது புருஷன். பிரகிருதியின் சேர்க்கையால் அதன் கூறுபாடுகளைப் புருஷன் தன்னுடையது என்று கருதுகிற பொழுது அவன் ஜீவாத்மாவாகிறான். ஸ்படிகத்துக்குப் பக்கத்தில் வைத்த புஷ்பத்தின் நிறத்தை ஸ்படிகத்தினுடையது என்று எண்ணுவது போன்றது அது. பிரகிருதி பேதம் அனந்தம். ஆதலால் ஜீவாத்மாக்களும் அனந்தம்.

பிரகிருதியின் சேர்க்கையால் உபாதியோடு கூடியதாகத் தென்படுகிற ஆத்மா உண்மையில் பிரகிருதியின் தன்மையை வாங்கிக்கொள்கிறதில்லை; வாங்கிக் கொண்டது போன்றது அது தென்படுகிறது. பிரகிருதியை உடைத்திருந்தும் அதில் கட்டுப்படாது இருக்கிற ஆத்மாவுக்கு ஈசுவரனென்று பெயர். அவர் ஒருவரே இத்தனை ஜீவர்களுக்கும் அந்தர்யாமியாயிருக்கிறார். அவருக்கு அன்னியமாக இந்த ஜீவர்களும் ஜகத்தும் இல்லை. ஆகையால் அவர் எல்லா ஷேத்ரதிரங்களுக்கும் ஷேத்ரதிரக்ஞனாக இருக்கிறார்.

இனி, ஞானம் என்பது ஷேத்ரதிரம் ஷேத்ரதிரக்ஞன் பிரகிருதி புருஷன் ஆகிய இரண்டு தத்துவங்களையும் முறையாக அறிவதேயாம். ஷேத்ரதிரத்தைப்பற்றிய வித்தை அபரவித்தை யென்றும், ஷேத்ரதிரக்ஞனைப்பற்றிய வித்தை பரவித்தை யென்றும் பகரப்படுகின்றன. வேதங்கள், வியாகரணம், கலைஞானங்கள், பூத பௌதிக சாஸ்திரங்கள் இவையாவும் அபரவித்தை. பிரம்ம ஞானமோ பரவித்தை. அபரவித்தையில் துவக்கிப் பரவித்தையில் ஆராய்ச்சி முற்றுப்பெறுவதே ஞானமாகும். தனியாக ஷேத்ரதிரத்தை ஆராய்ந்து அதை மட்டும் கையாளுவது உலோகாயதம். அதை ஷேத்ரதிரக்ஞனோடு இணைத்து ஆராய்வது சிறந்ததும் பாராட்டத்தக்கதுமாகிய அபரவித்தையாம்.

ஒரு புராண வரலாறு இக்கோட்பாட்டை நன்கு விளக்குகிறது. கார்த்திகேயனும் கணபதியும் பரமசிவனுக்குப் பிள்ளைகள். உள்ளதை எல்லாம் துருவி ஆராய்ந்துவிட்டு முதலில் வருபவனுக்குக் கனியொன்று தருவதாகக் கடவுள் தம் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொன்னார். குமரக் கடவுள் உலகம் யாவையும் அளந்தறிய விரைந்து ஓட்டம் பிடித்தார். நடக்கமுடியாத கணபதியோ கடவுளையே சுற்றிவந்து கனியைக் கேட்டார். அதற்குள் சுப்ரமண்யமும் உலகம் யாவையும் அறிந்து விட்டுக் கடவுள் அருகில் வந்துசேர்ந்தார். இருவரும் வல்லவர் ஆயினர். கணபதி அறிந்தது ஷேத்ரதிரக்ஞனாகிய ஈசுவரனை. சுப்ரமண்யம் அறிந்தது ஷேத்ரதிரமாகிய பிரபஞ்சம் முழுதையும். இவ்விருவர் ஆராய்ச்சியின் தொகுதியே முழு ஞானமாகிறது.

இக்காலத்து அறிஞர் கையாளுகிற பௌதிக ஆராய்ச்சி ஷேத்ரதிரத்தைப்பற்றிய ஞானத்துக்குப் பெருந்துணையாகும். சுப்ரமண்யக் கடவுள் உலகெல்லாம் ஆராய்ந்துவிட்டுப் பரமனுடைய சன்னதி வந்தது போன்று இக்காலத்திய பௌதிக ஆராய்ச்சியும் பரமனுடைய அடியை நோக்கிப் போவதன் அறிகுறிகள் தென்படுகின்றன. கடவுளுக்கு அன்னியமாக உலகம் இல்லை. கடவுளோடு இணைத்தே உலகத்தை அறிந்துகொள்ளும்போது அது மெய்ஞ்ஞானமாகிறது.

பணத்தை வைத்திருப்பதாலேயே ஒருவன் பணக்காரனாகி விடமாட்டான். பணக்காரனுடைய வீட்டிற்கு அடையாளம் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் விளக்குகள் எரிவதாகும். ஏழைக்கு எண்ணெய் கிடைக்காதாகையால் அத்தனை விளக்குகளை ஏற்றமாட்டான்.

பகவானது ஆலயமாகிய இச்சரீரத்தை அந்தகாரத்தில் வைத்திருக்கக்கூடாது. அதில் ஞான விளக்கு ஏற்றப்படவேண்டும். உன் ஹிருதயமாகிய அறையில் ஞானவிளக்கை ஏற்றித் தெய்வத்தின் திவ்விய முகத்தைக் காண்பாய். ஒவ்வொருவரும் ஞானத்தை அடையமுடியும். நான் என்கிற குறுகிய ஆன்மா என்றும், விசாலமான பரமான்மா வென்றும் இரண்டுவகையுண்டு. ஒவ்வொரு சிறு ஆன்மாவும் அதாவது ஜீவான்மாவும் பரமான்மாவோடு சம்பந்தப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரசக்தி இருக்கிறது. இந்த மின்சாரம் கம்பெனியிலிருந்து ஒவ்வொரு வீட்டுக்கும் செலுத்தப்படுகிறது. தகுந்த அதிகாரிகளிடம் மனுச் செய்ய வேண்டியதுதான். அப்போது உன் வீட்டில் மின்சார விளக்கைப் பெறுவாய். பரஞானம் உனது உடல் வாழ்க்கையையும், உன்னையும், உனது தெய்வத்தையும் விளக்கும்.

3. தத்ஷேத்ரம் யச்ச யாத்ருக்ச யத்விகாரி யதஸ்ச யத் 
ஸ ச யோ யத்ப்ரபாவஸ்ச தத்ஸமாஸேந மே ஸ்ருணு  

தத் ஷேத்ரம் யத்-அந்த ஷேத்ரதிரமென்பது யாது? ச யாத்ருக்-எவ்வகைப்பட்டது? ச யத்விகாரி-என்ன மாறுதல்களுடையது? யத: யத் ச-எங்கிருந்து வந்தது? ஸ: ய: ச-அவன் (ஷேத்ரதிரக்ஞன்) யார்? யத்ப்ரபாவ ச-அவன் பெருமை எப்படிப்பட்டது? தத் ஸமாஸேந மே ஸ்ருணு-இவற்றை சுருக்கமாக என்னிடமிருந்து கேள்.

பொருள் : அந்த ஷேத்ரதிரமென்பது யாது? எவ்வகைப்பட்டது? என்ன மாறுதல்களுடையது? எங்கிருந்து வந்தது? ஷேத்ரதிரக்ஞன் யார்? அவன் பெருமை எப்படிப்பட்டது? இவற்றை நான் சுருக்கமாகச் சொல்லுகிறேன், கேள்.

வேத வேதாந்தம் புகட்டுவதெல்லாம் இவ்விரண்டு தத்துவங்களையே யாம். இவ்விரண்டின் நிலைகளை விளக்குதற்கென்று அமைந்தவைகளெல்லாம் கலைகளாகின்றன.

அது எப்படி யென்று அடுத்த சுலோகத்தில் பகவான் விளக்குகிறார்.

4. ருஷிபிர்பஹுதா கீதம் சந்தோபிர்விவிதை: ப்ருதக் 
ப்ரஹ்மஸூத்ரபதைஸ்சைவ ஹேதுமத்பிர்விநிஸ்சிதை:  

ருஷிபி: பஹுதா கீதம்-ரிஷிகளால் பலவகைகளிலே பாடப் பட்டது, விவிதை: சந்தோபி: ப்ருதக்-பலவிதமான சந்தங்கள் (வேத மந்திரங்கள்) மூலமாகவும் தனித்தனியே கூறப் பட்டது, 
ச விநிஸ்சிதை: ஹேதுமத்பி-நல்ல நிச்சயமுடையனவுமாகிய, யுக்திகளுடன் விளங்கும், 
ப்ரஹ்மஸூத்ரபதை: ஏவ-பிரம்ம சூத்திர பதங்களிலும் இசைக்கப்பட்டது.

பொருள் : அது (ஷேத்ரதிரம்) ரிஷிகளால் பலவகைகளிலே பல்வேறு சந்தங்களில் பாடப்பட்டது. ஊகம் நிறைந்தனவும், நல்ல நிச்சயமுடையனவுமாகிய பிரம்ம சூத்திர பதங்களில் இசைக்கப்பட்டது.

முடிந்த நிலையை விளக்குதற்குக் கலையைக் கவிகள் நன்கு கையாண்டிருக்கிறார்கள். மெய்ப்பொருள் எக்காலத்துக்கும் உண்மையாதலால் அது நிலையெனப்படுகிறது. தெளிவற்ற சொற்களைக்கொண்டு விளக்கினாலும் மெய்ப்பொருளுக்குள்ள மதிப்புக் குறைவதில்லை. ஆனால் ரிஷிகளோ அதை விளக்குதற்கு இயல் இசை இரண்டையும் நன்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். இயல் என்பது தெளிந்த மொழி. உலகில் உள்ள எம்மொழியும் தெளிந்ததாகுங்கால் அது உள்ளத்தைக் கவரவல்லது. இசை அல்லது பாட்டுக்கு மற்றொரு வன்மையுண்டு. எல்லா உயிர்களையும் அது வசப்படுத்த வல்லது. துஷ்ட ஜந்துக்களும் இசைக்கு இணங்கி நல்லியல்பு பெறுகின்றன. உணர்ச்சியைக் கிளப்பவும் அதைச் செப்பனிடவும் வல்லது கீதம். இனிமையும் ஆனந்தமும் அதனால் வளர்க்கப்படுகின்றன. ஆக, மெய்ப்பொருள் விளக்கத்தில் ரிஷிகள் இயல் இசை ஆகிய இரண்டையும் நன்கு கையாளுதல் மூலம் அதில் விருப்பத்தையும் ஆர்வத்தையும் வளர்த்துள்ளார்கள். தனியாக உணர்ச்சியை மட்டும் வளர்த்தால் போதாது. பகுத்தறிவைக்கொண்டும் மெய்ப்பொருளை ஆராய்தல் வேண்டும். யுக்திக்கு ஒத்திருப்பது உண்மை. ஆகையால் யுக்தி அல்லது பகுத்தறிவை முறையாகக் கையாளுமளவு உண்மை நிரூபிக்கப்படுகிறது.

ஆக, வேத வேதாந்தத்தை நிறுவிய மேலோர் மக்களிடத்து உணர்ச்சி, அறிவு ஆகிய இரண்டையும் நன்கு வளர்த்தல் பொருட்டு இயல், இசை, யுக்தி இவைகளைச் செவ்வையாகக் கையாண்டிருக்கிறார்கள்.

யுக்திக்கு ஒவ்வாத உணர்ச்சியோ பாங்கற்ற மனக்குழைவு ஆகும். பக்தியின் பெயரால் சிலர் வெறும் மனக்கசிவு உடையவர்களாய் இருக்கிறார்கள். திண்மை அல்லது உறுதிப்பாட்டை அவர்கள்பால் காணமுடியாது. மற்று, வெறும் விசாரத்தில் ஈடுபடுகிறவர்களது நுண்ணறிவு உலர்ந்த அறிவாய்ப் போய்விடுகிறது. எண்ணெயில்லா யந்திரம் போன்றது அவர்களுடைய வாழ்க்கை. அறிவு பெருகியிருந்தாலும், நெஞ்சத்தில் ஈரமின்மை பாராட்டத்தக்கதன்று. நிறை மனிதன் என்பவன் நெஞ்சக் குழைவும் அறிவு வளர்ச்சியும் ஒருங்கே அமையப் பெற்றவனாம். அதாவது ஒவ்வொருவனிடத்தும் அன்பும் அறிவும் சேர்ந்திருக்க வேண்டும்.

நாரத மஹரிஷியினிடத்திருந்தது போன்று ஞானமிச்ர பக்தி, அதாவது ஞானத்தோடு கலந்துள்ள பக்தி சாதகர்களுக்கு முற்றிலும் வேண்டப்படுகிறது.

5. மஹாபூதாந்யஹங்காரோ புத்திரவ்யக்தமேவ ச 
இந்த்ரியாணி தஸைகம் ச பஞ்ச சேந்த்ரியகோசரா:  

6. இச்சா த்வேஷ: ஸுகம் து:கம் ஸங்காதஸ்சேதநா த்ருதி: 
ஏதத்ஷேத்ரம் ஸமாஸேந ஸவிகாரமுதாஹ்ருதம்  

மஹாபூதாநி அஹங்கார: புத்தி: ச-மகா பூதங்கள் (ஐம் பூதங்கள்), அகங்காரம், புத்தி, அவ்யக்தம் ஏவ-அவ்யக்தம், தஸ இந்த்ரியாணி ச-பத்து இந்திரியங்கள் (புலன்கள்), ஏகம் ச - மனதுடன் சேர்த்து (பதினொன்று), பஞ்ச இந்த்ரியகோசரா:-இந்திரிய நிலங்கள் ஐந்து (சுவை, ஒளி, ஓசை போன்ற புலன் நுகர் பொருட்கள்).

