Saturday, November 3, 2012

Tamil Bhagavad Gita Chapter - 09



ஸ்ரீ மத் பகவத்கீதை ஒன்பதாம் அத்தியாயம்

Tamil Srimad Bhagavad Gita Chapter - 9 



ஸ்ரீபகவாநுவாச

1. இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே 
ஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽஸுபாத்  

ஸ்ரீபகவாநுவாச-கடவுள் சொல்லுகிறான், யத் ஜ்ஞாத்வா து-எதை தெரிந்து கொள்வதாலேயே, அஸுபாத் மோக்ஷ்யஸே-தீமையில் இருந்து (துக்கவடிவமான உலகியலில் இருந்து) விடுபடுவாயோ, குஹ்யதமம்-ரகசியமான விஞ்ஞானத்துடன் கூடிய, இதம் ஜ்ஞாநம்-இந்த ஞானத்தை, அநஸூயவே தே-அசூயை யற்றவனாகிய உனக்கு, விஜ்ஞாநஸஹிதம் ப்ரவக்ஷ்யாமி-விஞ்ஞானத்துடன் சொல்லுகிறேன்.

பொருள் : கடவுள் சொல்லுகிறான்: அசூயை யற்றவனாகிய உனக்கு இந்த அதி ரகசியமான ஞானத்தை விஞ்ஞானத்துடன் சொல்லுகிறேன். இதையறிவதால் தீமையிலிருந்து விடுபடுவாய்.

அசுபம் என்பது பிரபஞ்ச வாழ்க்கையிலிருந்து வருகிற கேடு. அக்ஞானமே அசுபம் அனைத்துக்கும் காரணமாகும். வெறும் வாசாஞானமல்லாது சுவானுபவத்தோடு கூடிய ஞானமே கேடுகளையெல்லாம் நீக்கவல்லது.

அசூயை அல்லது பொறாமை என்பது மற்றவர் அடையும் மேன்மையைக்கண்டு சகிக்கமுடியாதிருப்பதாம். ஆனால் மற்றவரை மகிழ்ச்சியோடு மேன்மைப்படுத்துகிற அளவு, மற்றவர் முன்னேற்றத்தில் முயற்சி கொள்ளுமளவு ஒருவன் தானும் மேன்மையடைகிறான். பொறாமையானது மனத்தகத்துப் பெரு நோயாயமைந்து மனிதனது சிறப்பையெல்லாம் அழித்துவிடுகிறது. இம்மையிலும் மறுமையிலும் முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையாயிருப்பது பொறாமை. அர்ஜுனன் பொறாமை யென்னும் நோய்க்கு இடங்கொடாத நல்ல மனமுடையவனாதலால் அவன் ஞான விக்ஞானத்துக்குத் தகுதியுடையவனாகிறான்.

அந்த ஞானத்தின் சிறப்பு வருமாறு :

2. ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரமிதமுத்தமம் 
ப்ரத்யக்ஷõவகமம் தர்ம்யம் ஸுஸுகம் கர்துமவ்யயம்  

இதம்-இது, ராஜவித்யா ராஜகுஹ்யம் பவித்ரம் உத்தமம்-ராஜவித்தை, ராஜ ரகசியம், தூய்மை தருவதில் மிக மாண்புடையது, ப்ரத்யக்ஷõவகமம்-கண்ணெதிரே காண்டற்குரியது, தர்ம்யம்-அறத்துக் கிசைந்தது, ஸுஸுகம் கர்தும்= செய்தற்கு மிக எளிது, அவ்யயம்-அழிவற்றது.

பொருள் : ராஜவித்தை, ராஜ ரகசியம், தூய்மை தருவதில் மிக மாண்புடையது. கண்ணெதிரே காண்டற்குரியது. அறத்துக் கிசைந்தது. செய்தற்கு மிக எளிது. அழிவற்றது.

யோகங்களுள் சிறந்தது ராஜயோகம் என்று பெயர் பெறுகிறது. அங்ஙனம் வித்தைகளுள் பிரம்மவித்தைக்கு ராஜவித்தை என்ற பெயர் வருகிறது. ராஜ மார்க்கத்தில் (பொது வழியில்) எல்லார்க்கும் செல்ல உரிமையிருப்பதுபோன்று பிரம்ம ஞானத்துக்கு ஜீவர்கள் எல்லார்க்கும் உரிமையுண்டு. ஆனால் பொறாமை முதலிய தோஷங்களினின்று மனபரிபாகம் அடையாதவர்களுக்கு இது ராஜ குஹ்யம். அதாவது ராஜ ரகசியம் அல்லது மிக மறைபொருள் ஆய்விடுகிறது. நீரானது உடலைத் தூயதாக்குவது போன்று பிரம்ம ஞானம் மனிதனைத் தூயவனாக்குகிறது. பிரம்ம ஞானி தானே பிரம்மம் ஆகிறபடியால், தூய்மை தருதலில் இது தலைசிறந்தது (உத்தமம் பவித்ரம்) ஆகிறது.

துக்கத்துக்கு ஏதுவான கனவு ஒன்றை ஒரு மனிதன் காண்கிறான். அங்ஙனம் கனவு கண்டுகொண்டிருக்கும் போது, அவனது துக்கத்துக்கு நிவர்த்தி கிடையாது. ஆனால் விழிப்பு என்னும் ஞானம் உதயமானால் கனவில் தோன்றிய துன்பமெல்லாம் முற்றும் அடிபட்டுப் போகிறது. பிரம்ம ஞானம் என்னும் விழிப்பு மனிதனுக்கு உண்டானால் பிறவிப் பெருங்கடலில் அவனுக்கு உண்டாகும் துன்பத்தை யெல்லாம் அது துடைத்துத் தள்ளுகிறது. இந்த ஞானத்துக்கு ஒப்ப மனிதன் வாழ்வானாகில், அவனுடைய செயலெல்லாம் தர்ம மயமாகிறது. நிலத்தில் துள்ளும் மீன் சேற்றினுள்ளும் நீரினுள்ளும் செல்வது எளிதாவது போன்று, தர்மத்தைக் கடைப்பிடித்து ஞானத்தை அடைபவனுக்குத் தன் சொரூபமாகிய பேரானந்தம் கிட்டுகிறது. ஆக, அது (கர்த்தும் ஸுஸுகம்) செய்தற்கு மிக எளியதாகிறது. எளிதில் அகப்பட்டது எளிதில் போய்விடுமோ என்ற ஐயம் வரலாம். ஆனால் மனிதன் அடைந்த பிரம்ம ஞானம் (அவ்யயம்) அழிவற்றது; காலத்தையும் கடந்த பெரு நிலையாம் அது.

ஆனால் யாருக்கு அது கிட்டுவதில்லை எனின் :

3. அஸ்ரத்ததாநா: புருஷா தர்மஸ்யாஸ்ய பரந்தப 
அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத்யுஸம்ஸாரவர்த்மநி  

பரந்தப-பகையைச் சுடுவோய், அஸ்ய தர்மஸ்ய-இந்த அறத்தில், அஸ்ரத்ததாநா: புருஷா-நம்பிக்கையற்ற மனிதர், மாம் அப்ராப்ய-என்னை அடையாமல், ம்ருத்யு ஸம்ஸார வர்த்மநி-நரக சம்சாரப் பாதைகளில், நிவர்தந்தே-மீளுகின்றனர்.

பொருள் : பகையைச் சுடுவோய், இல்லறத்தில் நம்பிக்கையற்ற மனிதர் என்னை எய்தாமே மீட்டும் நரக சம்சாரப் பாதைகளில் மீளுகின்றனர்.

நிலத்திலே துள்ளி வீழ்ந்து வருந்துகின்ற மீனானது அருகில் நீர் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளாவிட்டால், அந்நீருக்குள்ளே அது திரும்பித் துள்ளிக் குதிக்காவிட்டால், அது படும் துயரத்துக்கு முடிவில்லை. மனிதனுக்கு சர்வதுக்க நிவர்த்தி செய்வது பரஞானம். அதற்கு ஏதுவான நெறியைச் சிரத்தையுடன் பின்பற்றுதல் வேண்டும். அப்படிப் பின்பற்றாதவர்கள் பிறவிப் பிணியில் வருந்துவார்கள்.

4. மயா ததமிதம் ஸர்வம் ஜகதவ்யக்தமூர்திநா 
மத்ஸ்தாநி ஸர்வபூதாநி ந சாஹம் தேஷ்வவஸ்தித:  

அவ்யக்தமூர்திநா-அவ்யக்த வடிவாய், மயா-என்னால், இதம் ஸர்வம் ஜகத்-இந்த அனைத்து உலகம் முழுவதும், ததம்-சூழ்ந்திருக்கிறேன், ஸர்வபூதாநி மத்ஸ்தாநி-பூதங்களெல்லாம் என்னிடத்தே நிலைபெற்றன, அஹம் தேஷு அவஸ்தித:-நான் அவற்றில் நிலை பெற்று இருக்கவில்லை.

பொருள் : அவ்யக்த வடிவாய் நான் இவ்வுலக முழுமையும் சூழ்ந்திருக்கிறேன். என்னிடத்தே பூதங்களெல்லாம் நிலைபெற்றன. அவற்றுட்பட்டதன்று என்நிலை.

கடலில் அலைகளெல்லாம் அடங்கப்பெற்றிருப்பது போன்று பிரம்மா முதல் புல் பரியந்தம் உள்ள பூதங்களெல்லாம் பரமாத்மாவில் அடங்கியிருக்கின்றன. பாத்திரத்தில் நீர் இருப்பது போன்று பரமாத்மா உயிர்களிடத்து அடங்கப்பெறாதவர். ஆகாசம் போன்று அனைத்திடத்தும் ஊடுருவி அவர் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறார்.

5. ந ச மத்ஸ்தாநி பூதாநி பஸ்ய மே யோகமைஸ்வரம் 
பூதப்ருந்ந ச பூதஸ்தோ மமாத்மா பூதபாவந:  

பூதாநி ந மத்ஸ்தாநி ச-பூதங்கள் என்னுள் நிலை பெறுவன அல்ல, மே ஐஸ்வரம் யோகம் பஸ்ய-இந்த ஈஸ்வரத் தன்மையுடைய யோக சக்தியை பார், பூதப்ருத் ச-பூதங்களைத் தாங்குபவனும், பூதபாவந: ச-பூதங்களை உண்டாக்குகிறவனாக இருந்த போதிலும், மம ஆத்மா-என் ஆத்மா, பூதஸ்த: ந-உயிரினங்களில் நிலை பெற்று இருப்பதில்லை.

பொருள் : (மற்றொரு வகையால் நோக்குமிடத்தே) பூதங்கள் என்றும் நிற்பனவுமல்ல, என் ஈசுவர யோகத்தின் பெருமையை இங்குப் பார், பூதங்களைத் தரிக்கிறேன். அவற்றுட்பட்டேனல்லேன். என் ஆத்மாவில் பூத சிந்தனை இயல்கிறது. அத்தியாயம் ஏழு, சுலோகம் பன்னிரண்டுக்குத் தந்துள்ள விளக்கத்தைப் பார்க்கவும்.

பிரம்மம் அசங்கனாதலால் ஒன்றிலும் பற்றுவைப்பதில்லை.

6. யதாகாஸஸ்திதோ நித்யம் வாயு: ஸர்வத்ரகோ மஹாந் 
ததா ஸர்வாணி பூதாநி மத்ஸ்தாநீத்யுபதாரய  

ஸர்வத்ரக: மஹாந் வாயு:-எங்கும் செல்கின்ற, பெருங்காற்று, யதா நித்யம் ஆகாஸஸ்தித:-எப்படி எப்போதும் வானில் நிலை பெற்றிருக்கிறானோ, ததா ஸர்வாணி பூதாநி-அவ்வாறே எல்லா பொருட்களும், மத்ஸ்தாநீ இதி உபதாரய-நிலைபெற்றனவென்று தெரிந்துகொள்.

பொருள் : எங்கும் இயல்வானும் பெரியானுமாகிய காற்று, எப்படி எப்போதும் வானில் நிலை பெற்றிருக்கிறானோ, அப்படியே பொருள்களெல்லாம் என்னுள் நிலைபெற்றனவென்று தெரிந்துகொள்.

வாயு முதலிய நான்கு பூதங்கள் ஆகாசத்தில் நிலைத்திருந்தாலும் அதில் அவைகள் ஒட்டுவதும் இல்லை, ஒரு மாறுதலையாவது உண்டுபண்ணுவதும் இல்லை. அங்ஙனம் பிரம்மத்தின் மாயாகாரியங்களெல்லாம் பிரம்மத்தில் நிலைத்திருந்தும் அதன் கண் ஒரு விகாரத்தையும் உண்டு பண்ணுவதில்லை. ஆகாச தத்துவத்தைத் தெரிந்துகொள்ளுதல் பிரம்ம தத்துவத்தைத் தெரிந்துகொள்ளப் பெரிதும் பயன்படுகிறது.

காற்று நல்ல வாசனையையும் கெட்ட வாசனையையும் கொண்டு வீசுமாயினும் அவைகளால் விகாரப்படுவதில்லை. பரம்பொருளும் அந்தக் காற்றைப் போன்றது.

7. ஸர்வபூதாநி கௌந்தேய ப்ரக்ருதிம் யாந்தி மாமிகாம் 
கல்பக்ஷயே புநஸ்தாநி கல்பாதௌ விஸ்ருஜாம்யஹம்  

கௌந்தேய-குந்தி மகனே, கல்பக்ஷயே ஸர்வபூதாநி-கல்ப முடிவில் எல்லா உயிர்களும், மாமிகாம் ப்ரக்ருதிம் யாந்தி-என் இயல்பை எய்துகின்றன, கல்பாதௌ தாநி புந:-மறுபடி கல்பத்தின் துவக்கத்தில் அவற்றை மீண்டும், அஹம் விஸ்ருஜாமி-நான் படைக்கிறேன்.

பொருள் : குந்தி மகனே, கர்ப்ப நாசத்தால் எல்லா உயிர்களும் என் இயல்பை எய்துகின்றன. மறுபடி கர்ப்பத் தொடக்கத்தில் நான் அவற்றைப் படைக்கிறேன்.

பிரம்மாவுக்கு இரவு வரும்பொழுது பிரளயம் அல்லது கற்பத்தின் முடிவு ஏற்படுகிறது. அவருக்குப் பகல் ஆரம்பிக்கும் பொழுது சிருஷ்டி அல்லது கற்பத் துவக்கம் ஏற்படுகிறது. பிரகிருதி என்பது முக்குண மயமான அபர பிரகிருதியாம்.

8. ப்ரக்ருதிம் ஸ்வாமவஷ்டப்ய விஸ்ருஜாமி புந: புந: 
பூதக்ராமமிமம் க்ருத்ஸ்நமவஸம் ப்ரக்ருதேர்வஸாத்  

ப்ரக்ருதே: வஸாத்-இயற்கையின் வசத்தால், அவஸம் இமம் க்ருத்ஸ்நம் பூதக்ராமம்-தன் வசமிழந்த இந்த அனைத்து உயிர் தொகுதிகளையும், புந: புந:-திரும்ப திரும்ப, ஸ்வாம் ப்ரக்ருதிம் அவஷ்டப்ய- என்னுடைய இயற்கையின் வசத்தால் ஏற்றுக் கொண்டு, விஸ்ருஜாமி-படைக்கிறேன்.

பொருள் : என் சக்தியில் உறுதிகொண்டு மீண்டும் மீண்டும் பூதத் தொகுதி முழுவதையும் என் வசமின்றி, சக்தி, அதாவது இயற்கையின் வசத்தால் நான் படைக்கிறேன்.

அஷ்டப்ய என்பது உயிர் ஓங்கச் செய்து அல்லது அருளுடையதாகச் செய்து என்று பொருள்படுகிறது. பூமியைச் சாரமுடையதாகச் செய்கிறான் கிருஷிகன். தூங்கினவன் விழித்தெழுந்து, தன் உடலில் ஒவ்வொரு உறுப்பையும் முறுக்கி உறுதியாக்குகிறான். மாணாக்கனது உள்ளத்தினின்று கல்வி கிளம்பும்படி ஆசிரியன் துணைபுரிகின்றான். இச் செயல்கள் யாவும் அவஷ்டம்பனம் என்னும் சொல்லுக்குப் பொருளாகின்றன. இங்ஙனம் ஈசுவரனுடைய முன்னிலையில் பிரகிருதியாகிய தாய்க்கு வல்லமை அல்லது அருள் சுரக்கிறது. அவ் அருளைக்கொண்டு அவள் உலகனைத்தையும் இயக்குகின்றான். அது ஈசன் செயல் எனப்படுகின்றது. ஆனால் அதைப்பற்றிய உண்மை என்னவெனில் :

9. ந ச மாம் தாநி கர்மாணி நிபத்நந்தி தநஞ்ஜய 
உதாஸீநவதாஸீநமஸக்தம் தேஷு கர்மஸு  

தநஞ்ஜய-தனஞ்ஜயா! தேஷு கர்மஸு-அந்த தொழில்களில் (கர்மங்களில்), அஸக்தம்-பற்றில்லாமலும், தாநி கர்மாணி-அந்த செயல்கள், உதாஸீநவத் ஆஸீநம் ச-(ஒதுங்கி) மேற்பட்டவன் போல் இருக்கின்ற, மாம் ந நிபத்நந்தி-என்னை கட்டுப் படுத்துவதில்லை.

பொருள் : தனஞ்ஜயா, என்னை அத்தொழில்கள் தளையுறுத்தா. அவ்வினைகளிடையே நான் மேற்பட்டவன் போல் அமர்ந்திருக்கிறேன்.