இச்சா த்வேஷ:-வேட்கை, பகைமை, ஸுகம் து:கம்-இன்பம், துன்பம், ஸங்காத: சேதநா - உடம்பு, சைதன்ய சக்தி, த்ருதி:-உள்ளத்துறுதி, ஸவிகாரம்-ஆகிய மாறுபாடுகள் உடைய, ஏதத் ஷேத்ரம்-இந்த ஷேத்ரதிரம், ஸமாஸேந உதாஹ்ருதம்-சுருக்கி சொல்லப் பட்டது.

பொருள் : மகா பூதங்கள் அகங்காரம், புத்தி, அவ்யக்தம், பதினோரு இந்திரியங்கள், இந்திரிய நிலங்கள் ஐந்து,

பொருள் : வேட்கை, பகைமை, இன்பம், துன்பம், உடம்பு, உணவு, உள்ளத்துறுதி இவையே ஷேத்ரதிரமும் அதன் வேறுபாடுகளுமாம் என உனக்குச் சுருக்கிக் காட்டினேன்.

ஆகாசம், வாயு, அக்கினி, அப்பு, பிருத்துவி ஆகிய ஐந்து பூதங்களும் சூக்ஷ்மமாக எங்கும் நிறைந்திருக்கிறபடியால் அவைகள் மஹாபூதங்கள் என்று சொல்லப்படுகின்றன.

அகங்காரம் - இது மஹாபூதங்களுக்குக் காரணமாகிறது. பூதங்கள் மூலமாக எழும் இருக்கிறேன் என்ற உணர்ச்சி அஹங்காரம் என்ற பெயர் பெறுகிறது.

புத்தி - இது நிச்சயவடிவு அல்லது தீர்மானம் செய்யும் தன்மையது. மஹத் என்ற பெயரும் இதற்கு வழங்கப்படுகிறது. இது அஹங்காரத்துக்குக் காரணமாயுள்ளது.

அவ்யக்தம் என்பது மூலப்பிரகிருதி என்று பொருள்படுகிறது. தோன்றா நிலையில் இருப்பதால் இதன்கண் விகாரம் அல்லது வேறுபாட்டைக் காணமுடியாது. இது புத்திக்குக் காரணமாகும். இவையாவும் ஈசுவர சக்தி.

தெய்விகம பொருந்திய என் மாயை கடத்தற்கு அரிது என்று ஏழாவது அத்தியாயம் பதினான்காம் சுலோகத்தில் பகவான் பகர்கிறார். இவைகளைத் தம்முடைய எட்டுவிதப்பிரகிருதி என்றும் பகவான் ஏழாவது அத்தியாயம் நான்காவது சுலோகத்தில் சொல்லுகிறார்.

பத்து இந்திரியங்கள் : கண் முதலிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கை முதலிய கர்மேந்திரியங்கள் ஐந்தும் சேர்ந்து பத்து ஆகின்றன.

மனம் - இது சங்கல்ப விகல்ப மயமானது. எண்ணமும் ஐயமும் இதைச் சேர்ந்தவைகள். மனமானது பத்து இந்திரியங்களுக்கும் பொதுவானது. பத்துத் தலைகளையுடைய ராவணன் பத்து இந்திரியங்களையுடைய மனதின் புறத்தோற்றமாக வந்தவன்.

இந்திரியார்த்தங்கள் - சப்த, ஸ்பர்ச, ரூப, ரச, கந்த - வடிவங்களாயுள்ள ஐந்து இந்திரியங்களின் விஷயங்களாம்.

இவைகளையெல்லாம் தொகுத்து இருபத்து நான்கு தத்துவங்கள் என்று சொல்லுகிறது சாங்கிய தர்சனம்.

இச்சை, துவேஷம் முதலியன ஆத்மாவின் குணங்களென்று வைசேஷிகர் சொல்லுவார்கள். ஆனால் இவையாவும் அறியப்படும் தன்மையுடையனவாதலாலும், இவைகள் மூலமாக ஷேத்ரதிரத்தைப் பற்றிய போதமே வளர்க்கப்படுகிறதாதலாலும் இவைகளை பகவான் ஷேத்ரதிரம் என்று பகர்கின்றார்.

இச்சை என்பது விருப்பு. இன்பம் கொடுக்கும் ஒரு பொருளைத் திரும்பவும் பெற எண்ணங்கொள்வது இச்சை. இது அந்தக்கரணத்தின் தர்மமாகும்.

துவேஷம் என்றால் வெறுப்பு. துன்பம் கொடுக்கும் ஒரு பொருளை அல்லது அவ்வினத்தைச் சேர்ந்த ஒன்றைக் காணுமிடத்து அதை விலக்க நினைப்பது வெறுப்பு.

ஸுகம் இன்பமென்று பொருள்படுகிறது. அனுகூலமாகத் தோன்றி அமைதி தந்து ஸத்வகுணத்தை வளர்ப்பது எதுவோ அது ஸுகம். காணப்படு பொருளாதலால் இது ஷேத்ரதிரம் என்று அழைக்கப்படுகிறது. துக்கம் அல்லது துன்பம் பிரதிகூலமாகத் தோன்றி அமைதியின்மையை வளர்க்கிறது.

ஸங்காதம் என்பது உடலமைப்பு. உடலையும் இந்திரியங்களையும் ஒன்றாகப் பொருத்தி வைப்பதற்கு ஸங்காதம் என்று பெயர். பல பாகங்கள் ஒன்றாகப் பொருத்தப்பெற்று ஒரு யந்திரம் ஆகிறது. அங்ஙனம் வெவ்வேறு அங்கங்கள், அவயவங்கள், இந்திரியங்கள் முறையாக அமையப்பெற்று உடல் அல்லது ஷேத்ரதிரம் உருவெடுக்கிறது.

சேதனம் என்னும் சொல்லுக்குப் பொருள் உணர்வு. தீயோடு தொடர்வுள்ள இரும்பு தீயை விளக்குவது போன்று, இந்திரியங்கள் ஆத்ம சைதன்யத்தை உணர்வாக விளக்குகின்றன. இந்திரியங்கள் வாயிலாக சேதனம் அறியப்படுகிறது. அது தேகாத்ம புத்தியை வளர்க்கிறது. ஆகவே அது ஷேத்ரதிரம் என்று சொல்லப்படுகிறது.

திருதி என்றால் உறுதி. உடலும் இந்திரியங்களும் சோர்வடையும் தன்மையுடையவைகள். அவைகளைத் தளரவொட்டாது பொருத்தமாகத் தாங்கிப் பிடிப்பது எதுவோ அது திருதி. இதன் வலிவால் உடல் வாழ்க்கை நெடிது நிலைபெறுகிறது. காணப்படு பொருள் ஆதலால் இதுவும் ஷேத்ரதிரத்தோடு சேர்க்கப்படுகிறது. இச்சை முதல் திருதி பரியந்தம் இவையாவும் அந்தக் கரணத்தின் விகாரங்களாம்.

ஷேத்ரதிரம் என்று உடலை முதல் சுலோகத்தில் சொல்லியதன் முழுவிளக்கம் இந்த இரண்டு சுலோகங்களில் வந்து அமைகிறது.

இந்தச் சரீரம் உபயோகமற்றதும், அழிந்துபோகக்கூடியதுமானால் ஆத்மசாதகர்கள் ஏன் இதை ஜாக்கிரதையுடன் காப்பாற்றுகிறார்கள்? உள்ளே ஒன்றுமில்லாத வெறும் பெட்டியை ஒருவரும் ஜாக்கிரதையாகப் பாதுகாப்பதில்லை. விலையுயர்ந்த நகைகளும், பணமும், பொருள்களும் உள்ள பெட்டியை எல்லாரும் பத்திரமாகக் காப்பாற்றுகிறார்கள். அதுபோல, பக்தர்கள் ஈசுவரன் வாசம் செய்கிற இந்தச் சரீரத்தைப் பாங்குடன் காப்பாற்றுகிறார்கள். இதைப் பராமுகமாக விட்டுவிட மாட்டார்கள். நமது சரீரங்களெல்லாம் ஈசுவரனாகிய பொக்கிஷம் நிறைந்த பெட்டிகளாகும்.

சாதகன் எத்தகைய பாங்குடன் இருந்தால் ஷேத்ரதிர ஷேத்ரதிரக்ஞனை அறிகிற ஞானம் வருகிறது? இதற்கு விடை வருகிறது: (5-6)

7. அமாநித்வமதம்பித்வமஹிம்ஸா க்ஷõந்திரார்ஜவம் 
ஆசார்யோபாஸநம் ஸௌசம் ஸ்தைர்யமாத்மவிநிக்ரஹ:  

அமாநித்வம்-கர்வமின்மை, அதம்பித்வம்-டம்பமின்மை, அஹிம்ஸா-ஹிம்சை செய்யாமை,
க்ஷõந்தி-பொறுமை, ஆர்ஜவம்-நேர்மை, ஆசார்ய உபாஸநம்-ஆசாரியனை வழிபடுதல், ஸௌசம்-தூய்மை, ஸ்தைர்யம்-ஸ்திரத்தன்மை, ஆத்மவிநிக்ரஹ:-தன்னைக் கட்டுதல்.

பொருள் : கர்வமின்மை, டம்பமின்மை, ஹிம்சை செய்யாமை, பொறுமை, நேர்மை, ஆசாரியனை வழிபடுதல், தூய்மை, ஸ்திரத்தன்மை, தன்னைக் கட்டுதல்.

ஷேத்ரதிரம், ஷேத்ரதிரக்ஞனைப் பற்றிய ஞானம் வெறும் ஏட்டுக் கல்வியால் வருவதன்று. வாழ்க்கையின்மூலம் தன்னைப் பண்படுத்துவதாலேயே ஞானம் வளர்கிறது. மற்றவர்களைவிட மேலோனாகத் தன்னை நினைத்துக்கொள்ளாதிருத்தல் அமானித்வம் என்னும் பெயர் பெறுகிறது. தற்பெருமை ஜீவபோதத்தை வளர்க்கிறது. தற்பெருமையின்மை பரபோதத்தை வளர்க்கிறது. அடுத்தபடியாகத் தன் செயலைச் சிலாகித்துப் பேசலாகாது. ஏனென்றால் செயலெல்லாம் உண்மையில் ஈசனுடையவைகள். அவைகளைத் தனது என்று தருக்கிப்பதால் அக்ஞானமே வளர்கிறது. உயிர்களுக்கு ஹிம்சை செய்யும் எண்ணம் அவைகளை ஈசுவரனுக்குப் புறம்பாக கருதுவதால் வருகிறது. அவைகளுக்குத் தீங்கு செய்யாதிருப்பதால் ஞானம் வளர்கிறது. இனி, மற்ற உயிர்களிடத்திருந்து தனக்குத் துன்பம் வரும்பொழுது அதைப் பொறுத்திருத்தல் வேண்டும். ஓர் உதாரணத்தால் இதை விளக்குவோம். பேசும்பொழுது தன் பல் தன் உதட்டைக் கடித்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதனால் பல்லைப் பகைப்பதில்லை. ஏனென்றால் பல்லும் உதடும் தன் சொரூபம். உயிர்கள் தனக்குச் செய்யும் துன்பங்களைப் பொறுத்திருக்குமளவு அவைகளைத் தன்மயமாயுணரும் தன்மை வருகிறது. ஆர்ஜவம் அல்லது நேர்மையென்பது உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமையாகும். எண்ணியபடியே இயம்புவது கள்ளங்கபடமற்ற மனதுக்கே இயலும். அது ஞான வளர்ச்சிக்கு முற்றிலும் இன்றியமையாதது. ஆசாரியருக்குப் பணிவிடை செய்வதால் தன்னை ஆசாரியருக்கு உரியவனாகச் சாதகன் செய்து கொள்கிறான். மனிதன் யாருக்குப் பணிவிடை செய்கின்றானோ, யாரை உபாசிக்கின்றானோ அவருடைய பான்மையெல்லாம் தனக்கே வந்தமைகின்றன. ஆதலால் குரு சேவை முற்றிலும் வேண்டப்படுகிறது. உடலையும் உள்ளத்தையும் தூயதாக வைத்துக் கொள்ளுதல் சௌசம் எனப்படுகிறது. நீராடுதல் போன்ற செயலால் உடல் தூயதாகிறது. இந்திரியார்த்தங்களிலுள்ள கேடுகளை ஓர்ந்து அவைகள்பால் பற்றுவைக்காதிருப்பது உள்ளத்தின் தூய்மையாகும். ஆத்ம சாதனம் எத்தனை காலம் நடைபெறுவதாயிருந்தாலும் அதனால் மனத் தளர்ச்சியுண்டாகாது. இடைவிடாது முயற்சியிருக்குமானால் அது ஸ்தைர்யம் எனப்படுகிறது. உடலும் இந்திரியங்ளும் வெளியுலகில் விஷயாதிகளில் செல்லும் தன்மையுடையவைகள். அவைகளை அப்படிச் செல்லவொட்டாது தடுத்து சன்மார்க்கத்தில் ஈடுபடும்படி செய்வது தன்னடக்கமாகும்.

8. இந்த்ரியார்தேஷு வைராக்யமநஹங்கார ஏவ ச 
ஜந்மம்ருத்யுஜராவ்யாதிது:கதோஷாநுதர்ஸநம்  

இந்த்ரிய அர்தேஷு வைராக்யம் ச-இந்திரிய விஷயங்களில் விருப்பமின்மை, அநஹங்கார: ஏவ-அகங்காரம் இல்லாமை, ஜந்ம ம்ருத்யு-பிறப்பு, இறப்பு, ஜராவ்யாதி-நரை, நோய், து:க தோஷ-துக்கம், தோஷம், அநுதர்ஸநம்-இவற்றின்கண் இசைந்த காட்சியுடைமை.

பொருள் : இந்திரிய விஷயங்களில் விருப்பமின்மை, அகங்காரம் இல்லாமை, பிறப்பு, இறப்பு, நரை, நோய், துக்கம், தோஷம் இவற்றின்கண் இசைந்த காட்சியுடைமை.

ஐந்து இந்திரியங்களுக்கு சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என ஐந்து விஷயங்களிருக்கின்றன. தூண்டிலில் உள்ளதைச் சுவைக்க முயன்று மீன் மாய்கிறது. தீயின் ஒளியை விரும்பி விட்டில் பூச்சி வதையுண்கிறது. ஊறு அல்லது ஸ்பரிசத்தை நாடிக் காட்டானை பழகிய பெண் யானையின் மூலம் மக்களிடம் பிடிபடுகிறது. ஓசையைக் கேட்டு மூச்சடக்கி மானானது வேடர் வசப்படுகிறது. நாற்றத்தை நாடி மலரில் வண்டு மாட்டிக்கொள்கிறது. இனி, இந்திரிய போக விஷயங்கள் ஐந்திலுமே ஈடுபடும் மனிதன் கதி என்னாவது? இதை எண்ணிப்பார்த்து அவைகளிடத்துப் பற்று வைக்காதிருக்கவேண்டும்.

சரீரத்தைத் தான் என்று அபிமானிப்பது அஹங்காரம். அப்படி அபிமானம் கொள்ளாதிருப்பது அகங்காரமின்மையாகும்.

நன்றாக விசாரித்துப் பார்க்குமிடத்து பிறப்பு முதலிய யாவும் துன்பத்தை உண்டுபண்ணுபவைகளாய் இருக்கின்றன. அப்படி வரும் துன்பங்களைத் தானே உண்டுபண்ணியிருக்கலாம், அல்லது இயற்கையில் அவை வந்து அமைந்திருக்கலாம், அல்லது தெய்வா தீனமாக அவைகள் ஏற்பட்டிருக்கலாம். இப்படி விசாரிப்பதால் விஷயங்களில் விரக்தி வருகிறது. மனது அந்தர்முகமாக ஆத்மாவிடம் திரும்புகிறது. அங்ஙனம் ஞானத்துக்கு அது தகுதியுடையதாகிறது.

இந்திரிய விஷயங்களின் மீதுள்ள பற்று எவ்வளவுக்குக் குறைந்து வருமோ அவ்வளவுக்குக் கடவுளிடத்து பக்தி அதிகரித்து வரும்.

9. அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதாரக்ருஹாதிஷு 
நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு  

புத்ர தார க்ருஹாதிஷு-மகனையும் மனைவியையும், வீட்டையும், அஸக்தி-பற்றின்மை, அநபிஷ்வங்க:-தன்னுடைமையெனக் கருதாமை, ச-மேலும், இஷ்ட அநிஷ்ட உபபத்திஷு - விரும்பியனவும் விரும்பாதனவும் எய்துமிடத்தே, நித்யம் ஸமசித்தத்வம்-எப்போதுமே சமசித்தமுடைமை.

பொருள் : பற்றின்மை, மகனையும் மனைவியையும், வீட்டையும் தன்னுடைமையெனக் கருதாமை, விரும்பியனவும் விரும்பாதனவும் எய்துமிடத்தே சமசித்தமுடைமை

பொருள்களை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணமில்லாமலிருந்தாலும் அவைகளிடத்துப் பற்றுதல் உண்டாகலாம். அப்படிப் பற்று வர இடந்தரலாகாது. மனைவி, மக்கள், வீட்டினிடத்து வைக்கும் அளவுக்கு மிஞ்சிய பற்றுதலால் தன்னை அவர்கள் மயமாய் உணரும் தன்மை வந்தமைகிறது. உற்றாருக்கு வந்த நோய் தனக்கே வந்ததாகவும், உற்றார் மடியத் தானே செத்துப்போனதாகவும் உணர்தல் அபிமானத்தால் வருகிறது. அதற்குப் பதிலாகத் தன்னையும் மற்ற எல்லா உயிர்களையும் இறைவனது குழந்தைகளாகக் கருதவேண்டும். உலக நிகழ்ச்சிகளில் வேண்டப்படுவனவாகவும், வேண்டப்படாதவைகளாகவும் பிரிவுபடுவது பற்றுடையார்க்கேயாம். மற்று, மனதை நடுநிலையில் வைப்போர்க்கு நலம் கேடு இரண்டும் ஒரே பாங்குடன் புலனாகும். இத்தகைய மன நிலையினின்றே ஞானம் உதிக்கிறது.

தன் உறவினர் ஒருவர்மேல் அபரிமிதமான பாசம் வைத்திருந்ததால் பகவானிடம் மனம் குவியப் பெறாத ஒரு பக்தரிடம் பகவான் அவர் நேசிக்கும் உறவினரைக் கடவுள் சொரூபமாகப் பாவித்து அன்பு வைக்கும்படி உபதேசித்தார். இவ்விஷயமாக உபதேசிக்கும்போது பகவான் கூறியதாவது - உன் ஆசைக்குப் பாத்திரமானவரிடம் உன் இஷ்ட தெய்வத்தைக் காண்பாயாகில், சுலபமாக மனம் பகவானை நாடிச் செல்வதை உணர்வாய்.

10. மயி சாநந்யயோகேந பக்திரவ்யபிசாரிணீ 
விவிக்ததேஸஸேவித்வமரதிர்ஜநஸம்ஸதி  

மயி அநந்யயோகேந-என்னிடம் பிறழ்ச்சியற்ற யோகத்துடன், அவ்யபிசாரிணீ பக்தி: ச - தவறுதலின்றிச் செலுத்தப்படும் பக்தி, விவிக்த தேஸ ஸேவித்வம்-தனியிடங்களை மேவுதல், 
ஜநஸம்ஸதி அரதி-ஜனக் கூட்டத்தில் விருப்பமின்மை.

பொருள் : பிறழ்ச்சியற்ற யோகத்துடன் என்னிடம் தவறுதலின்றிச் செலுத்தப்படும் பக்தி, தனியிடங்களை மேவுதல், ஜனக் கூட்டத்தில் விருப்பமின்மை

பகவானுக்கு ஒப்பான பொருள் வேறு ஒன்றுமில்லை யென்று உறுதிகொண்டு முழுமனதையும் அவனிடத்தே திருப்புதல்வேண்டும். தன் மனதை பக்தன் பங்குபோடுவதில்லை. அது முழுதையும் இறைவனுக்கென்றே கொடுத்துவைக்கிறான்.

துஷ்ட ஜந்துக்களால் இடைஞ்சல் உண்டாகாததும், ஆரோக்கியமானதும், இயற்கை வனப்பு வாய்ந்ததும், தூயதும், மனதுக்கு இனியதுமான இடத்தில் வசிப்பது ஆத்ம சாதனத்துக்குப் பொருத்தமானது. நல்லாரோடு கூடியிருத்தல், பிறகு அவர்களிடத்திருந்தும் பிரிந்து தனித்திருத்தல் தவத்துக்கும் ஞான வளர்ச்சிக்கும் துணைபுரிகின்றன.

தீபத்தைக் கண்டதும் பூச்சி இருட்டிலிருந்து ஓடி வருகின்றது. சர்க்கரைப் பாகிலேயே எறும்பு பிராணனை விடுமன்றி அதினின்றும் திரும்பிப் போகிறதில்லை. அதுபோல பக்தனும் ஈசுவரனையே எப்போதும் பற்றி நிற்பானாகையால் மற்ற பொருள்களையெல்லாம் அவன் கைவிட்டுவிடுகிறான்.

11. அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்ததர்ஸநம் 
ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யததோऽந்யதா  

அத்யாத்ம ஜ்ஞாந நித்யத்வம்-ஆத்ம ஞானத்தில் எப்போதும் நழுவாமை, தத்த்வஜ்ஞாந அர்த தர்ஸநம்-தத்துவ ஞானத்தில் பொருளுணர்வு, ஏதத் ஜ்ஞாநம்-இவை ஞான மெனப்படும், யத் அத: அந்யதா அஜ்ஞாநம்-இவற்றினிறும் வேறுபட்டது அஞ்ஞானம், இதி ப்ரோக்தம்-என்று சொல்லப் பட்டது.

பொருள் : ஆத்ம ஞானத்தில் எப்போதும் நழுவாமை, தத்துவ ஞானத்தில் பொருளுணர்வு – இவை ஞான மெனப்படும். இவற்றினிறும் வேறுபட்டது அஞ்ஞானம்.

ஏழாவது சுலோகத்தில் அமானித்வம்-தற்பெருமை யின்மை என்பதில் துவக்கி இந்த சுலோகத்தில் தத்துவ ஞானார்த்த தர்சனம் என்பது முடிய இவை யாவும் ஞானம் எனப்படுகின்றன. இத்தகைய மனநிலைகள் ஞான வளர்ச்சிக்குக் காரணமாயிருப்பதால் இம்மனநிலைகளே ஞானமாகக் கருதப்படுகின்றன. இவைகளுக்கு எதிரிடையான மனநிலைகளாகிய தற்பெருமை, தருக்கு, ஹிம்சை, பொறாமை, மனக்கோணல், குருபராமுகம், மாசு, தளர்ச்சி, அடங்காமை, ஆசை, அஹங்காரம், கேடறியாமை, பற்று, உற்றாரைச் சார்தல், ஓரம் சார்தல், காமியபக்தி, சகவாச தோஷம், ஆத்மஞான விசாரமின்மை-ஆகிய இவையாவும் அக்ஞானத்தை வளர்க்கின்றன.

ஈசுவரன் எங்கும் நிறைந்திருப்பவரானால் நம்மால் ஏன் அவரைப் பார்க்க முடியவில்லை? பாசியும் நாணலும் மிகுந்திருக்கும் குளத்தின் கரையில் நின்றுகொண்டால் அக்குளத்தில் ஜலமே இல்லையென்றுதான் நீ சொல்வாய். ஜலத்தைக் காணவேண்டுமானால் குளத்தின் மேற்பரப்பிலிருந்து பாசியை அகற்றவேண்டும். மாயையாகிற திரையால் மூடப்பட்ட கண்களையுடைய நீ ஈசுவரனைக் காணமுடியவில்லையென்று குறை கூறுகிறாய். அவரைக் காணவேண்டுமானால் உனது கண்களினின்றும் மாயையாகிய திரையை அகற்று.

ஞானத்தால் வரும் பயன் யாது? விடை வருகிறது :

12. ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வாம்ருதமஸ்நுதே 
அநாதி மத்பரம் ப்ரஹ்ம ந ஸத்தந்நாஸதுச்யதே  

யத் ஜ்ஞேயம்-எது அறியப் படவேண்டியதோ, யத் ஜ்ஞாத்வா-எதை அறிந்தால், அம்ருதம் அஸ்நுதே-சாகாமல் இருப்பானோ, தத் ப்ரவக்ஷ்யாமி-அதை விளக்கிக் கூறுவேன், அநாதி மத்-அநாதியாகிய, பரம் ப்ரஹ்ம-பரப்பிரம்மம், ஸத் ந உச்யதே-“சத்” என்பதுமில்லை, அஸத் ந-“அசத்” என்பதுமில்லை.

பொருள் : ஞேயம் எதுவென்பதைச் சொல்கிறேன். அதை அறிந்தால் நீ சாகாமல் இருப்பாய். அநாதியாகிய பரப்பிரம்மம், அதை “சத் என்பதுமில்லை, அசத் என்பதுமில்லை.

ஒன்பதாவது அத்தியாயம் பத்தொன்பதாவது சுலோகத்தில் பகவான் தம்மை (ம்ருத்யு:) சாவு என்றும் (அம்ருதம்) சாகாமையென்றும் சொன்னார். மேலும் தம்மை (ஸத்) உளதென்றும் (அஸத்) இலதென்றும் சொன்னார். ஸகுணப் பிரம்மம் பிரபஞ்ச சொரூபமாக இருக்கும்போது எல்லா முரண்பாடுகளும் அவரிடத்துச் சந்திக்கின்றன. வியாவகாரிக நிலையில் வைத்து விரைவில் மறையும் மக்கள் சாகின்றவர்கள் என்றும், நெடிது நிலைத்திருக்கும் தேவர்கள் சாகாதவர்கள் என்றும் சொல்லப்பட்டனர். அங்ஙனமே குணத்தோடு சம்பந்தப்பட்டுத் தோன்றியுள்ள காரியப் பிரம்மம் ஸத் என்று சொல்லப்பட்டது. அதனுடைய தோன்றா நிலை அஸத் என்று சொல்லப்பட்டது.