ஜகத் சிருஷ்டியில் நானாவகைக் கர்மங்களும் அடங்கியிருக்கின்றன. அவைகளில் பற்றுவிட்டவரே உதாஸீனர் ஆகின்றார். ஈசுவரன் அந்நிலையில் நிலைத்திருப்பதால் அவருடைய பிரகிருதி செய்யும் இத்தனைவிதக் கர்மங்களும் அவரைக் கட்டுப்படுத்துவதில்லை.

தான் கர்த்தாவென்று ஈசுவரன் அஹங்கரிக்காதிருப்பது போன்று, சாதகன் புரியும் வெவ்வேறு கர்மங்களுக்கிடையே தான் கர்த்தாவென்ற உணர்ச்சி நீங்கப்பெற்று நடுநிலையில் இருப்பானாகில் இருள் சேர் இருவினையும் அவனை வந்து சாரா.

நான் என்பது இறந்தால் துன்பமெல்லாம் தொலையும். ஈசுவர கிருபையால் என் செயலாலாவது யாதொன்றுமில்லை என்னும் கொள்கை மனதில் ஸ்திரமாக நிலைக்குமானால், மனிதனுக்கு இந்த ஜன்மத்திலேயே முக்தியுண்டாகும்.

10. மயாத்ய÷க்ஷண ப்ரக்ருதி: ஸூயதே ஸசராசரம் 
ஹேதுநாநேந கௌந்தேய ஜகத்விபரிவர்ததே  

கௌந்தேய-குந்தி மகனே,அத்ய÷க்ஷண மயா-தலைவனான என்னால் (என் மேற்பார்வையில்), ப்ரக்ருதி: ஸசராசரம்-ப்ரக்ருதியானது அசைவன, அசையாதன எல்லாம், ஸூயதே-தோற்றுவிக்கிறது. அநேந ஹேதுநா-இந்த காரணத்தால், ஜகத் விபரிவர்ததே-உலகமே சுழல்கிறது.

பொருள் : என் மேற்பார்வையில் சக்தி சராசர உலகங்களைப் பெறுகிறாள். குந்தி மகனே, இந்த ஏதுவால் உலகமே சுழல்கிறது.

7 முதல் 10 வரை நான்கு சுலோகங்களில் உலக நடைமுறைக்கும் தமக்கும் உள்ள தொடர்வு எத்தகையது என்பதை பகவான் நன்கு விளக்குகிறார். அதற்கு அருந்ததி நியாயம் கையாளப்படுகிறது. அதாவது ஒரு மரம், அதில் ஒரு கிளை, அதற்குப் பின் வானத்தில் ஒரு பெரிய மீன், அதற்குப் பக்கத்தில் உள்ள சிறு மீன்கள், அவைகளுக்கிடையில் நுண்ணியதாகத் தென்படுவது அருந்ததி நக்ஷத்திரம். இங்ஙனம் தெரிந்த பருப்பொருளிலிருந்து தெரியாத நுண்பொருளுக்குப் போதல் அருந்ததி நியாயமாகும். 7-வது சுலோகத்தில் நான் சிருஷ்டிக்கிறேன் என்கிறார்; 8-வது சுலோகத்தில் பிரகிருதியைக்கொண்டு அக் காரியத்தைச் செய்வதாகச் சொல்லுகிறார்; 9-வது சுலோகத்தில் நடுவுநிலை வகிக்கின்ற தம்மைப் பிரகிருதியின் அச்செயல் தளைப்பதில்லை என்கிறார்; 10-வது சுலோகத்தில் தாம் சாக்ஷியாய் வீற்றிருந்து கண்காணிக்கையில், தமது சன்னிதான விசேஷத்தால் பிரகிருதிக்கு ஜகத் காரியங்களைச் செய்யும் வல்லமை வந்தமைகிறது என்கிறார். சூரியனுடைய முன்னிலையில் சூரிய கிரணங்களால் பொருள்கள் பரிணமிப்பது போன்று, ஈசுவரனுடைய முன்னிலையில் அவனுடைய மாயா சக்தியால் உலகனைத்தும் உரு எடுப்பனவாகின்றன.

அத்யக்ஷன் என்பது சபாபதி அல்லது கண்காணிப்பவன் என்று பொருள்படுகிறது. உலக நடைமுறைக்கு இறைவன் சபாபதியாகின்றான். அரசன் சிங்காசனத்தில் வீற்றிருக்கையில் சிப்பந்திகள் தம் தொழில்களைப் புரிவது போன்று, பரமாத்மாவின் முன்னிலையில் பிரகிருதியானது அண்டங்களை இயக்கவல்ல உயிரையும் அருளையும் பெற்றுத் தொழில் புரிகிறது.

11. அவஜாநந்தி மாம் மூடா மாநுஷீம் தநுமாஸ்ரிதம் 
பரம் பாவமஜாநந்தோ மம பூதமஹேஸ்வரம்  

மம பரம் பாவம்-என்னுடைய மேலான இயல்பை, அஜாநந்த: மூடா-அறியாதவர்களான மூடர்கள், மாநுஷீம் தநும்-மனித உடலை, ஆஸ்ரிதம் பூதமஹேஸ்வரம்-தாங்கிக் கொண்டிருக்கும் உயிரினங்களுக்கு தலைவனான, மாம் அவஜாநந்தி-என்னை புறக்கணிக்கிறார்கள்.

பொருள் : மனித சரீரந் தரித்த என்னை மூடர் புறக்கணிக்கிறார்கள். உயிர்களுக்கெல்லாம் உயர் தலைவன் நான் என்ற என் பரமநிலையை அவர்கள் அறிகிலர்.

கர்மத்தில் கட்டுப்படாதவன் வடிவத்திலும் கட்டுப்படுவதில்லை. ஜடாகாசத்தை எப்பொருளும் சிதைப்பதில்லை. பின்பு, அதற்கப்பாலுள்ள சிதாகாசம் சிதைவுபடுகிறது என்பது பொருந்தாது. அது நித்ய-சுத்த-புத்த-முக்த-ஸ்வபாவமுடையது. எல்லார்க்கும் பொதுவாக அந்தர்யாமியாயிருக்கின்ற பரமாத்மா உடலில் எங்ஙனம் வாழவேண்டும் என்பதை மக்களுக்குக் காட்டுதற் பொருட்டே ஓர் அவதார புருஷராக தேகத்தைத் தரிக்கிறார். இதை அறியாதவர் அவரை அவமதிக்கின்றனர்.

யானைக்கு வெளியே தோன்றும் தந்தமும் உள்ளே இருக்கும் பற்களுமாக இரண்டுவகைப் பற்களிருக்கின்றன. அவ்வாறு ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா போன்ற அவதார புருஷர்கள் சாதாரணமான வெளித்தோற்றம் உள்ளவர்களாய், எல்லாருடைய பார்வைக்கும் மனுஷ்ய ரீதியை உடையவர்களாகப் புலப்படுகின்றனர். ஆயினும் அவர்கள் கர்மவசத்துக்கு வெகுதூரம் அப்பாற்பட்டவர்களாகிப் பரமசாந்தியில் நிலைத்திருக்கின்றனர்.

அவதார புருஷர்களை அவமதிக்கின்றவர்களது இயல்பு எத்தகையது எனின்:

12. மோகாஸா மோககர்மாணோ மோகஜ்ஞாநா விசேதஸ: 
ராக்ஷஸீமாஸுரீம் சைவ ப்ரக்ருதிம் மோஹிநீம் ஸ்ரிதா:  

மோகாஸா:-வீணாசையுடையோர், மோககர்மாண:-வீண் செயலாளர், மோகஜ்ஞாநா - வீணறிவாளர், விசேதஸ:-மதியற்றோர், ராக்ஷஸீம் ஆஸுரீம் மோஹிநீம் ச-மயக்கத்துக்கு இடமான ராக்ஷத அசுர மோகினி சக்திகளின், ப்ரக்ருதிம் ஏவ ஸ்ரிதா:-இயல்பையே சார்ந்து நிற்கின்றனர்.

பொருள் : வீணாசையுடையோர், வீண் செயலாளர், வீணறிவாளர், மதியற்றோர், மயக்கத்துக்கு இடமான ராக்ஷத அசுர மோகினி சக்திகளைச் சார்ந்து நிற்கின்றனர். (ராக்ஷத, அசுர, மோகினி சக்திகளாவன – அவா, குரூரம், மயக்கம் என்ற சித்த இயல்புகள்).

பொய்யுடலை மெய்யென்று நம்பி, அதன் மூலம் போகம் துய்த்தலே குறிக்கோள் என்ற மயக்கம் மோஹம் ஆகிறது. பின்பு, அதன் பொருட்டுக்கொள்ளும் ஆசையும், செய்யும் வினையும், வளர்க்கும் அறிவும், கையாளும் யுக்தியும் ஆத்ம லாபத்துக்கு உதவாதவைகளாய் வீணாகின்றன. இத்தகைய கீழான இயல்புடையவர்களுள் ரஜோ குணத்தோடு கூடியவர் ராக்ஷசர்; தமோ குணத்தோடு கூடியவர் அசுரர் ஆவர்.