இத்தகைய விவகாரங்கள் யாவும் நிர்க்குண பிரம்மத்திடத்துக் கிடையா. அதைத் தோன்றியுளதென்றும் இலதென்றும் சொல்லலாகாது; அது தோற்றம் மறைவு அற்றது. அதனாலே தான் பரப்பிரம்மம் என்று அது அழைக்கப்படுகிறது. அது ஆதி அந்தம் அற்றது. மாறுபாடே அதனிடத்து இல்லை. அம்ருதம் என்பது அதற்கே முற்றிலும் ஒவ்வும். அபரோக்ஷõனுபூதியில் அறியத் தக்கது அதுவே. அதை அறிந்தபின் ஜீவனுக்குத் தான் வேறு, அது வேறு என்ற பேதமில்லை. பிரம்மத்தை அறிபவன் பிரம்மமாகிறான். ஆகையால் சாகாத்தன்மை பிரம்மஞானியினுடையதாகிறது. பிரம்ம நிர்வாணம் அல்லது மோக்ஷம் என்பது அதுவே. அது மனம் மொழியைக் கடந்த பெருநிலை.

அகண்ட பரம்பிரம்மத்தை ஸமாதியில் மட்டும்தான் அறியலாகும். அப்பால் ஒரே மௌனம்; ஜீவன் ஜகத் இவைகளைப்பற்றிய ஆராய்ச்சி, ஞானம் அக்ஞானம் என்ற விவாதம் இவைகளெல்லாம் அடங்கிவிடுகின்றன. ஸ்வரூபத்தைத் தவிர வேறொன்றும் ஆங்கில்லை. உண்மையில் உப்புப் பிரதிமை பிரம்மாண்ட ஸமுத்திரத்தில் மூழ்கிய பிறகு தன்னுடைய கதையைச் சொல்ல வெளிவருவதில்லை. இதுதான் பிரம்ம ஞானம்.

இந்த அமிர்த சாகரத்தில் கலப்பதற்கு முன்பு சாதகன் காணும் காட்சி யாது? விடை வருகிறது :

13. ஸர்வத: பாணிபாதம் தத்ஸர்வதோऽக்ஷிஸிரோமுகம் 
ஸர்வத: ஸ்ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்டதி  

தத் ஸர்வத: பாணிபாதம்-அது எங்கும் கைகால்களுடையது, ஸர்வதோ அக்ஷி ஸிர; முகம் - எங்கும் கண்ணும் தலையும் வாயுமுடையது, ஸர்வத: ஸ்ருதிமத்-எங்கும் செவியுடையது, 
லோகே ஸர்வம் ஆவ்ருத்ய திஷ்டதி-உலகத்தில் எதனையும் சூழ்ந்து நிற்பது.

பொருள் : அது எங்கும் கைகால்களுடையது. எங்கும் கண்ணும் தலையும் வாயுமுடையது; எங்கும் செவியுடையது; உலகத்தில் எதனையும் சூழ்ந்துநிற்பது.

கடலையணுகும் நதி கடலின் தன்மையைப் பெறுகிறது. நிர்க்குண பிரம்மத்தில் லயமாதற்கு முன்பு ஞானி ஜகத்திலுள்ள வடிவங்களை யெல்லாம் ஈசுவரசொரூபமாகப் பார்க்கிறான். அவனன்றி ஓரணுவும் அசைவதில்லை என்பது அவனுக்குப் பிரத்தியக்ஷமாகிறது.

அஹங்காரம் என்னிடம் இருக்கும் வரையில் ஜீவனாயும், ஜகத்தாயும் வேறு வேறு ஐசுவரியங்களுடன் தம்மைத் தோற்றுவிக்கும் ஈசுவரன் என் முன்னால் இருக்கின்றார்.

14. ஸர்வேந்த்ரியகுணாபாஸம் ஸர்வேந்த்ரியவிவர்ஜிதம் 
அஸக்தம் ஸர்வப்ருச்சைவ நிர்குணம் குணபோக்த்ரு ச  

ஸர்வ இந்த்ரிய குண ஆபாஸம்-எல்லா இந்திரிய குணங்களும் வாய்ந்தொளிர்வது, ஸர்வ இந்த்ரிய விவர்ஜிதம்-எல்லா இந்திரியங்களுக்கும் புறம்பானது, ச அஸக்தம் ஏவ - பற்றில்லாதது, ஸர்வப்ருத் ச-அனைத்தையும் பொறுப்பது, நிர்குணம் குணபோக்த்ரு-குணமற்றது; குணங்களைத் துய்ப்பது.

பொருள் : எல்லா இந்திரிய குணங்களும் வாய்ந்தொளிர்வது; எல்லா இந்திரியங்களுக்கும் புறம்பானது; பற்றில்லாதது; அனைத்தையும் பொறுப்பது; குணமற்றது; குணங்களைத் துய்ப்பது.

பல வடிவங்களைக் காணுதற்குப் பகல் வேளை உதவுகிறது. ஏனென்றால் சூரிய வெளிச்சம் அப்பொருள்களை விளக்குகிறது. பல பொருள்களின் விளக்கமாகச் சூரியப் பிரகாசம் ஒளிர்கிறது எனலாம். மேலும் சூரிய வெளிச்சம் இவ் வடிவங்கள் யாவையும் அற்றது. அவ் வடிவங்களில் அது பற்றற்றிருக்கிறது. ஆத்ம சைதன்யம் இந்திரியங்களில் அத்தகைய தொடர்வுடையதாயிருக்கிறது. சினிமாத் திரையானது படங்களை யெல்லாம் தாங்குவது போன்று சிதாகாசம் ஜகத்திலுள்ள அனைத்தையும் தாங்குகிறது. படத்தில் காணும் விதவிதமான வர்ணங்கள் திரையினுடைய வர்ணங்களல்ல. ஆனால் அத்தனை வர்ணங்களையும் திரை உள்ளபடி விளக்குகிறது. அங்ஙனம் முக்குணங்களும் பரமாத்மாவினிடத்து இல்லை. ஆயினும் குணங்களையெல்லாம் விளக்கவும் ரசிக்கவும் செய்கிறது அறிவு சொரூபமாகிய சிதாகாசம்.

ரூபியும் அரூபியுமான கடவுள் ஒன்றேதான். ஒன்றை நம்பினால் இன்னொன்றையும் நம்பினதாகும். எரியக்கூடிய சக்தியைத் தவிர்த்து நெருப்பையும், நெருப்பைத் தவிர்த்து எரிக்கிற சக்தியையும் சிந்திக்க வொண்ணாது. இன்னும் சூரிய கிரணங்களைத் தவிர்த்துச் சூரியனையும், சூரியனைத் தவிர்த்துச் சூரிய கிரணங்களையும் நினைக்க முடியாது; பாலைத் தவிர்த்து அதன் வெண்மையையும், வெண்மையைத் தவிர்த்துப் பாலையும் கருதவொண்ணாது. அது போல குணஸ்வரூபமான ஈசுவரனைத் தவிர்த்து நிர்க்குண ஸ்வரூபனையும், நிர்க்குண ஸ்வரூபனைத் தவிர்த்து குணஸ்வரூபனையும் சிந்திக்க முடியாது.

15. பஹிரந்தஸ்ச பூதாநாமசரம் சரமேவ ச 
ஸூக்ஷ்மத்வாத்ததவிஜ்ஞேயம் தூரஸ்தம் சாந்திகே ச தத்  

பூதாநாம் அந்த: பஹி: ச-பூதங்களுக்கு உள்ளும் புறமுமாவது, சரம் அசரம் ஏவ ச-அசரமும் சரமுமாவது, தத் ஸூக்ஷ்மத்வாத்-நுண்மையால், அவிஜ்ஞேயம்-அறிய முடியாதது, அந்திகே ச-அருகில் இருப்பது, தூரஸ்தம் ச தத்-தூரமானது.

பொருள் : பூதங்களுக்கு உள்ளும் புறமுமாவது; அசரமும் சரமுமாவது; நுண்மையால் அறிவரியது; தூரமானது; அருகிலிருப்பது.

கடலுக்குள் மிதக்கிற பனிக்கட்டிக்கு உள்ளும் புறமும் இருப்பது நீர். அங்ஙனம் பரமாத்மா நீக்கமற எல்லாப் பொருள்களிலும் நிறைந்திருக்கிறார். கடலின் மேல்பாகம் அலைவீசி அசைகிறது; அடிபாகம் அசையாதிருக்கிறது. பரமாத்மா குணங்களோடு கூடிப் பிரகிருதியாக இயங்குகிறார். குணம் போனவிடத்து அவர் அசையாதிருக்கிறார். கடல் நீர் ஆவியாக மாறி சூக்ஷ்மமாகும் பொழுது கண்ணுக்குத் தென்படுவதில்லை. அங்ஙனம் சுத்த சைதன்யமாகிய நிர்க்குண பிரம்மம் பேரறிவு சொரூபம் எனினும் மன பரிபாகமாகாத மந்த அதிகாரிகளுக்கு அப்பொருள் அறியவொண்ணாதது.

தன் சொந்த பூமியில் தன் பாதத்துக்குக் கீழ் பொன் இருப்பதை அறியாதவனுக்கும் பொன்னுக்கும் வெகுதூரம். தன்னுள் இருக்கும் பரமாத்மாவை அறியாதவனுக்கு அவர் மறுமையில் எங்கேயோ இருப்பதாக எண்ணம். தன் அந்தராத்மா அவர் என்று அறிகிறவனுக்கு அவரைவிட அருகில் உள்ள பொருள் வேறொன்றுமில்லை.

ஸமாதி நிலையிலிருந்து இந்திரிய நிலைக்கு வருபவனுக்கு இலேசான அஹங்காரம் இருக்கும். இதனால் அவன் ஒரே கடவுளின் பல்வேறு தோற்றங்களாகத் தன்னையும் ஜீவர்களையும் ஜகத்தையும் காண்கிறான். உனக்கென்று தனி வியக்தி இருக்கும் வரையில், அதாவது உன்னிடம் அஹங்காரம் இருக்கும் வரையில் ஈசுவரன் உருவம் உள்ளவன் என்பதைத் தவிர வேறுவிதத்தில் அவனை உன்னால் தியானிக்கவோ, நினைக்கவோ, காணவோ முடியாது. அதுவரையில் அகண்ட நிர்க்குணப் பிரம்மத்தை நீ உள்ளும் புறமும் சகுணக் கடவுளாகத்தான் காணுவாய். சகுணக் கடவுளின் இந்தத் தோற்றங்கள் பொய்யானவையல்ல. சரீரம், மனம், உலகம் இவைகளைக் காட்டிலும் அவை பன்மடங்கு மெய்யானவை.

16. அவிபக்தம் ச பூதேஷு விபக்தமிவ ச ஸ்திதம் 
பூதபர்த்ரு ச தஜ்ஜ்ஞேயம் க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச  

ஜ்ஞேயம் தத்-அறியத் தக்க அது (பிரம்மம்), பூதேஷு அவிபக்தம் ச-உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல், விபக்தம் இவ ச ஸ்திதம்-பிரிவுபட்டதுபோல் நிற்பது. பூதபர்த்ரு-பூதங்களைத் தாங்குவது, ச க்ரஸிஷ்ணு-அவற்றை உண்பது, ச ப்ரபவிஷ்ணு-பிறப்பிப்பது.

பொருள் : உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல் பிரிவுபட்டதுபோல் நிற்பது. அதுவே பூதங்களைத் தாங்குவது என்றறி; அவற்றை உண்பது, பிறப்பிப்பது.

ஆகாசம் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனால் அது ஒவ்வொரு வடிவத்துக்குள்ளும் பிரிவுபட்டது போன்று தென்படுகிறது. பிரிவுபடுத்துகிற வடிவத்துக்குள்ளும் அது இடையீடின்றி வியாபித்திருக்கிறது. பரமாத்மா அத்தகையவர். பாக்கி நான்கு பூதங்களையும் ஆகாசம் தாங்குவது போன்று ஜகத், ஜீவன் ஆகிய அனைத்தும் ஆத்ம சைதன்யத்தில் நிலைபெற்றிருக்கின்றன. அவைகள் பிரளய காலத்தில் ஒடுங்குவது ஆத்மாவில்; சிருஷ்டி காலத்தில் தோன்றுவது ஆத்மாவில். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய மூன்று நிலைகளிலும் அவைகள் ஆத்மாவுக்குப் புறம்பாயில்லை. அலைகள் கடலில் தோன்றி, கடலில் நிலைபெற்றிருந்து, கடலில் ஒடுங்குவது போன்று இவையாவும் பரமாத்மாவிடம் தோன்றி, இருந்து, இறக்கின்றன.

மாசு மறுவற்று விளங்கிய ஆகாசத்தில் திடீரென்று மேகங்கள் தோன்றுவதையும் அடுத்த நிமிஷத்தில் அவை காற்றினால் அப்பால் போக்கப்படுவதையும் ஒருக்கால் கண்ட பரமஹம்ஸர் ஒருவர், மிகுந்த குதூகலத்துடன் குதிக்கத் தொடங்கி, இதைப் போன்றதுதான் ஜகத்தும்; முதலில் அது இருந்ததில்லை. பிரம்ம மாகிற நிர்மல ஆகாயத்தில் திடீரென்று தோன்றி இத்தனை பொருள்களையும் உண்டாக்கியது. பிறகு அதே பிரம்மத்தின் காற்றினால் அகற்றப்படுகிறது, என்றார்.

பிரளய காலத்தில் காரிருள் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது. எல்லாவற்றையும் அது விழுங்கவும் செய்கிறது எனலாம். பரபிரம்மம் அத்தகையதோ என்ற ஐயம் ஏற்படலாம். அதற்கு விடை வருகிறது.

17. ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ: பரமுச்யதே 
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநகம்யம் ஹ்ருதி ஸர்வஸ்ய விஷ்டிதம்  

தத் ஜ்யோதிஷாம் அபி ஜ்யோதி:-ஒளிகளுக்கெல்லாம் அஃதொளி, தமஸ:-இருளிலும், பரம் ஜ்ஞாநம்-உயர்ந்த ஞானம், ஜ்ஞேயம்-அறியத் தக்கது, ஜ்ஞாநகம்யம்-ஞானத்தால் எய்தப்படுபொருள், ஸர்வஸ்ய ஹ்ருதி விஷ்டிதம்-எல்லாவற்றின் அகத்திலும் அமர்ந்தது, உச்யதே-என்று கூறப் படுகிறது.

பொருள் : ஒளிகளுக்கெல்லாம் அஃதொளி; இருளிலும் உயர்ந்ததென்ப. அதுவே ஞானம்; ஞேயம்; ஞானத்தால் எய்தப்படுபொருள்; எல்லாவற்றின் அகத்திலும் அமர்ந்தது.

சுயம் ஜோதியாகத் தென்படும் சூரியன் நக்ஷத்திரம் முதலியவைகள் பிரளய காலத்தில் தங்கள் ஒளியை இழந்து மறைகின்றன. புத்தியானது ஆத்மாவிடத்து வாங்கிய உணர்ச்சியை இழக்கலாகிறது. ஆத்மாவோ தன் ஒளியை ஒருக்காலும் இழப்பதில்லை. ஜடப் பொருள்களுக்கு உண்டாகிற இருளும் வெளிச்சமும் ஆத்ம சைதன்யத்தை அணுகமாட்டா. நள்ளிருளில் ஒருவனுக்குத் தன் உடலும் உடையும் தென்படுவதில்லை. ஆயினும் நான் இருக்கிறேன் என்ற உணர்ச்சி இருளில் மறைவதில்லை. சூரிய வெளிச்சத்தில் அவ்வுணர்ச்சி அதிகமாகத் தோன்றுவதுமில்லை. ஆத்ம சைதன்யத்தின் அறிவைக் கொண்டே சூரியனையும் அறிகிறோம், இருளையும் அறிகிறோம். அந்த ஆத்மா ஞானவடிவு. அது தன்னைத்தானே அறிகிறது. அது தன்னைத்தானே சார்ந்திருக்கும்பொழுது தன்னை நிறைபொருளாக உணர்கிறது. ஆக, ஆத்மாவால் அடைதற்கு உரியது ஆத்மாவே. அது ஹிருதய கமலத்தில் யாண்டும் நிலைத்திருக்கிறது.

உள்ளே (ஹிருதயத்தில்) ஈசுவரனை உணர்பவன் புறம்பேயும் அவனைக் காண்பான். தன்னுள்ளே ஈசுவரனைக் காணாதவன் தனக்கு வெளியேயும் அவனைக் காணமாட்டான். ஆகவே தேகாலயத்தில் தெய்வத்தைக் காண்பவன் அகிலாண்டத்திலேயும் அவனைக் காண்பான்.

18. இதி ஷேத்ரம் ததா ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத: 
மத்பக்த ஏதத்விஜ்ஞாய மத்பாவாயோபபத்யதே  

இதி ஷேத்ரம்-இங்ஙனம் ஷேத்ரதிரம், ததா ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச-அவ்வாறே அறிவு (ஞானம்), அறியப் படு பொருள் (ஞேயம்), ஸமாஸத: உக்தம்-சுருக்கமாகச் சொல்லப் பட்டது, மத்பக்த: ஏதத் விஜ்ஞாய-என் பக்தன் இதையறிந்து, மத்பாவாய உபபத்யதே-எனது தன்மையை அடைகிறான்.

பொருள் : இங்ஙனம் ஷேத்ரதிரம், ஞானம், ஞேயன் என்பனவற்றைச் சுருக்கமாகச் சொன்னேன். என் பக்தன் இதையறிந்து எனது தன்மையை அடைகிறான்.

மனிதன் எதனிடத்துத் தன் முழுமனதைச் செலுத்துகிறானோ அதை அறிய வல்லவனாகிறான். ஈசுவரனை உபாசிக்கிறவன் ஈசுவரனை அறிகிறான். இத்தனையுமாய் இலங்குவது ஈசனே என்ற ஞானம் வந்த பிறகு யாண்டும் அவன் ஈசனுடைய சான்னித்தியத்திலேயே இருந்து ஈசனை அடையத் தகுந்தவனாகிறான்.

ஈசுவரனைக் கண்டவனே ஞானி. அவன் அப்போது குழந்தையின் சுபாவமுடையவனாகின்றான். குழந்தைக்குத் தனி வியக்தித்வம் ஒன்று இருக்கிறதென்றாலும் அது வாஸ்தவமானதல்ல; வெளித் தோற்றம் மட்டுமே. குழந்தையின் இயல்பு வயது வந்தவனுடையதைப் போன்றதன்று.

19. ப்ரக்ருதிம் புருஷம் சைவ வித்த்யநாதீ உபாவபி 
விகாராந்ஸ்ச குணாந்ஸ்சைவ வித்தி ப்ரக்ருதிஸம்பவாந்  

ப்ரக்ருதிம் புருஷம் ச உபௌ ஏவ-பிரகிருதி, புருஷன் இவ்விரண்டும், அநாதீ வித்தி ச-அநாதி , (ஆரம்பம் இல்லாதது) என்றுணர், விகாராந் ச-வேறுபாடுகளும், குணாந் அபி-குணங்களும், 
ப்ரக்ருதிஸம்பவாந் ஏவ-பிரகிருதியிலேயே பிறப்பன என்று, வித்தி- அறிந்து கொள்.

பொருள் : பிரகிருதி, புருஷன் இவ்விரண்டும் அநாதி என்றுணர். வேறுபாடுகளும் குணங்களும் பிரகிருதியிலேயே பிறப்பன என்றுணர்.

காலதேச வர்த்தமானத்தில் கட்டுப்பட்டதாகத் தென்படும் போது அது பிரகிருதி என்றும், மாயை யென்றும், இயற்கை யென்றும் அழைக்கப்படுகிறது. புத்தி முதல் ஜடப்பொருள் பரியந்தம் வெவ்வேறு வடிவெடுக்கும் தன்மை பிரகிருதியினிடமுண்டு. முக்குணங்களாகப் பரிணமிப்பதும் அதுவே. அது நிர்விகாரியாய் நிர்க்குணமாய்ப் பேரறிவாய்த் தன்மயமாயிருக்கும் போது புருஷன் என்ற பெயர் பெறுகிறது. ஆயினும் பொருள் ஒன்று ஆதலால் இவை இரண்டும் அத்வைதம். உண்டாக்கப்பட்டதல்லவாதலால் அது அனாதி.

ஸமுத்திர ஜலம் சிலவேளை அமைதியாயும், சிலவேளை அலைகள் பொங்கிக் கொந்தளித்தும் இருப்பதுபோல பிரம்மமும் மாயையும் இருக்கின்றன. சலிக்கும் சமுத்திரம் மாயை; சலனமற்ற சமுத்திரம் பிரம்மம்.

20. கார்யகரணகர்த்ருத்வே ஹேது: ப்ரக்ருதிருச்யதே 
புருஷ: ஸுகது:காநாம் போக்த்ருத்வே ஹேதுருச்யதே  

கார்ய கரண கர்த்ருத்வே-கார்யங்களையும் கரணங்களையும் ஆக்கும் விஷயத்தில், ப்ரக்ருதி ஹேது: உச்யதே-பிரகிருதியே காரணம் என்பர், ஸுக து:காநாம் போக்த்ருத்வே-சுக துக்கங்களை அனுபவிப்பதில், புருஷ: ஹேது உச்யதே-புருஷன் (ஜீவாத்மா) காரணம் என்பர்.

பொருள் : கார்ய காரணங்களை ஆக்கும் ஹேது பிரகிருதி என்பர். சுக துக்கங்களை உணரும் ஹேது புருஷனென்பர்.

தந்தையே மைந்தன் ஆகின்றான். மைந்தனுடைய செயல்களில் சில தந்தைக்கு இன்பமூட்டுகின்றன; வேறு சில துன்பமூட்டுகின்றன. புருஷனே பிரகிருதி ஆகின்றான். பிரகிருதியின் வெவ்வேறு விகாரங்களே உடலாகவும், இந்திரியங்களாகவும் பரிணமிக்கின்றன. அவ்விந்திரியங்கள் ஞானேந்திரியங்களாகவும் கர்மேந்திரியங்களாகவும் பாகுபடுகின்றன. ஜீவாத்மாவானது பிரகிருதியோடு மேலும் சம்பந்தப்படுதற்கு இந்திரியங்கள் பயன்படுகின்றன. அத்தகைய சம்பந்தம் இன்ப துன்பமாக வடிவெடுக்கிறது. இங்ஙனம் புருஷன் பிரகிருதியோடு சேர்வதால் புருஷன் பாடம் கற்று வருகிறான். இப்படி ஜீவாத்மாவைப் பக்குவப்படுத்துவதே பிரகிருதியின் தொழில்.

பிரம்ம ஞானப் பிராப்தி. பரமானந்த போகம் முதலியவைகளெல்லாம் மாயையால்தான் நமக்குக் கிடைக்கின்றன. இல்லாவிட்டால் இவையெல்லாம் நமக்கு லபிக்குமெனக் கனவிலும் கண்டவர் எவர்? மாயையிலிருந்துதான் துவைதமும் மற்ற வியவகாரமும் உண்டாகின்றன. மாயைக்கு அப்பால் போகம், போகி என்பவை கிடையா.

ஜீவன் என்னபோக்கில் பாடம் கற்கின்றான் என்பது அடுத்து எழும் வினாவாகின்றது. அதற்கு விடை வருகிறது :

21. புருஷ: ப்ரக்ருதிஸ்தோ ஹி புங்‌க்தே ப்ரக்ருதிஜாந்குணாந் 
காரணம் குணஸங்கோஸ்ய ஸதஸத்யோநிஜந்மஸு  

ப்ரக்ருதிஸ்த: ஹி-பிரகிருதியில் நின்றுகொண்டு, புருஷ:-புருஷன் (ஜீவாத்மா), ப்ரக்ருதிஜாந் குணாந் புங்‌க்தே-பிரகிருதியினிடம் பிறக்கும் குணங்களைத் துய்க்கிறான், குணஸங்க:-குணங்களினிடம் இவனுக்குள்ள பற்றுதலே, அஸ்ய ஸத் அஸத் யோநி ஜந்மஸு-இவன் நல்லனவும் தீயனவுமாகிய ஜென்மங்களில் பிறப்பதற்குக், காரணம்-காரணமாகிறது.

பொருள் : புருஷன் பிரகிருதியில் நின்றுகொண்டு, பிரகிருதியினிடம் பிறக்கும் குணங்களைத் துய்க்கிறான். குணங்களினிடம் இவனுக்குள்ள பற்றுதலே இவன் நல்லனவும் தீயனவுமாகிய ஜென்மங்களில் பிறப்பதற்குக் காரணமாகிறது.

வெயிலில் நிற்பவன் வெயிலை அனுபவிக்கிறான். பனியில் நிற்பவன் பனியை அனுபவிக்கிறான். அங்ஙனம் ஜீவாத்மா பிரகிருதியோடு பொருந்தியிருக்கையில் பிரகிருதியின் தன்மைகளையெல்லாம் தன்னுடையவைகளெனக் கருதி அனுபவிக்கிறான். நான் இன்பம் துய்க்கிறேன், நான் துன்பம் துய்க்கிறேன், நான் மயங்கிப்போனேன், நான் அறிவுடையவனாயிருக்கிறேன்-இவை போன்ற உணர்ச்சிகள் குணத்தோடு பற்று வைப்பதால் வருகின்றன. இனி, பிறப்புக்குக் காரணமாயிருப்பதும் பற்றுதலே. மேலான குணத்தோடு பற்று வைப்பவன் தேவன் போன்ற மேலானவனாகப் பிறக்கின்றான். கீழான குணத்தில் பற்று வைப்பவன் விலங்கு போன்ற கீழானவனாகப் பிறக்கிறான். மேலானதும் கீழானதும் கலந்த குணத்தில் பற்று வைப்பவன் சாதாரண மனிதனாகப் பிறக்கிறான்.

இப்படித் தொடர்ந்து வருகிற ஜனன மரண சம்சாரத்தினின்று விடுதலையடைதற்கு வழியொன்றுமில்லையா? விடை வருகிறது :

22. உபத்ரஷ்டாநுமந்தா ச பர்தா போக்தா மஹேஸ்வர: 
பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹேऽஸ்மிந்புருஷ: பர:  

உபத்ரஷ்டா அநுமந்தா ச-மேற்பார்ப்போன், அனுமதி தருவோன், பர்தா போக்தா மஹேஸ்வர: -சுமப்பான், உண்பான், மகேசுவரன், இதி அஸ்மிந் தேஹே பர புருஷ:-இங்ஙனம் உடம்பிலுள்ள பரமபுருஷன், பரமாத்மா அபி ச உக்த:-பரமாத்மாவென்றே சொல்லப்படுகிறான்.

பொருள் : மேற்பார்ப்போன், அனுமதி தருவோன், சுமப்பான், உண்பான், மகேசுவரன் இங்ஙனம் உடம்பிலுள்ள பரமபுருஷன் பரமாத்மாவென்றே சொல்லப்படுகிறான்.

உடலிலே இத்தனை செயல்கள் நடைபெறுகையில் அக்ஞானத்தில் உழலும் ஜீவனானவன் தன்னை இத்தனைக்கும் கர்த்தாவாக எண்ணுகிறான். அந்த ஜீவ சைதன்யமே பரமாத்மாவின் தோற்றமாகும். உள்ளே இருக்கும் உத்தமன் எத்தகையவன் என்று கேட்குமிடத்து, அவன் :

உபத்ரஷ்டா - அருகிலிருந்து காண்போன் அல்லது சாக்ஷியாக இருக்கிறான். சொக்கட்டான் ஆடுபவர்களை விட அதைப் பார்த்துக்கொண்டிருப்பவனுக்கு யார் எங்கே எக்குற்றம் செய்கிறார்கள் என்பது நன்கு புலப்படுகிறது. மனத்தகத்து சாக்ஷியாயிருக்கும் பரமாத்மா உடலிலும் உள்ளத்திலும் நிகழ்வனவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

அனுமந்தா - அனுமதி அல்லது சம்மதம் கொடுப்பவர். ஒன்றும் தெரியாத அவிவேகி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான். பார்த்ததை நல்லதென்று ஆமோதிக்கவோ, அல்லது கெட்டதென்று நிராகரிக்கவோ அவனுக்குத் தெரியாது. அறிஞனுக்கோ அது சாலும். ஜகத்தின் நடைமுறைக்குப் பரமாத்மா அங்ஙனம் அனுமந்தாவாயிருக்கிறார்.

பர்த்தா - விளையாட்டைப் பார்க்கவும் அனுமதிக்கவும் ஒருவனுக்கு இயலலாம். ஆனால் அதற்கு ஆகிற செலவு கொடுத்து அதை ஆதரிக்க இயலுகிறவன் அதிலும் மிக்கான் ஆகிறான். அவனைப் பர்த்தா என்று சொல்லவேண்டும். தாங்குபவன் என்பது அதன் பொருள். சினிமாத் திரை சினிமாப் படத்தைத் தாங்குவது போன்று பரமாத்மா பிரகிருதியைத் தாங்குகிறார்.

போக்தா - சினிமாத் திரை சினிமாப் படத்தைத் தாங்குகிறது எனினும் அப்படத்தை ரசிக்க அதனால் இயலாது. திரை ஜடப்பொருளாயிருப்பதே அதற்குக் காரணம். மனைவிக்குக் கணவன் பர்த்தா. அதற்குமேல் அவளுடன் கூடின இல்வாழ்க்கைக்கு போக்தாவாக, அதாவது இல்வாழ்க்கையை அனுபவிப்பவனாக அவன் இருக்கிறான். அங்ஙனம் சித் சொரூபியாகிய, ஆனந்த சொரூபியாகிய பரம புருஷன் பிரகிருதிக்கு போக்தாவாக இருக்கிறார்.

மகேச்வரன் - கணவன் மனைவியை ஆதரித்து அவளுடன் கூடிய இல்வாழ்க்கையை அனுபவிக்கலாம். ஆனால் மனைவி அவன் கட்டுப்பாட்டில் அடங்காதவளாயிருக்கலாம். பின்பு, பரம புருஷனோ அரசன் போன்றவர். ராஜாவுக்கு அவனுடைய பிரகிருதிகளெல்லாம் உட்பட்டவைகள். மகேச்வரனது ஆளுகைக்குப் பிரகிருதி அல்லது ஷேத்ரதிரம் முற்றிலும் கட்டுப்பட்டது. அவருடைய ஆணையை மீறுதற்கு அதற்கு இயலாது.

இத்தனை விதங்களில் அவர் இயற்கையோடு தொடர்வு வைத்திருந்தும் அவர் இயற்கையில் கட்டுப்பட்டவரல்லர். ஆகையால் அவர் பரமாத்மன், அதாவது இயற்கைக்கு அப்பாற்பட்டவர். இங்ஙனம் இத்தேகத்தினுள்ளேயே பிரகிருதியின் செயல் ஒன்றிலும் கட்டுப்படாதவராக, ஆனால் அதற்கு ஆதரவும், ஒழுங்குப்பாடும் தருபவராகப் பரம புருஷன் வீற்றிருக்கிறார்.

புருஷ பிரகிருதியின் மூலமாகவே உலகம் உண்டாயிற்று. அது எப்படி யென்று தெரியுமா? வீட்டு எஜமானன் ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டு அதிகாரம் செலுத்துகிறான். வீட்டு எஜமானி இப்பக்கமும் அப்பக்கமும் ஓடி அலைந்து அலுவல்களைக் கவனிக்கிறாள். சுறுசுறுப்பாக வேலைபார்த்து, வீட்டுக்கு வருபவர்களையும் வரவேற்றுக் கவனித்துக்கொள்கிறாள். அடிக்கடி தன் கணவனிடம் சென்று அலுவல்கள் எவ்வாறு நடந்து வருகின்றன வென்பதை அறிவிப்பதோடு ஆலோசனைகளையும் கேட்டு வருகிறாள். தலைவனும் குறிப்பறிந்து தன் சம்மதத்தைத் தலையசைப்பின் மூலமாகத் தெரிவிக்கிறான். பிரகிருதி புருஷன் இவர்களது காரியமும் இப்படித்தான் நடைபெற்று வருகிறது.

பிரகிருதி புருஷனைப்பற்றிய ஞானத்தினின்று வரும் நலன் ஏதாவது உண்டா? விடை வருகிறது :

23. ய ஏவம் வேத்தி புருஷம் ப்ரக்ருதிம் ச குணை: ஸஹ 
ஸர்வதா வர்தமாநோऽபி ந ஸ பூயோऽபிஜாயதே  

ஏவம் புருஷம் ப்ரக்ருதிம் ச-இங்ஙனம் புருஷனையும், பிரகிருதியையும், குணை: ஸஹ-அதன் குணங்களையும், ய: வேத்தி-எவன் அறிகிறானோ, ஸ: ஸர்வதா வர்தமாந: அபி-அவன் எல்லா நெறிகளிலும் இயங்குவானெனினும், பூய: ந அபிஜாயதே-மறு பிறப்பில்லை.

பொருள் : இங்ஙனம் புருஷனையும், பிரகிருதியையும், அதன் குணங்களையு மறிந்தோன் எல்லா நெறிகளிலும் இயங்குவானெனினும், அவனுக்கு மறு பிறப்பில்லை.

கண்ணாடியின் எதிரே தோன்றும் வடிவங்களின் பிம்பத்தை அப்படியே காட்டவல்லது கண்ணாடி. ஆனால் கண்ணாடி அதனால் நலம் கேடு ஒன்றும் அடைவதில்லை. பிரகிருதியின் விகாரங்களால் பிரம்மமும் நலம் கேடு ஒன்றும் அடைவதில்லை. பிரம்மத்தை அறிபவன் பிரம்மாகிறான். பிராரப்த கர்மத்தால் உடலில் ஏற்படும் இன்ப துன்பங்களில் அவன் கட்டுப்படுவதில்லை. கானல் நீர் போன்றுள்ள பிரகிருதியின் தோற்றத்தைப் போற்றிப் பாராட்டுவதால் அவனுக்குப் பிரகிருதியில் பற்று ஒன்றும் உண்டாவதில்லை. ஜகத் என்பது வெறும் தோற்றம் என்று அவன் அதைப் புறக்கணிப்பதால் அவனுக்கு நஷ்டம் வருவதுமில்லை. இவ்வுடலம் இருக்கும்வரை அதில் வாழ்க்கை பிராரப்தத்துக்கு ஏற்றவாறு விதவிதமாய் நடைபெறுகிறது. அதற்கிடையில் ஞானி ஜீவன்முக்தனாய் வாழ்கிறான். உடல் வீழ்ந்த பிறகு அவன் இன்னொரு பிறவி எடுப்பதில்லை. தீயில் வெந்த கயிறு கட்டுதற்கு உதவாது. அங்ஙனம் ஞானாக்கினியில் வெந்த சஞ்சித ஆகாமிய கர்மம் இன்னொரு பிறவியை உண்டுபண்ண மாட்டா.

சூளையில் வேகாத மண்பாண்டம் உடைந்தால் அம்மண்ணை வேறு புதிய பாண்டம் உண்டாக்கக் குயவன் உபயோகிப்பான். ஆனால் சூளையில் வெந்த மண்பாண்டம் உடைந்தாலோ அதன் துண்டுகளை அப்பால் அவன் உபயோகிக்க முடியாது. அதுபோல ஒருவன் அக்ஞானத்துடன் மரணமடைந்தால் மறு ஜன்மம் அடைவான். ஆனால் உண்மை ஞானமாகிய அக்கினியால் வெந்த ஒருவன் பரிபூரணனாக இறப்பானானால் அவனுக்கு மறு ஜன்மம் கிடையாது.

ஞானத்தை அடைதற்கான வழிகள் எவை? விடை வருகிறது :

24. த்யாநேநாத்மநி பஸ்யந்தி கேசிதாத்மாநமாத்மநா 
அந்யே ஸாங்க்யேந யோகேந கர்மயோகேந சாபரே  

கேசித் ஆத்மாநம் ஆத்மநா-சிலர் ஆத்மாவில், ஆத்மாவால், த்யாநேந ஆத்மநி பஸ்யந்தி-தியானத்தின் மூலமாக ஆத்மாவை அறிகிறார்கள், அந்யே ஸாங்க்யேந யோகேந-பிறர் சாங்கிய யோகத்தால் அறிகிறார்கள், அபரே கர்மயோகேந ச-பிறர் கர்ம யோகத்தால் அறிகிறார்கள்.

பொருள் : சிலர் ஆத்மாவில், ஆத்மாவால் ஆத்மாவை அறிகிறார்கள்; பிறர் சாங்கிய யோகத்தால் அறிகிறார்கள்; பிறர் கர்ம யோகத்தால் அறிகிறார்கள்.

ராஜயோகம், ஞானயோகம், கர்மயோகம் ஆகிய மூன்றும் இங்குச் சொல்லப்பட்டுள்ளன. பக்தியோகம் அடுத்த சுலோகத்தில் வருகிறது.

25. அந்யே த்வேவமஜாநந்த: ஸ்ருத்வாந்யேப்ய உபாஸதே 
தேऽபி சாதிதரந்த்யேவ ம்ருத்யும் ஸ்ருதிபராயணா:  

து அந்யே ஏவம் அஜாநந்த:-வேறு சிலர் இவ்வாறு அறியாமல், அந்யேப்ய ஸ்ருத்வா-அந்நியரிடமிருந்து பெற்ற சுருதிகளை, உபாஸதே ச-வழிபடுகிறார்கள், தே ஸ்ருதிபராயணா: அபி-அவர்களும் அந்தச் சுருதிகளின்படி ஒழுகுவாராயின், ம்ருத்யும் அதிதரந்தி ஏவ-மரணத்தை வெல்வார்.

பொருள் : இங்ஙன மறியாத மற்றைப் பிறர் அந்நியரிடமிருந்து பெற்ற சுருதிகளை வழிபடுகிறார்கள். அவர்களும் அந்தச் சுருதிகளின்படி ஒழுகுவாராயின் மரணத்தை வெல்வார்.

பக்தியோகம் மற்ற மூன்று யோகங்களைவிட மிக எளியது. சாஸ்திர ஞானமும் விவேகமும் இதற்கு ஏராளமாய் வேண்டியதில்லை. ஆயர் குலத்து தித்த பெண்களே கல்வியறிவின்றி, நூல் ஆராய்ச்சியின்றி, சுத்த பக்தியால் கண்ணனை அடைந்தார்கள் என்றால் விவேகமும் வைராக்கியமும் உடைய மேலோர்க்கு அது இன்னும் எவ்வளவு எளிதாகாது?

பகவத் பக்தியை ஒரு புலியோடு ஒப்பிடலாம். புலியானது மிருகங்களை விழுங்குவதுபோல், பக்தியானது காமாதிகளான பெரும் பகைவர்களை விழுங்குகிறது. பகவத் பக்தி ஒருதரம் நன்றாக உண்டாகிவிட்டால், காமம் குரோதம் முதலிய கெட்ட பாசங்கள் முற்றிலும் நசிந்துவிடும். பிருந்தாவனத்து கோபஸ்திரீகள் கிருஷ்ணனிடம் வைத்த தீவிரபக்தியால் இப்படிப்பட்ட நிலைமையை அடைந்திருந்தனர்.

கர்மயோகம், ராஜயோகம், பக்தியோகம், ஞானயோகம் ஆகிய நான்கும் ஸ்ரீமத் பகவத்கீதையில் சம அந்தஸ்துப் பெறுகின்றன. ஒன்றைக் குறைபடுத்துதலும் மற்றொன்றை மிகைப்படுத்துதலும் கீதையில் இல்லை. இந்த நான்கு யோகங்களில் ஏதேனும் ஒன்றே போதுமானது. ஏதேனும் ஒரு யோகத்தின் மூலமாக மனிதன் பரிபூரணத் தன்மையடையலாம். பின்பு நான்கு யோகங்களும் சமரசம் அடைதலே சாலச்சிறந்தது. கர்மயோகம் ஆற்றலைத் தருகிறது. ராஜயோகம் மனோவலிவை வளர்க்கிறது. பக்தி அன்பைப் பெருக்குகிறது. ஞானம் அறிவை வளர்க்கிறது. நிறை மனிதனிடத்து இவையாவும் பூரண வளர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

இனி, நான்கு யோகங்களையும் முறையாகக் கையாளுவதால் வரும் நிறை ஞானம் விளக்கப்படுகிறது.