மற்று, பக்திமான்களுடைய போக்கு பின் வருமாறு:

13. மஹாத்மாநஸ்து மாம் பார்த தைவீம் ப்ரக்ருதிமாஸ்ரிதா: 
பஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூதாதிமவ்யயம்  

து பார்த-ஆனால் பார்த்தா, தைவீம் ப்ரக்ருதிம் ஆஸ்ரிதா:-தெய்விக இயல்பைக் கைகொண்ட, 
மஹாத்மாந:-மகாத்மாக்கள், மாம் பூதாதிம் அவ்யயம் ஜ்ஞாத்வா-என்னை எல்லா உயிர்களுக்கும் முதல் என்றும், அழிவற்றவன் என்றும் அறிந்து, அநந்யமநஸ:-வேறு எதிலும் நாட்டமில்லாத மனதுடன், பஜந்தி-வழிபடுகிறார்கள்.

பொருள் : பார்த்தா, மகாத்மாக்கள் தெய்விக இயல்பைக் கைகொண்டு பூத முதலும் கேடற்றவனுமாகிய என்னை வேறு மனம் இன்றி வழிபடுகிறார்கள்.

தெய்விக இயல்பு சத்துவ குணத்தினின்று வருகிறது. ஜீவர்களெல்லாம் பகவானிடத்திருந்து தோன்றியவர்கள். இப்பேருண்மையை உணர்ந்து திரும்பி அவனைச் சென்று அடைய விரும்புபவர்கள் மகாத்மாக்கள் ஆகின்றனர். கரணங்களை அடக்குதல், அவனுடைய உயிர்களிடத்து அன்பாயிருத்தல், அவனை அடைதற்கு சிரத்தை காட்டுதல் முதலிய நல்லியல்புகள் அத்தகைய மேலோர்க்கு எளிதில் வந்து அமைகின்றன.

மேலோர் எப்படி யெல்லாம் வழிபடுகின்றனர் என்னும் வினா எழுமிடத்து :

14. ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஸ்ச த்ருடவ்ரதா: 
நமஸ்யந்தஸ்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாஸதே  

த்ருடவ்ரதா:-திடவிரதத்துடன், ஸததம் கீர்தயந்த: ச-இடைவிடாது நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டும், யதந்த: ச-முயற்சி புரிவோராகவும், நமஸ்யந்த: ச-என்னைப் பக்தியால் வணங்குவோராய், நித்யயுக்தா: பக்த்யா உபாஸதே-நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்.

பொருள் : திடவிரதத்துடன் முயற்சி புரிவோராய், எப்போதும் என்னைப் புகழ்வோராய், என்னைப் பக்தியால் வணங்குவோராய் நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்.

மனது எதைப் புகழ்கிறதோ அதன் மயமாகிறது; எத்துறையில் முயல்கிறதோ அத்துறையில் மேன்மையடைகிறது; எதை விரும்பி வணங்குகிறதோ அதன் இயல்பை அடைகிறது. இத்தனை விதங்களில் பக்தர் தமது மனதை பகவானிடம் செலுத்துகிறபடியால் அவர்கள் நித்தியயோகிகள் ஆகிறார்கள். பகவானுக்கு அருகில் வீற்றிருப்பவரும் ஆகின்றார்கள்.

15. ஜ்ஞாநயஜ்ஞேந சாப்யந்யே யஜந்தோ மாமுபாஸதே 
ஏகத்வேந ப்ருதக்த்வேந பஹுதா விஸ்வதோமுகம்  

அந்யே மாம் ஜ்ஞாநயஜ்ஞேந ஏகத்வேந-வேறு சிலர் ஞான வேள்வியால் ஒன்றிய பாவனையுடன், யஜந்த: அபி-வழிபட்டுக் கொண்டும், ச பஹுதா விஸ்வதோமுகம்-மற்றும் சிலர் விராட்ஸ்வரூபத்துடன் ஈஸ்வரனாக என்னை, ப்ருதக்த்வேந உபாஸதே-தன்னிலும் வேறாக எண்ணி உபாசிக்கிறார்கள்.

பொருள் : வேறு சிலர் ஞான வேள்வியால் வேட்போராய் என்னை ஒருமையாகவும் பன்மையாகவும் பலவாறாக எல்லாவிடத்தும் வழிபடுகிறார்கள்.

(ஞானயக்ஞேன)- பரம்பொருளை உள்ளபடி அறிகிறவர்கள் தங்களைப் பரம்பொருளுக்குக் கொடுத்துவிடுகிறார்கள். ஆகையால் அது ஞான யக்ஞமாகின்றது.

(ஏகத்வேன)- ஒன்றாய் என்னும் அத்வைத பாவனை, பரமாத்மா ஒன்றுதான் உள்ளது என்ற எண்ணம்.

(ப்ருதக்த்வேன)- வேறாய் இருக்கும் துவைத பாவனை. ஆண்டவன் அடிமைக்குப் புறம்பானவன் என்ற எண்ணம்.

(விச்வதோமுகம்)- பலவாய் உள்ள எல்லா அங்கங்களும் ஒரு புருஷனைச் சார்ந்தவைகள். இது விசிஷ்டாத்வைத பாவனை. ஒருவனே இத்தனையும் ஆனான் என்ற எண்ணம் இப்பாவனையில் உண்டு. ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள இணக்கத்தை துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் ஆகிய மூன்று நிலைகளில் எதில் வைத்துச் சாதனம் செய்தாலும் அது ஞான யக்ஞம் ஆகிறது.

இத்தனைவித உபாசனைகள் எப்படி ஒரே பொருளைச் சார்வதாகும் என்ற ஐயம் எழுகிறது. அதற்கு இறைவன் விடையளிக்கிறார்:

16. அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ: ஸ்வதாஹமஹமௌஷதம் 
மந்த்ரோऽஹமஹமேவாஜ்யமஹமக்நிரஹம் ஹுதம்  

அஹம் க்ரது:-நான் ஹோமம், அஹம் யஜ்ஞ:-நான் யாகம், அஹம் ஸ்வதா-நான் ஸ்வதா என்ற வாழ்த்துரை, அஹம் ஒளஷதம்-நான் மருந்து, அஹம் மந்த்ர:-நானே மந்திரம், அஹம் ஆஜ்யம்-நானே நெய், அஹம் அக்நி-நானே தீ, அஹம் ஹுதம்-நான் அவி, அஹம் ஏவ-நானே தான்!

நான் ஓமம்; நான் யாகம்; நான் ஸ்வதா என்ற வாழ்த்துரை; நான் மருந்து; மந்திரம்; நான் நெய்; நான் தீ; நான் அவி.

கிரது என்பது வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள ஒருவகைக் கர்மத்தின் பெயர். யக்ஞமாவது ஸ்மிருதியில் விதிக்கப்பட்டுள்ள கர்மம். பித்ருக்களுக்குப் படைக்கப்படும் உணவுக்கு ஸ்வதா என்று பெயர். எது மருந்தாகவும் உணவாகவும் பயன்படுகிறதோ அது ஒளஷதம். என்ன எண்ணத்துடன் கொடுக்கப்படுகிறதோ அவ்வெண்ணமே மந்திரம். ஹோமத்தில் சொரியப்படும் நெய்க்கு ஆஜ்யம் என்று பெயர். இங்கு ஹோமாக் கினியே அக்னி என்று குறிப்பிடப்படுகிறது. வேள்வி வேட்டல் என்னும் வினையானது ஹுதம் என்று சொல்லப்படுகிறது.

நான்காவது அத்தியாயம் இருபத்து நான்காவது சுலோகத்தில் செய்கிற வினை யெல்லாவற்றையும் பிரம்ம சொரூபமாகக் கருதுபவனை வினை தளைப்பதில்லையென்பது சொல்லப்பட்டது. இங்கு பொருள்களெல்லாம் பாரமார்த்திக திருஷ்டியில் பிரம்ம சொரூபம் ஆகின்றனவென்பது சொல்லப்படுகிறது. பொருள்களையெல்லாம் அவன் சொரூபமாகக் காண்பது பாரமார்த்திக திருஷ்டியைப் பெறுவதற்கு உபாயமாகிறது.

17. பிதாஹமஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ: 
வேத்யம் பவித்ரமோங்கார ருக்ஸாம யஜுரேவ ச  

அஸ்ய ஜகத: தாதா-இந்த உலகம் அனைத்தையும் தாங்குபவனும், பிதா மாதா பிதாமஹ: -தந்தை, தாய், பாட்டனாரும், வேத்யம் பவித்ரம்-அறியத் தக்கவனும், புனிதமானவனும், ஓங்கார:-ஓங்காரமும், ருக் ஸாம யஜு: ச-ரிக்; ஸாம; யஜுர் என்ற வேதங்களும், அஹம் ஏவ-நானே தான்.