26. யாவத்ஸஞ்ஜாயதே கிஞ்சித்ஸத்த்வம் ஸ்தாவரஜங்கமம் 
ஷேத்ரஷேத்ரஜ்ஞஸம்யோகாத்தத்வித்தி பரதர்ஷப  

பரதர்ஷப:-பரதக்காளையே, யாவத் கிஞ்சித் ஸ்தாவர ஜங்கமம்-எத்தனை எத்தனை ஸ்தாவரமாயினும், ஜங்கமமாயினும், ஸத்த்வம் ஸஞ்ஜாயதே-பிராணிவர்க்கம் உண்டாகின்றதோ, தத் ஷேத்ர ஷேத்ரஜ்ஞ ஸம்யோகாந்-அது ஷேத்ரதிரமும் ஷேத்ரதிரக்ஞனும் சேர்ந்தமையால் பிறந்தது, வித்தி-என்று அறி.

பொருள் : பரதக்காளையே, ஸ்தாவரமாயினும், ஜங்கமமாயினும் ஓருயிர் பிறக்குமாயின் அது ஷேத்ரதிரமும் ஷேத்ரதிரக்ஞனும் சேர்ந்தமையால் பிறந்ததென்றறி.

சினிமாத் திரையும் அதன்மீது படுகிற நிழல் வெளிச்சம் ஆகியவைகளின் சேர்க்கையும் படக் காட்சிக்குக் காரணங்களாகின்றன. அசையாத திரையின் துணையால் அசையும் மனிதன் ஒருவனது தோற்றம் அங்கே தென்படுகிறது. நிறத்தின் அமைப்பு விசேஷத்தால் அவ்விடத்தில் தீப்பற்றி எரிவது போன்று காட்சி உண்டாகிறது. நிழல், நிறம் இவைகளின் தன்மை திரையின் மீது ஏற்றப்படுகிறது. பின்பு திரையின் தன்மையானது நிழல் வெளிச்சம் ஆகியவைகளின் மீது ஏற்றப்படுகிறது. படத்தோற்றத்துக்கு இதுவே காரணம். சித் ஆகாசம் என்கிற திரையின் மீது முக்குண மயமான ஷேத்ரதிரம் அரோபிக்கப்படுகிறது - அதாவது ஏற்றுவிக்கப்படுகிறது. இங்ஙனம் ஷேத்ரதிர ஷேத்ரதிரக்ஞனுடைய சேர்க்கையால் ஜடமாகிய ஷேத்ரதிரம் அறிவுடையதுபோல் தென்படுகிறது. உண்மையில் அறியும் தன்மை ஆத்மாவினுடையது. பிறவாத, இறவாத ஆத்மாவானது பிறந்து இறப்பதுபோன்று தென்படுகிறது. பிறப்பும் இறப்பும் - அதாவது தோன்றுவதும் மறைவதும் ஷேத்ரதிரத்தினுடைய இயல்பு. இது ஆத்மாவினிடத்து நிகழ்கிறது என்ற மித்தியா ஞானம் அக்ஞானிக்கு உண்டாகிறது. தீப்பற்றி எரிகிற சினிமாக் காட்சி தென்பட்டாலும் திரையில் தீப்பற்றிவிடாது என்ற ஞானம் அதன் தத்துவத்தை அறிகிறவர்களுக்குண்டு. உலகம் உண்டாவது, நிலைபெறுவது , மறைவது என்பதெல்லாம் இத்தகையது என்று ஞானி உள்ளபடி அறிகிறான். ஷேத்ரதிர ஷேத்ரதிரக்ஞனைப் பாகுபடுத்தி உள்ளபடி அறிவதே ஞானம்.

நீ வியக்தி ஸ்வரூபனாக இருக்கும் வரையில், அதாவது நீ ஜீவனாய் இருக்கும் வரையில், வெண்ணெய், மோர் என்ற இரண்டையும் அங்கீகரிக்கவேண்டும்; அதாவது ஈசுவரன் ஜகத் என்ற இரண்டையும் அங்கீகரிக்கவேண்டும். உவமையை விளக்கிச் சொல்வோமானால் முதன் முதலில் இருந்த பாலானது ஸமாதி மூலமாய் அறியப்படும் பிரம்மமாகும்; வெண்ணெய் ஈசுவரனாகும்; மோர் இருபத்துநான்கு தத்துவங்களாலான உலகமாகும்.

ஞானம் அடைந்தவன் பரமாத்மாவை எப்படிக் காண்கிறான்? விடை வருகிறது ?

27. ஸமம் ஸர்வேஷு பூதேஷு திஷ்டந்தம் பரமேஸ்வரம் 
விநஸ்யத்ஸ்வவிநஸ்யந்தம் ய: பஸ்யதி ஸ பஸ்யதி  

ய: விநஸ்யத்ஸு ஸர்வேஷு பூதேஷு-எந்த மனிதன் அழியக் கூடிய எல்லா பூதங்களிலும், அவிநஸ்யந்தம் ஸமம் திஷ்டந்தம்-அழியாதவனாகவும் சமமாக நிற்பவனாகவும், பரமேஸ்வரம்-பரமேச்வரனை, பஸ்யதி-பார்க்கிறானோ, ஸ: பஸ்யதி-அவனே காட்சி உடையவன்.

பொருள் : எல்லா பூதங்களிலும் சமமாக நிற்போன் பரசுராமன். அழிவனவற்றில் அவன் அழிவான். அவனைக்காண்போனே காட்சியுடையோன்.

படங்கள் அனைத்துக்கும் சினிமாத் திரை சமமாயிருக்கிறது. படத்தின் அமைப்பில் இதன் இடத்தில் அது இருக்கிறது, இன்ன இடத்தில் இல்லை என்பது கிடையாது. இனி, படங்களெல்லாம் ஓயாது தோன்றி மறைகின்றன. திரையோ மாறுதல் அடையாது நிலைத்திருக்கிறது. சித் ஆகாசம் என்னும் திரையின் மீது ஜகத் என்னும் படம் உண்டாகி அழிந்துகொண்டிருக்கிறது. சினிமா என்னும் படம் உயிரற்ற ஓவியம். ஜகத் என்னும் படமோ உயிர் ஓவியம். ஏனென்றால் அதற்கு ஆதாரமாயுள்ள சித் ஆகாசம் அல்லது பரமாத்மாவிடமிருந்து அது சைதன்யத்தை, அதாவது உணரும் தன்மையைப் பெறுகிறது. ஜகத்து அல்லது ஷேத்ரதிரத்துக்கு உயிர் வழங்குவதால் அது பரமேசுவரன் எனப்படுகிறது. திரையின்றிப் படமில்லை. பரமேசுவரனின்றி உலகம் ஒன்றுமில்லை. அப்பரமேசுவரனையும் அவன் மயமாக உலகத்தையும் காண்பவனே உண்மையைக் காண்பவன் ஆகிறான். மற்றவர்கள் படத்தை மெய்யென நினைக்கும் குழந்தைகள் போன்றவர்களாய் இருக்கின்றனர்.

சூரியன் உலக முழுதிலும் சமனாகப் பிரகாசித்து வெளிச்சம் கொடுக்கிறது. ஆனால் ஒரு சிறுமேகம் அதை நம் கண்ணுக்குத் தெரியாது மறைத்து வைக்கிறது. அங்ஙனம் மாயையாகிய திரை எங்கும் நிறைபொருளை - கடவுளை, நம் கண்ணுக்குத் தெரியாது மறைக்கிறது. மாயையை நீக்கிப் பார்ப்பவருக்கு எல்லாம் சச்சிதானந்த சொரூபமாகத் தோன்றும்.

ஈசுவரக் காட்சி காண்பவனது வாழ்க்கையில் ஏதேனும் மாறுதல் ஏற்படுகிறதா? விடை வருகிறது :

28. ஸமம் பஸ்யந்ஹி ஸர்வத்ர ஸமவஸ்திதமீஸ்வரம் 
ந ஹிநஸ்த்யாத்மநாத்மாநம் ததோ யாதி பராம் கதிம்  

ஹி ஸர்வத்ர ஸமவஸ்திதம் ஈஸ்வரம்-எங்கும் சமமாக ஈசன் நிற்பதை, ஸமம் பஸ்யந் - சமமாகவே பார்த்துக் கொண்டு இருப்பவன், ஆத்மாநம் ஆத்மநா ந ஹிநஸ்தி-தன்னைத்தான் துன்பப்படுத்தி கொள்ளமாட்டான், தத: பராம் கதிம் யாதி-அதனால் பரகதி அடைகிறான்.

பொருள் : எங்கும் சமமாக ஈசன் நிற்பது காண்பான், தன்னைத்தான் துன்பப்படுத்தி கொள்ளமாட்டான். அதனால் பரகதி அடைகிறான்.

மனிதன் செய்கிற எல்லாக் கேடுகளுக்கும் காரணமாயிருப்பது அக்ஞானம். கேடுகளிலெல்லாம் பெரிய கேடு தன்னை ஷேத்ரதிரம் அல்லது பிரகிருதியாக நினைத்துக்கொள்வது. சரீரத்தைத் தான் என்று நினைப்பவன் பல பிறவிகளை எடுக்கிறான். ஒவ்வொரு தடவையும் தன் உடல் கூற்றை அழித்துக்கொண்டு புதிய பிறவியெடுக்கிறான். அழியாத ஆத்மா அக்ஞானத்தால் பலதடவை அழிக்கப்பட்டது போன்று ஆகிறது. மற்ற உயிர்களை மனிதன் தனக்கு வேறானவைகளாக நினைப்பதால் அவைகளுக்குத் தீங்கு செய்கிறான். இது மித்தியா ஞானம் அல்லது மயக்கத்தின் பயனாகும். பிரம்மஞானி பிரம்மத்துக்கு அன்னியமாக எதையும் காண்பதில்லை. அவனுக்கு உலகமெல்லாம் ஒரே பிரம்ம சொரூபமாகக் காட்சி கொடுக்கிறது. அதுவே அவன் அடைகிற பரகதியாம்.

குருவியின் கூண்டு அழிந்துபோனால், அக்குருவி ஆகாயத்தில் பறந்துபோய்விடுகிறது. அதுபோல, சரீர உணர்ச்சியும் உலக உணர்ச்சியும் மனத்தைவிட்டு நீங்கினால் ஜீவாத்மாவானது பரமாத்மாவாகிய ஆகாயத்தில் பறந்து சென்று சமாதிநிலையில் ஐக்கியமாகிறது.

பூவுலகில் நடைபெறுகிற கிருத்தியங்களுக்கும் பிரம்மஞானிக்கும் ஒருவிதமான தொடர்வும் இல்லையா? இக்கேள்விக்கு விடை வருகிறது :

29. ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணாநி ஸர்வஸ: 
ய: பஸ்யதி ததாத்மாநமகர்தாரம் ஸ பஸ்யதி  

ச ய:-மேலும் எவன், ஸர்வஸ: கர்மாணி-எங்கும் தொழில்கள், ப்ரக்ருத்யா ஏவ க்ரியமாணா,நி-இயற்கையாலேயே செய்யப்படுகின்றன, ததா ஆத்மாநம் அகர்தாரம் பஸ்யதி-ஆதலால் தான் கர்த்தா இல்லையென்று காண்பானே, ஸ: பஸ்யதி =காட்சியுடையான்.

பொருள் : எங்கும் தொழில்கள் இயற்கையாலேயே செய்யப்படுகின்றன. ஆதலால்தான் கர்த்தா இல்லையென்று காண்பானே காட்சியுடையான்

சூரியன் இருக்குமிடத்தில் வெளிச்சம் உண்டு. அக்கினி இருக்குமிடத்தில் வெப்பம் உண்டு. அங்ஙனம் பிரம்மத்தின் சன்னிதானத்தில் சக்தி இயங்குகிறது. அதனால் பிரம்மம் ஒரு விகாரமும் அடைவதில்லை. சக்தி அல்லது பிரகிருதியின் கிருத்தியங்கள் வேண்டிவாறு நடைபெறுகின்றன. நிறைஞானியின் பிர கிருதியாகிய உடல், உள்ளம் முதலியன வேண்டியவாறு கர்மம் செய்யலாம். அதனால் ஞானியின் சம்பூரண நிலை சிறிதும் கலைந்து விடுவதில்லை. இவ்வுண்மையைக் காண்பவனே ஞானியாகிறான்.

பரம்பொருளை சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களைச் செய்யாத நிஷ்கிரியர் என்ற கோட்பாட்டில் பிரம்மம் அல்லது புருஷன் என்று சொல்லுகிறேன். ஆனால் அத்தொழில்களைச் செய்தருளுகின்றார் என்ற கோட்பாட்டில் சக்தி, மாயை, பிரகிருதி என்ற பெயர்களுள் ஒன்றால் அழைக்கிறேன்.

ஷேத்ரதிரம் ஷேத்ரதிரக்ஞனுக்கிடையில் உள்ள தொடர்வு அடுத்த சுலோகத்தில் இன்னும் நன்கு விளக்கப்படுகிறது :

30. யதா பூதப்ருதக்பாவமேகஸ்தமநுபஸ்யதி 
தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே ததா  

யதா பூத ப்ருதக் பாவம்-எப்போது பலவகைப்பட்ட பூதங்களின் தன்மை, ஏகஸ்தம்-ஒரே ஆதாரமுடையன, தத: ஏவ விஸ்தாரம் ச-அந்த ஆதாரத்தில் இருந்து (பரமாத்மாவிடம் இருந்து) விரிவடைந்தனவாகவும், அநுபஸ்யதி-காண்கிறானோ, ததா ப்ரஹ்ம ஸம்பத்யதே-அப்போது பிரம்மத்தை அடைகிறான்.

பொருள் : பலவகைப்பட்ட பூதங்கள் ஒரே ஆதாரமுடையன என்பதை அறிவானாயின், அப்போது, அதனின்றும் விஸ்தாரமான பிரம்மத்தை அடைகிறான்.