பொருள் : இந்த உலகத்தின் அப்பன் நான்; இதன் அம்மா நான்; இதைத் தரிப்போன் நான்; இதன் பாட்டன் நான்; இதன் அறியப்படு பொருள் நான்; தூய்மை செய்வது நான்; ஓங்காரம் நான்; நான் ரிக்; நான் ஸாமம்; நான் யஜுர்.

உலகனைத்துக்கும் ஈசுவரன் முதற் காரணமாயிருப்பதால் அவன் தந்தை, தாய், பாட்டனார் ஆகின்றான். அவரவர் செய்கின்ற வினைக் கேற்றவாறு கர்ம பலனைக் கொடுப்பவன் தாதா. யாரை அறிந்தால் வாழ்க்கையின் மர்மம் முழுதும் விளங்குகிறதோ அவன் அறியத்தக்கவன், ஈசுவரன்.

தம்மை வந்து சாரும் பொருள்களைத் தூயதாக்கும் இயல்பு மண், நீர், தீ, காற்று முதலியவைகளுக்கு உண்டு. அங்ஙனம் பூதங்களால் புனிதமடைந்த பொருள்கள் திரும்பவும் மலினமடையக்கூடும். பகவானை அணுக அணுக உயிர்கள் பெருநிலையைப் பெறுகின்றன. அந்த அளவில் அவைகள் புனிதப்படுகின்றன. இக்காரணத்தை முன்னிட்டே பக்தர்களுக்கு பகவானுடைய நாமம் குலம் தரும் என்று கருதப்படுகிறது. பகவானை அடைவதால் வரும் புனிதம் என்றும் மாறாதது.

அதர்வண வேதம் மிகப் பிற்காலத்தில் உண்டானதால் அது ஈண்டு பகரப்படவில்லை. இயற்கையினுடைய தோற்றம், இருப்பு, ஒடுக்கம் ஆகியவைகளை ரிக், சாமம், யஜுர் ஆகிய வேதங்கள் விளக்குகின்றன. இந்த வேதங்களே சப்தல் அல்லது ஓசையின் துணையைக்கொண்டு தோன்றியவைகள். ஓசை யனைத்தும் ஓங்காரத்தில் அடங்கியிருக்கின்றன. ஓம் என்பது எல்லா மந்திரங்களுக்கும் மூலமந்திரமாகும். அது அ-உ-ம் ஆகிய மூன்று ஓசைகளின் வடிவம் கொண்டது. அது என்னும் எழுத்து தோற்றத்தையும் உ என்பது இருப்பையும் ம் ஒடுக்கத்தையும் குறிக்கின்றன.

பகவான், பாகவதம், பக்தர்கள் இறைவரது ஒன்றேயாம்.

18. கதிர்பர்தா ப்ரபு: ஸாக்ஷீ நிவாஸ: ஸரணம் ஸுஹ்ருத் 
ப்ரபவ: ப்ரலய: ஸ்தாநம் நிதாநம் பீஜமவ்யயம்  

கதி:-அடையத் தக்க பரம பதம், பர்தா-காப்பவன், ப்ரபு:-ஆள்பவன், ஸாக்ஷீ-நல்லன – தீயனவற்றைப் சாட்சியாக இருந்து பார்ப்பவன், நிவாஸ:-உறைவிடம், ஸரணம்-சரண் புகலிடம்
ஸுஹ்ருத்-தோழன், ப்ரபவ: ப்ரலய:-தொடக்கமும் அழிவும், ஸ்தாநம் நிதாநம்-நிலையாகத் தாங்குமிடமும், நிதானமும், அவ்யயம் பீஜம்-அழியாத விதை.

பொருள் : இவ்வுலகத்தின் புகல், இதனிறைவன், இதன் கரி, இதனுறையுள், இதன் சரண், இதன் தோழன், இதன் தொடக்கம், இதன் அழிவு, இதன் இடம், இதன் நிலை, இதன் அழியாத விதை.

செய்த கர்மத்துக்கு ஏற்றவாறு அடையுமிடம் அல்லது புகலிடம் கதி எனப்படுகிறது. கர்மம் ஓய்ந்தவிடத்து பகவானைத் தவிர புகலிடம் பிறிதொன்றில்லை. உண்டி முதலியன கொடுத்து வளர்ப்பவன் பர்த்தா. ப்ரபு என்பதற்கு சுவாமி, தலைவன், இறைவன், உடையவன் என்று பொருள். உயிர் வகைகள் தத்தம் கடமைகளை முறையாகச் செய்ததற்கும் செய்யாததற்கும் சாக்ஷி அல்லது பார்த்திருப்பவராக உள்ளார் பகவான். நிவாஸ: என்றால் உயிர்கள் வசிக்குமிடம், இருப்பிடம் என்று பொருள்படுகிறது. சரணம், தன்னைத் தஞ்சமடைந்தவர்களது துக்கத்தைத் துடைப்பவன் அல்லது அடைக்கலம் என்பதாம். ஸுஹ்ருத் என்பதற்குக் கைம்மாறு கருதாது நன்மை செய்பவன், தோழன் என்று பொருள். நிதானமாவது எதிர்காலத்தில் உயிர்வகைகள் அனுபவிப்பதற்குச் சேகரித்து வைத்துள்ள களஞ்சியம். பூமியில் நட்ட வித்து அழிந்து செடியாக மாறுகிறது. ஆனால் பிரம்மம் என்கிற வித்து ஒருவிதமான மாறுதலையும் அடையாது இருந்துகொண்டு ஜீவ ஜகத் வகைகளைத் தன்னிடத்திருந்து தோன்றிவர இடங் கொடுக்கிறது.

19. தபாம்யஹமஹம் வர்ஷம் நிக்ருஹ்ணாம்யுத்ஸ்ருஜாமி ச 
அம்ருதம் சைவ ம்ருத்யுஸ்ச ஸதஸச்சாஹமர்ஜுந   9

அஹம் தபாமி-நான் வெப்பந் தருகிறேன், வர்ஷம் நிக்ருஹ்ணாமி உத்ஸ்ருஜாமி ச-மழையை நான் கட்டி விடுகிறேன். நான் அதைப் பெய்விக்கிறேன், அம்ருதம் ச ம்ருத்யு: ச-நானே அமிர்தம்; நானே மரணம், ஸத் அஸத் ச அஹம் அர்ஜுந-உள்ளதும்; இல்லதும் நான் அர்ஜுனா!

பொருள் : நான் வெப்பந் தருகிறேன்; மழையை நான் கட்டி விடுகிறேன். நான் அதைப் பெய்விக்கிறேன். நானே அமிர்தம்; நானே மரணம். அர்ஜுனா, உள்ளதும் யான்; இல்லதும் யான்.

சூரியனைக்கொண்டு பகவான் வெப்பத்தை உண்டுபண்ணுகிறார்; சூரிய கிரணத்தால் மழை பெய்யவும், நிற்கவும் செய்கிறார். அவரவர் கர்மபலனுக்கு ஏற்றாற் போன்று தேவர்கள் சாகாமையும் நரர் சாவையும் பெறுகின்றனர். சாகாமை, சாவு ஆகிய இரண்டும் சில வேகைளில் விருப்பையும் வேறு சில வேளைகளில் வெறுப்பையும் தருகின்றன. ஆக, ஜீவனை ஞானத்துக்குப் பக்குப்படுத்துதற்கு தேவர்களுடைய சாகாமையயும் நரர்களுடைய சாவும் மாறி பயன்படுகின்றன.

கர்மம் காரியப்படுவதால் உயிர்களிடத்து ஏற்படும் தோற்றம் ஸத்தென்று ஈண்டு இயம்பப்படுகிறது; தோன்றா நிலையே அஸத்தாகிறது. ஆக, அஸத்து என்பது சூன்யமல்ல.

காமிய கர்மத்தின் பலன் :

20. த்ரைவித்யா மாம் ஸோமபா: பூதபாபா 
யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர்கதிம் ப்ரார்தயந்தே 
தே புண்யமாஸாத்ய ஸுரேந்த்ரலோக
மஸ்நந்தி திவ்யாந்திவி தேவபோகாந்  

த்ரைவித்யா: ஸோமபா:-மூன்று வேதம் அறிந்தோர், சோமம் உண்டோர், பூதபாபா-பாவம் அகன்றவர்கள், மாம் யஜ்ஞை: இஷ்ட்வா-என்னை வேள்விகளால் உபாசித்து, ஸ்வர்கதிம் ப்ரார்தயந்தே-வானுலகு தர வேண்டுகின்றனர், தே புண்யம் ஸுரேந்த்ரலோகம் ஆஸாத்ய-அவர்கள் புண்ணிய ஸ்தானமாகிய தேவேந்திர லோகத்தை அடைந்து, திவி-ஸ்வர்கத்தில்
திவ்யாந் தேவபோகாந் அஸ்நந்தி-திவ்யமான தேவ போகங்களைத் துய்க்கிறார்கள்.