அலை, திவலை, நுரை முதலிய தனித்தனி வடிவங்களெல்லாம் கடலுக்குப் புறம்பாயில்லை. எல்லாம் கடல் என்ற ஒரு பொருளிலே நிலைத்திருக்கின்றன. மேலும் அவைகளெல்லாம் கடலிருந்தே உண்டானவைகள். கடலே தனது சக்தியால் அத்தனைவித வடிவெடுத்திருக்கிறது. அது போன்று மாயா சக்தியின் வல்லமையால் பல்லுயிர்களாகத் தோன்றியிருப்பவைகளெல்லாம் பரபிரம்மத்திடத்தில் நிலைபெற்றிருக்கின்றன. அந்த மாயா சக்தியே பிரம்மத்துக்கு அன்னியமானதல்ல. யார் ஒருவன் சுவானுபூதியில் இதை அறிகின்றானோ அத்தகைய பிரம்மஞானி பிரம்மமாகிறான்.

இயங்காப் பரபிரம்மமும் இயங்கும் சக்தியும் உண்மையில் ஒன்றேயாம். அகண்ட சச்சிதானந்த ஸ்வரூபி எவனோ அவனே ஸர்வசக்தி, ஸர்வ ஞானம், ஸர்வானந்தம் இவைகளையுடைய ஜகன் மாதாவாகவுமாகிறான். நெருப்பும் அதன் வெப்பமும் ஒன்றானவை. அக்கினியின்றி உஷ்ணத்தையும் உஷ்ணமின்றி அக்கினியையும் மனத்தினால் சிந்திக்க முடியாது. சக்தியும் பிரம்மமும் ஒன்று. சக்தி கர்மம் செய்கிறது. அந்த கர்மம் பிரம்மத்தைச் சார்கிறதா? இதற்கு விடை வருகிறது :

31. அநாதித்வாந்நிர்குணத்வாத்பரமாத்மாயமவ்யய: 
ஸரீரஸ்தோऽபி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே  

கௌந்தேய-குந்தியின் மகனே, அநாதித்வாத்-ஆதியின்மையால், நிர்குணத்வாத் - குணமின்மையால், அயம் பரமாத்மா அவ்யய:-இந்தப் பரமாத்மா கேடற்றான், ஸரீரஸ்த: அபி-இவன் உடம்பிலிருந்தாலும், ந கரோதி-செயலற்றான்; ந லிப்யதே-பற்றற்றான்.

பொருள் : ஆதியின்மையால், குணமின்மையால், இந்தப் பரமாத்மா கேடற்றான். இவன் உடம்பிலிருந்தாலும் செயலற்றான்; பற்றற்றான்.

மாயா காரியங்கள் சிருஷ்டிக்கப்பட்டவைகள் ஆதலால் அவைகளுக்குத் துவக்கமுண்டு. பரபிரம்மம் சிருஷ்டிக்கப்பட்ட தல்ல; எனவே அது ஆதியில்லாதது. மாயா காரியங்கள் குண சம்பந்தப்பட்டவைகள். எதற்குக் குணம் மாறுகிறதோ அது கேடடைகிறது. பரமாத்மா குணமில்லாதது; ஆதலால் அதனிடத்து மாறுதல் ஒன்றுமில்லை. அது கேடு அடைவதில்லை. நிறை பொருள் அசையாதது; ஆகையால் அதனிடத்துக் கர்மம் கிடையாது. அசையாத ஒன்று, கர்மம் செய்யாத ஒன்று எதையும் போய்ப் பற்றுவதில்லை.

பிரம்ம ஞானியினுடைய சரீரத்துக்கு ஏற்படும் அழிவு அவனுக்குரியதன்று. சரீரம் செய்கிற வேலை அவனுடைய தன்று. கடலின் மேற் பரப்பு ஆடுகிறது, அலையாக மோதுகிறது, பற்றுகிறது; அதன் உட்புறம் சலனமற்றுத் தன்மயமாயிருக்கிறது. நிறை ஞானியினுடைய தன்மையும் அத்தகையது.

பிரம்மம் எப்படிப்பட்டது? பிரம்மத்துக்குக் குணங்கள் இல்லை, சலனமில்லை, அது போக்கு வரவற்றது; மகாமேரு பர்வதத்தைப் போல் நிலைத்திருப்பது.

எதுபோன்று பரமாத்மா செயலற்றுப் பற்றற்று இருக்கிறது? அது மேலும் விளக்கப்படுகிறது :

32. யதா ஸர்வகதம் ஸௌக்ஷ்ம்யாதாகாஸம் நோபலிப்யதே 
ஸர்வத்ராவஸ்திதோ தேஹே ததாத்மா நோபலிப்யதே  

யதா ஸர்வகதம் ஆகாஸம்-எங்குமிருந்தாலும் ஆகாசம், ஸௌக்ஷ்ம்யாத் ந உபலிப்யதே-தன் நுண்மையால் பற்றற்று நிற்பதுபோல், ததா தேஹே-அவ்வாறே உடம்பில், ஆத்மா ஸர்வத்ர அவஸ்தித:-ஆத்மா எங்கணுமிருந்தாலும், ந உபலிப்யதே-பற்றுறுவதிலன்.

பொருள் : எங்குமிருந்தாலும் ஆகாசம் தன் நுண்மையால் பற்றற்று நிற்பதுபோல், உடம்பில் ஆத்மா எங்கணுமிருந்தாலும் பற்றுறுவதிலன்.

ஜலமானது உறைந்த பனிக்கட்டியாக, இளகிய நீராக, நுண்ணிய ஆவியாக மூன்று நிலைகளில் இருக்கிறது. நுண்ணிய நிலையில் அதை அழுக்குப்படுத்த முடியாது. பஞ்ச பூதங்களுள் ஆகாசம் மிக நுண்ணியது. ஆகையால் அதை மற்றவைகள் அழுக்காக்குவதில்லை. இனி ஆத்மாவைவிட நுண்ணியது ஒன்றுமில்லை. ஆதலால் அது எதுனாலும் தோய்வுறாதிருக்கிறது. ஆகாசம் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது. பூமி முதலியவைகளில் உள்ள வடிவங்கள் ஆகாசத்தைப் பிளவுபடுத்துவதில்லை. எண்ணிறந்த உடல்களில் பிளவுபடாது நிறைந்துள்ள சிதாகாசம் அல்லது பரமாத்மா எதிலும் பிளவுபடாது, தோய்வுறாது, களங்கமடையாக இருக்கிறது.

ஞானம் அக்ஞானம், நன்மை தீமை, தர்மம் அதர்மம் இப்படிப்பட்ட துவந்தங்களுக்கு அப்பாலும் மேற்பட்டும் பிரம்மம் இருக்கிறது.

இன்னும் அது அத்தகையது?

33. யதா ப்ரகாஸயத்யேக: க்ருத்ஸ்நம் லோகமிமம் ரவி: 
ஷேத்ரம் ஷேத்ரீ ததா க்ருத்ஸ்நம் ப்ரகாஸயதி பாரத  

பாரத-பாரதா, யதா ஏக: ரவி-எப்படி சூரியன் ஒருவனாய், இமம் க்ருத்ஸ்நம் லோகம் - இவ்வுலக முழுவதையும், ப்ரகாஸயதி-ஒளியுறச்செய்கிறானோ, ததா ஷேத்ரீ-அதுபோல் ஷேத்ரதிரத்தை யுடையோன், க்ருத்ஸ்நம் ஷேத்ரம் ப்ரகாஸயதி-ஷேத்ரதிரமுழுதையும் ஒளியுறச் செய்கிறான்.

பொருள் : சூரியன் ஒருவனாய், இவ்வுலக முழுவதையும் எங்ஙனம் ஒளியுறச்செய்கிறானோ, அதுபோல் ஷேத்ரதிரத்தை யுடையோன், ஷேத்ரதிரமுழுதையும் ஒளியுறச் செய்கிறான்.

பூமி முழுதுக்கும் ஒரே சூரியன் வெளிச்சம் கொடுக்கிறான். ஆனால் பூமியிலுள்ள நன்மை கேடுகளால் சூரியன் பாதிக்கப்படுவதில்லை. இங்ஙனம் உலக முழுதுக்கும் ஒரே சூரியன் வெளிச்சம் கொடுப்பதுபோன்று பரமாத்மா அகிலாண்டத்துக்கும், சரம் அசரம் அனைத்துக்கும் சைதன்யத்தை அல்லது அறிவை வழங்குகிறார். அந்தந்த ஜீவனது அறிவில் ஏற்படும் நலம் கேடு முதலியன பரமாத்மாவைப் பந்தப்படுத்துவதில்லை.

பிரம்மம் ஒரு விளக்கின் ஒளிப்பிழம்பைப் போன்றது. விளக்கின் வெளிச்சத்தில் நீ பாகவதத்தைப் படித்தாலும் படிக்கலாம்; அவ்வெளிச்சத்தின் உதவியைக்கொண்டே பிறரைக் கெடுக்க வேண்டி ஒரு பொய்ப் பத்திரத்தை எழுதினாலும் எழுதலாம். எல்லார்க்கும் அறிவு என்னும் வெளிச்சத்தைத் தருவது பிரம்மம். ஆனால் அது நன்மை தீமைகளோடு சம்பந்தப்படுவதில்லை.

முடிவான கருத்து யாதுவெனின்:

34. ஷேத்ரஷேத்ரஜ்ஞயோரேவமந்தரம் ஜ்ஞாநசக்ஷúஷா 
பூதப்ரக்ருதிமோக்ஷம் ச யே விதுர்யாந்தி தே பரம்  

ஏவம் ஷேத்ர ஷேத்ரஜ்ஞயோ:-இவ்வாறு ஷேத்ரதிரத்துக்கும் ஷேத்ரதிரக்ஞனுக்குமுள்ள, 
அந்தரம்-வேற்றுமையையும், பூதப்ரக்ருதிமோக்ஷம் ச-ப்ரக்ருதி, பிரக்ருதியினுடைய செயல்கள் இவற்றிலிருந்து விடுபடுவதையும், யே ஜ்ஞாநசக்ஷúஷா விது-எவர்கள் ஞானக் கண்ணால்
தே பரம் யாந்தி-அவர்கள் பரம்பொருளை அடைகின்றனர்.

பொருள் : ஞானக் கண்ணால் இவ்வாறு ஷேத்ரதிரத்துக்கும் ஷேத்ரதிரக்ஞனுக்குமுள்ள வேற்றுமையை அறிவோர் பூதப் பிரக்ருதியினின்றும் விடுதலை பெற்று பரம்பொருளை அடைகின்றனர்.

நோயையும் நோயாளியையும் நன்கு அறிகின்றவளவு மருத்துவன் நோயை நீக்க வல்லவன் ஆகிறான். இரண்டில் ஒன்றைத் தெரியாது போனாலும் சிகிச்சை சிலாக்கியப்படாது. அங்ஙனம் புருஷன் பிரகிருதி ஆகிய இரண்டையும் உள்ளபடி அறிதல் வேண்டும். எது புருஷன், எது பிரகிருதி என்று பாகுபடுத்துதலும் அவசியமானது. இதற்கெல்லாம் மேலாக ஞானவாழ்க்கையின் வாயிலாக ஞானக்கண்ணைப் பெறுதல் மிக முக்கியமானது. வெறும் சாஸ்திர ஞானம் போதாது. ஞானக்கண் திறக்கப்பெறுமிடத்து ஜீவர்கள் பிரகிருதியில் கட்டுண்டு கிடப்பதெல்லாம் அக்ஞானத்தால் என்பது விளங்கும். அதற்கெல்லாம் மேலாகப் பிரகிருதியானது புருஷனைச் சார்ந்திருக்கிறதென்றும், புருஷன் பிரகிருதியைச் சார்ந்திருப்பதில்லையென்றும், பிரகிருதி புருஷனுக்கு அன்னியமானதல்லவென்றும் சுவானுபூதியில் தோன்றும். அத்தகைய அபரோக்ஷ அனுபூதியைப் பெறுபவன் பிரம்ம ஞானியாகிறான். அவனே முக்தன் ஆகிறான்.

உலகம் மாயை யென்று சொல்லுவது எளிது. ஆனால் அதன் பொருள் இன்னதென்று உனக்குத் தெரியுமா? அது மிகுதி ஒன்றையும் வைக்காத கற்பூரத்தைக் கொளுத்துவது போலாம். சாம்பலை மிகுதியாக்கும் விறகுக் கட்டைகளைக் கொளுத்துவது போன்றதன்று. விசாரணை முடியும் நிலையில், உயர்ந்த சமாதி நிலை கிட்டும். அப்போது நான், நீ, உலகம் என்ற உணர்ச்சி கொஞ்சமேனும் இராது.

இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
ஷேத்ர ஷேத்ரக்ஞ விபாக யோகோ நாம 
த்ரயோதசோத்யாய:

பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷத்தின்கண் ஷேத்ர ஷேத்ரக்ஞ விபாக யோகம் என்ற பதின்மூன்றாம் அத்தியாயம்.


தொடரும்... 


நன்றிவணக்கம் 
ஹரிமணிகண்டன்
 Harimanikandan .V
H/P   :+91 9841267823

                 

ஓம் சிவசிவ ஓம்

                   Kagapujandar - Siva Panjatcharam Mp3
ஓம் சிவயநம‌யநமசிவ‌வயநமசி , நமசிவய‌,சிவயசிவ‌ஓம்

(-)o-o(-)(Be Good & Do Good)(-)o-o(-)

No comments:

Post a Comment