பொருள் : சோமமுண்டார், பாவமகன்றார், மூன்று வேதமறிந்தார், என்னை வேள்விகளால் வேட்டு வானுலகு தர வேண்டுகின்றனர். அவர்கள் புண்ணிய ஸ்தானமாகிய தேவேந்திர லோகத்தை யெய்தி வானுலகில் திவ்யமான தேவ போகங்களைத் துய்க்கிறார்கள்.

ரிக், சாம, யஜுர் ஆகிய மூன்று வேதங்களில் சொல்லியுள்ள காமகாண்டத்தைப் பின்பற்றுபவர்கள் அடையும் மறுமைப் பயன்களில் மிகப்பெரியது இதுவாம். இந்திர பதவியே அவைகளுள் தலையாயது. காமிய கர்மி ஒருவன் நூறு யாகங்கள் செய்தால் அவனுக்கு இந்திர பதவி கிட்டுகிறது.

21. தே தம் புக்த்வா ஸ்வர்கலோகம் விஸாலம் 
க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விஸந்தி 
ஏவம் த்ரயீதர்மமநுப்ரபந்நா 
கதாகதம் காமகாமா லபந்தே  

தே தம் விஸாலம் ஸ்வர்கலோகம் புக்த்வா-அவர்கள் விரிவாகிய வானுலகத்திலே இன்புற்று,
புண்யே க்ஷீணே மர்த்யலோகம் விஸந்தி-புண்ணியந் தீர்ந்தவுடன் மறுபடி அழிவுடைய உலகத்துக்குத் திரும்புகிறார்கள், ஏவம் த்ரயீதர்மம்-இப்படி மூன்று வேத முறைகளை, அநுப்ரபந்நா: காமகாமா:-சார்ந்திருக்கிற போகப் பற்றுள்ளவர்கள், கதாகதம்-திரும்ப திரும்ப பிறந்து இறத்தலை, லபந்தே-அடைகிறார்கள்.

பொருள் : விரிவாகிய வானுலகத்திலே இன்புற்றுப் புண்ணியந் தீர்ந்தவுடன் மறுபடி அழிவுடைய மனித உலகத்துக்குத் திரும்புகிறார்கள். இப்படி மூன்று வேத முறைகளைத் தொழுவார் விருப்பங்களில் வீழ்ந்து உழல்வார்.

பொருள் உள்ள அளவு மண்ணுலகில் மதிப்பு இருப்பது போன்று புண்ணியம் உள்ள அளவு விண்ணுலகில் மதிப்பு உண்டு. அது அழிந்ததும் ஆங்கு அவர்களுக்கு இடமில்லை. புதிய புண்ணியத்தைத் தேடக் கர்ம பூமிக்கு அவர்கள் திரும்பி வருகிறார்கள். சுதந்திரமற்று இன்ப நுகர்ச்சிக்காக அவர்கள் யாண்டும் உழன்றாகவேண்டும்.

ஆசையை வென்று பக்தி பூண்டுள்ளவர்களோவெனின் :

22. அநந்யாஸ்சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே 
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோக÷க்ஷமம் வஹாம்யஹம்  

அநந்யா: யே ஜநா-வேறு எதிலும் நாட்டமில்லாத எந்த பக்தர்கள், மாம் சிந்தயந்த:-என்னை தியானித்துக் கொண்டு, பர்யுபாஸதே-எந்த பயனும் எதிர்பார்க்காது உபாசிக்கின்றாரோ, நித்யாபியுக்தாநாம் தேஷாம்-இடைவிடாது என்னையே நினைத்துக் கொண்டிருக்கிற அவர்களுடைய, யோக÷க்ஷமம் அஹம் வஹாமி-நன்மை தீமைகளுக்கு நானே பொறுப்பாவேன்.

பொருள் : வேறு நினைப்பின்றி என்னை வழிபடுவோர் யாவரோ, அந்த நித்திய யோகிகளின் நன்மை தீமையை நான் பொறுப்பேன்.

அனன்யம் என்றால் பரமாத்மா தங்களுக்கு அன்னியமானவர் அல்லர் என்று எண்ணுதல் அல்லது அவரைத் தவிர வேறு எதையும் எண்ணாதிருத்தல். யோகம் என்பது வேண்டியதைப் பெறுதல். பின்பு பெற்றதை வைத்துக் காப்பாற்றுதல் ÷க்ஷமமாகும்.

கர்ப்பத்திலிருக்கும் சிசு தாய்க்கு அன்னியமானதல்ல; ஆதலால் அதன் போஷணை முழுதும் தாயினிடத்திருந்தே இயல்பாக வருகிறது. பிறந்த பின்பும் தாயைத் தஞ்சமடைந்திருக்குமளவு அவள் உணவைத் தேடிவந்து ஊட்டுகிறான். அனன்னிய பக்தியில் ஈடுபடுவோர் அடையும் பேறு யாண்டும் அதைவிடப் பெரியது.

பொருளைத் தேடுபவர்க்குப் பொருள் அமையவும், பிறகு அழியவும் செய்கிறது. இறைவனது அருள் ஒன்றையே நாடுபவர்க்கு அழியாத அவனது அருள் சுரக்கிறது. மேலும் உடல் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருளின் யோக ÷க்ஷமமும் இறைவனாலேயே அளிக்கப்படுகிறது. பக்தர் மீது பித்தம் கொண்டுள்ள பகவான் தாயினும் சாலப்பரிந்து அவர்களைப் பராமரித்து வருவதாக வாக்குக் கொடுக்கிறார். அனன்னிய பக்தி பண்ணுபவர்களுடைய பெரு வாழ்க்கையே பகவானது பிரமாணிக்கத்துக்குப் பரம சான்றாகிறது. பக்தியின் பெருக்கால் தங்கள் உயிரையே அவர்கள் பொருள்படுத்துவதில்லை. ஆகையால் அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு பகவானுடையதாகிறது.

பக்தன் பகவானை நோக்கி ஓர் அடி வைத்தால் பகவான் பக்தனை நோக்கிப் பத்து அடி வருகிறார்.

மற்ற தேவதைகளை வணங்குதல் ஈசுவர ஆராதனையாகாதோ வெனின்:

23. யேऽப்யந்யதேவதாபக்தா யஜந்தே ஸ்ரத்தயாந்விதா: 
தேऽபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம்  

கௌந்தேய-குந்தியின் மகனே, யே பக்தா-எந்த பக்தர்கள், ஸ்ரத்தயா அந்விதா: அபி-நம்பிக்கையுடன் கூடியவர்களாக இருந்த போதிலும், அந்ய தேவதா: யஜந்தே-மற்ற தேவதைகளை வழிபடுகிறார்களோ, தே அபி அவிதி பூர்வகம்- அவர்களும் விதிமுறைப்படி அல்லாமல் (அஞ்ஞானத்துடன்), மாம் ஏவ யஜந்தி-என்னையே தொழுகின்றனர்.

பொருள் : அந்நிய தேவதைகளை நம்பிக்கையுடன் தொழும் அன்பரும், குந்தியின் மகனே, விதி வழுவி என்னையே தொழுகின்றனர்.

சிரத்தையோடு கூடியிருத்தல் என்பது ஆஸ்திக்ய புத்தியுடைத்திருத்தல் அல்லது தெய்வம் துணைபுரியும் என்ற நம்பிக்கையுடனிருத்தலாம். அக்ஞானத்தால் விதிவழுவிச் செய்யும் செயல் அவிதிபூர்வகம் எனப்படுகிறது.

ஓர் அரசாங்கத்தை நிர்வகிக்கும் உத்தியோகஸ்தர்கள் தங்கள் ஆதிக்கத்தையெல்லாம் அரசனிடமிருந்து பெறுகிறார்கள். விண்ணப்பதார் ஒருவன் தன் காரியம் நிறைவேறுவதற்கு உத்தியோகஸ்தருடைய தயவைப் பெற்று அதினின்று தனக்குக் காரிய சித்தி ஏற்பட்டதென்று எண்ணுவானாகில் அவ்வெண்ணம் அரசனது ஆதிக்கத்தைப்பற்றிய அக்ஞானத்தினின்று உதித்ததாகும். அரசனுடைய ஆட்சி முறையே காரியசித்திக்கு அடிப்படையான காரணமாகும்.

காரியசித்தி, புக்தி, முக்தி ஆகிய யாவும் முழுமுதற் பொருளாகிய சர்வேசுவரனிடத்திருந்து வருபவைகள் என்ற உண்மையை அறியாது, சிறு தேவதைகள் ஈசனுக்குப் புறம்பானவைகள் என்றெண்ணி, அச்சிறு தேவதைகளிடத்து வரம் வேண்டுபவர் விதிவழுவி விண்ணப்பித்தவர் ஆகின்றனர்.

ஏன் அதை முறை வழுவிய விண்ணப்பம் என்று சொல்ல வேண்டும்? விடை வருகிறது :

24. அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச 
ந து மாமபிஜாநந்தி தத்த்வேநாதஸ்ச்யவந்தி தே  

ஹி ஸர்வயஜ்ஞாநாம்-ஏனெனில் எல்லா வேள்விகளிலும், போக்தா ச ப்ரபு ச அஹம் ஏவ-உணவு உண்பவனும்; தலைவனும் நானே தான்! து தே மாம்-ஆனால் என்னை அவர்கள்
தத்த்வேந ந அபிஜாநந்தி-உள்ளபடி அறியாதவர், அத: ச்யவந்தி-ஆகையால் வீழ்ச்சி அடைகிறார்கள்.

பொருள் : நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன்; நானே தலைவன்; என்னை மனிதர் உள்ளபடி அறியார்; ஆதலால் நழுவி வீழ்வார்.

போக்தா என்பது உண்பவன் என்று பொருள்படுகிறது. தலைவன் அல்லது சொந்தக்காரன் பிரபு எனப்படுகிறான். சிறு உத்தியோகஸ்தர்களிடமிருந்து சிறு நன்மையைத் தற்காலிகமாகப் பெற்றுப் பிறகு அதை இழந்துவிடுவது போன்று சிறுதேவதைகளை வணங்கி, அத்தேவலோகங்களை அடையப்பெற்றுக் காலாவதியில் பிறப்புலகுக்குத் திரும்புகிறார்கள். ஆதலால் சிறுதேவதைகளை வணங்குதல் விதிவழுவிய விண்ணப்பமாகும்.

இனி நானே ஈண்டு தேகத்தினுள் அதியக்ஞமாகிறேன் என்று பகவான் 8வது அத்தியாயம், நான்காவது சுலோகத்தில் சொல்வதைக் கவனிக்கவும்.

ஒவ்வொருவரும் அடையும் நிலையைப்பற்றிய உண்மையாவது :

25. யாந்தி தேவவ்ரதா தேவாந்பித்ரூந்யாந்தி பித்ருவ்ரதா: 
பூதாநி யாந்தி பூதேஜ்யா யாந்தி மத்யாஜிநோऽபி மாம்  

தேவவ்ரதா: தேவாந் யாந்தி-தேவதைகளை வழிபடுபவர்கள் தேவதைகளை அடைகிறார்கள், 
பித்ருவ்ரதா: பித்ரூந் யாந்தி-பித்ருக்களை வழிபடுவோர் பித்ருக்களை அடைவார், பூதேஜ்யா பூதாநி யாந்தி-பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார், மத்யாஜிந: அபி மாம் யாந்தி-என்னை வழிபடுபவர்கள் என்னை அடைகிறார்கள்.

பொருள் : தேவ விரதிகள் தேவரை எய்துவார்; பிதிர்க்களை நோற்பார் பிதிர்க்களை யடைவார்; பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார்; என்னை வேட்போர் என்னை எய்துவார்.

மனிதனினும் மேம்பட்டவர், ஆனால் தேவர்களுக்குக் கீழோர் பூதங்கள் எனப்படுகின்றனர். இங்கு என்னை என்பது பரமாத்மாவைக் குறிக்கிறது.

தன்னிலும் மிக்காரை அணுகி, அவர்களுக்கு ஒப்பாக வேண்டுமென்று முயலுவது உபாசனையாம். வழிபாடு என்பதும் அதுவே. சிறு செல்வம் உடையவன் பெருஞ் செல்வம் படைக்க முயலுகிறான். சிற்றறிவுடையோன் பேரறிஞனாதற்குப் பாடுபடுகிறான். ஆற்றலில் தாழ்ந்தவன் மேலோனாக விரும்புகிறான். இங்ஙனம் பெருநிலை யடையப் பாடுபடுதலே உபாசனையாகிறது. மனது ஆழ்ந்து எதை எண்ணுகிறதோ அதன் தன்மையைப் பெறுகிறது. உபாசகனுக்கு உபாசனா மூர்த்தியின் விபூதி அல்லது மகிமையெல்லாம் வந்தமைகிறது. உயரத்தில் இருக்கிற நீர்ப்பாண்டத்தோடு இணைத்துள்ள குழாயிலும் நீர் உயர ஏறுகிறது. சீரிய பொருளைச் சிந்திக்கிற மனது சீரியதாகிறது; தாழ்ந்ததை நினைப்பது தாழ்ந்ததாகிறது. ஆகையால்தான் தேவதைகளை உபாசிப்பவன் தேவதைகளை அடைகிறான். பிதிர்க்களை வணங்குபவன் பிதிர்க்களைச் சேருகிறான். பூதப் பிசாசுகளைப் போற்றுபவன் தானே பிசாசு ஆகிறான். ஈசுவரனை உபாசிப்பவன் ஈசுவரனை அடைகிறான்.

ஓர் சாயக்காரன் வஸ்திரத்துக்குச் சாயமேற்றுவதில் ஒரு அலாதியான முறையைக் கைப்பற்றிவந்தான். உன் வஸ்திரத்துக்கு எந்த நிறம் வேண்டும்? என்று அவன் ஒருவனைக் கேட்பான். சிவப்பு வர்ணம் என்று விடை வந்தால் சாயக்காரன் தனது தொட்டியில் அவ் வஸ்திரத்தைத் தோய்த்து எடுத்து இதோ உன் வஸ்திரத்துக்குச் சிவப்புச் சாயம் போட்டாயிற்று என்று கொடுப்பான். மஞ்சள் சாயம் வேண்டுமென்று இன்னொருவன் கேட்பான். அதே தொட்டியில் சாயக்காரன் அவனுடைய வஸ்திரத்தையும் தோய்ப்பான்; வெளியில் எடுக்கும்போது அது மஞ்சள் நிறமாயிருக்கும். நீலம், ஊதா, பச்சை முதலிய எந்த நிறம் வேண்டியிருந்தாலும் சரியே, ஒரே தொட்டியில்தான் சாயக்காரன் வேஷ்டியை நனைப்பான். வேண்டப்பட்ட சாயம் வஸ்திரத்தில் ஏற்றப்பட்டிருக்கும். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த ஒருவன் சாயக்காரனிடம் வந்து, நண்பா, எனக்குத் தகுந்தது எது என்று நீயே தீர்மானம் செய்து அந்தச் சாயத்தில் தோய் என்று சாயக்காரனிடத்தில் பொறுப்பை ஒப்படைத்து விட்டான். நமது மனம் வஸ்திரம் போன்றது. ஈசுவரனே சாயக்காரனாகவும் அவனுடைய சாயத்தொட்டியாகவும் இருக்கிறான். விரும்பியதை அவனிடம் கேட்கிற மனநிலை நமக்குக் கிடைக்கிறது. ஆனால் ஒன்றும் கேளாது நம்மை அவனிடம் கொடுத்துவிடுவது நலம். அப்பொழுது அவன் தன்னை நமக்குக் கொடுக்கிறான்.

சிறு உத்தியோகஸ்தர் முன்னிலைக்கு யாரும் எளிதில் செல்லலாம். ஆனால் அரசன் முன்னிலைக்குச் செல்ல எல்லார்க்கும் தகுதியில்லை. சிறு தேவதைகளை எளிதில் வசப்படுத்தலாம். சர்வேசுவரனைத் திருப்திப்படுத்துவது அவ்வளவு எளிதன்று என்று ஒருவர் கருதலாம். அதற்குப் பகவானது விடை வருகிறது :

26. பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி 
ததஹம் பக்த்யுபஹ்ருதமஸ்நாமி ப்ரயதாத்மந:  

ய: பக்த்யா-எவர் அன்புடனே, பத்ரம் புஷ்பம் பலம் தோயம்-இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் மே ப்ரயச்சதி-எனக்கு அளிப்பவன் ஆயின், ப்ரயதாத்மந:-முயற்சியுடைய அவர், பக்த்யுபஹ்ருதம்-அன்புடன் அளித்த, தத் அஹம் அஸ்நாமி-அவற்றை நான் அருந்துகிறேன்.

பொருள் : இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான்.

ஒரு பொருளின் விலை மதிப்புக்கு ஏற்றபடி அதைப் பெரிய சம்மானமாகக் கருதுதல் உலகத்தவர் இயல்பு. இந்திராதி தேவர்களது போக்கும் அத்தகையதே. ஆனால் லக்ஷ்மி தேவியையே பணிப்பெண்ணாகவுடைய பகவானுடைய பண்பு வேறானது. ஜகத்துக்கெல்லாம் நாதன் எனினும் தன்னில் தானே திருப்தியடைந்திருப்பவன் அவன். எப்பொருளைக்கொண்டும் அவனைப் பெறமுடியாது. நல்ல மனமுடையாரது பக்திவலையொன்றில் மட்டும் அவன் படுகிறான். பக்திக்கு அறிகுறியாக இயற்கையில் எளிதில் அகப்படுகின்ற கனி, மலர், இலை, நீர் ஆகிய எதைப் படைத்தாலும் அவன் மகிழ்வோடு வாங்கிக்கொள்கிறான். விதுரர் வார்த்த கஞ்சியை அமிழ்தெனப் பாராட்டி அவர் அருந்தினார். சுதாமா என்று அழைக்கப்பட்ட குசேலர் கொண்டு வந்த அவலை அவர் வலியப் பிடுங்கி வாயில் போட்டுக்கொண்டார். சபரி கொடுத்த உலர்ந்த காய்கனிகள் இராமனுக்கு ஏற்புடையனவாயின. கண்ணப்பனது உமிழ் நீரும் அவன் மென்ற மாமிசமும் சிவனாருக்கு ஒப்பற்ற நைவேத்தியமாயின. பக்தியானது பகவானுக்கு அவ்வளவு பெரியது.

பக்தியையே பகவான் பெரிதும் பாராட்டுகிறபடியால் :

27. யத்கரோஷி யதஸ்நாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத் 
யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மதர்பணம்  

கௌந்தேய-குந்தி மகனே! யத்கரோஷி-எந்த கர்மத்தை செய்கிறாயோ, யதஸ்நாஸி-எதை உண்கிறாயோ, யத் ஜுஹோஷி-எதை ஹோமம் செய்கிறாயோ, யத் ததாஸி-எதை தானம் அளிக்கிறாயோ, யத் தபஸ்யஸி-எந்த தவம் செய்கிறாயோ, தத் மதர்பணம் குருஷ்வ-அதை எனக்கு அர்ப்பணம் செய்து விடு.

பொருள் : நீ எது செய்யினும், எதனை நீ உண்பினும், எதை நீ ஓமம் பண்ணினும், எதனைக் கொடுத்தாலும், எத்தவத்தைச் செய்தாலும், குந்தி மகனே, கடவுளுக்கு அர்ப்பணமென்று செய்.

வாழ்க்கையில் வந்தமையும் நிகழ்ச்சிகளை யெல்லாம்

யத்கரோமி யதச்னாமி யஜ்ஜுஹோமி ததாமி யத்
யத்தபஸ்யாமி பகவான் தத்கரோமி த்வதர்ப்பணம்

என்று இவ்வாறு ஈசுவரனுக்கு அர்ப்பணம் பண்ணத் தெரிந்து கொண்டால் இது ஈசுவர ஆராதனை, இது லௌகிகம் என்கிற வேறுபாடு இல்லாது இனிது அமைகிறது. வாழ்க்கையே ஓர் இடையறாத ஆராதனையாகிறது. செய்வது தீவினையாயிருந்தாலும் அது இறைவனது கைங்கரியம் என்கிற எண்ணம் வலுக்க வலுக்க தீவினை யொழிந்து நல்வினை நிலைபெறுகிறது.

உணவில் வைத்துள்ள பற்றானது போகப்பிரியத்துக்கு அறிகுறியாகும். தீனியில் வைத்துள்ள நாவாசையை அடக்காதவன் மற்ற ஆசைகளை அடக்க முடியாது. உண்பதையே கடவுள் ஆராதனையாகச் செய்து பழகப் பழக போகமானது யோகமாக மாறியமைகிறது.

எதைத் தானமாகக் கொடுக்கிறாயோ அதையும் ஈசுவரார்ப் பணமாகச் செய். ஈயாத லோபியைவிட மேலானவன் ஐயமிடுபவன். ஈதல் அறம் எனப்படுகிறது. அப்படிக் கொடுக்கிறவன் தன்னைப் பெரியவனாகக் கருதுவானானால் அஹங்காரத் தடிப்பால் அவன் சிறியவனாகிறான். தானம் செய்வதை நாராயண சேவையாகக் கருதுமிடத்து அஹங்காரம் தேய்கிறது. கடவுளுக்குப் பூஜை செய்யும் பாவனையே தானம் செய்வதிலும் வந்தமையவேண்டும்.

தவம் புரிதலைத் தன் சித்தியின் பொருட்டு ஒருவன் செய்யக்கூடும். அது காமிய தபசு ஆகிறது. அதனால் ஜீவபோதம் வளர்கிறது. தவசிகளுக்கிடையில் நான் தபசாயிருக்கிறேன் என்று பகவான் பகருகிறார். (அத்.7, சுலோகம் 9) ஆகையால் தபசு என்னும் தெய்வ சம்பத்து அவரிடத்திருந்து வந்தது. அதனால் அவரது பெருமையே நிலைபெறுக, என்றெண்ணித் தவம் புரிதல் சாலச்சிறந்தது.

இங்ஙனம் வாழ்க்கையில் வந்து அமைந்துள்ள செயல்களெல்லாம் ஈசுவர ஆராதனையாகின்றன. அதனால் ஜீவபோதம் குறைகிறது; பரபோதம் மேலிடுகிறது. எல்லாம் அவன் உடைமையே; எல்லாம் அவன் செயலே என்ற திருக்காட்சி அமையப்பெறுகிறது.

தாயே நான் ஒரு யந்திரம்; நீ ஒரு யந்திரீ. நான் ஓர் அறை; நீ அதில் குடியிருப்பவள். நான் உறை; நீ அதனுள் போடப்படும் வாள். நான் ரதம்; நீ சாரதி. நீ ஆட்டிவைக்கிறபடி நான் ஆடுகிறேன். நீ பேசுவிக்கிறபடி நான் பேசுகிறேன். என் செயல் என்பதெல்லாம் என் உள்ளிருக்கும் உன் செயலே. நான் அல்லேன், நான் அல்லேன், எல்லாம் நீ தான்.

எல்லாம் ஈசுவரனுக்கு அர்ப்பணம் பண்ணுவதால் ஜீவன் அடையும் நன்மை வருமாறு :

28. ஸுபாஸுபபலைரேவம் மோக்ஷ்யஸே கர்மபந்தநை: 
ஸம்ந்யாஸயோகயுக்தாத்மா விமுக்தோ மாமுபைஷ்யஸி  

ஏவம் ஸுப அஸுப பலை:-இங்ஙனம் மங்களம் அமங்களமாகிய பயன்களை, கர்மபந்தநை:-கர்மத் தளைகளினின்றும், மோக்ஷ்யஸே-விடுபடுவாய், ஸந்யாஸ யோக யுக்தாத்மா-துறவெனும் யோகத்திசைந்து, விமுக்த:-விடுபட்டவனாக, மாம் உபைஷ்யஸி-என்னையும் பெறுவாய்.

பொருள் : இங்ஙனம் மங்களம் அமங்களமாகிய பயன்களைத் தருவனவாகிய கர்மத் தளைகளினின்றும் விடுபடுவாய். துறவெனும் யோகத்திசைந்து விடுதலை பெறுவாய். என்னையும் பெறுவாய்.

இப்படி ஈசுவரனுக்குச் சமர்ப்பிப்பதன் மூலம் வினைத்தளைகள் போம். நன்மை பயப்பனவும் தீமை பயப்பனவும் ஆகிய வினைகளெல்லாம் பிறவிக்கு வித்தாகின்றன. பிறவி என்னும் இருளில் சேர்க்கின்ற இரு வினைகளையும் ஈசுவரார்ப்பணம் என்னும் தீயில் போட்டுவிட்டால், அவைகள் வெந்த விதைபோன்று வலிவை இழக்கின்றன. வெந்த விதை பின்பு முளைக்காது. ஈசுவரனுக்கு அர்ப்பணம் பண்ணின கர்மம் பிறவியை உண்டு பண்ணாது.

கர்மத்தை விடுதல், கர்மத்தைச் செய்தல் ஆகிய இரண்டுக்கும் இடையில் உள்ள முரண்பாடு இங்கு சந்நியாச யோகத்தில் சமரசம் பெறுகிறது. மனிதன் தனக்கென்று ஒன்றும் செய்யாது எல்லாம் ஈசுவரார்ப்பணமாகச் செய்கிறபடியால் அது சந்நியாசமாகிறது. பகவான் பொருட்டு முறையாகவும் ஊக்கத்துடனும் கர்மம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறபடியால் அது யோகமாகிறது. அத்தகைய யோகிக்குக் கர்ம சொரூபமாயுள்ள வாழ்க்கையில் குறையொன்றுமில்லை. ஜீவன் முக்தனாக யோகி உடலில் வாழ்கிறான். உடலை உகுத்ததும் அவன் விதேக முக்தனாகிறான்.

இவ்வுலகில் இருக்கையில் நீ என்ன செய்யவேண்டும்? எல்லாவற்றையும் ஈசுவரனுக்கு அர்ப்பணம் செய்துவிடு. நீயும் அவனைச் சரணமடை. அப்பால் உனக்குத் துன்பமே இராது. சீக்கிரத்தில் ஈசுவர சன்னிதானத்தை அடைவாய்.

29. ஸமோऽஹம் ஸர்வபூதேஷு ந மே த்வேஷ்யோऽஸ்தி ந ப்ரிய: 
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம்  

அஹம் ஸர்வபூதேஷு ஸம:-நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன், மே த்வேஷ்ய: ந-எனக்குப் பகைவனுமில்லை, ப்ரிய: ந அஸ்தி-நண்பனுமில்லை, து யே பக்த்யா மாம் பஜந்தி-ஆனால் என்னை அன்புடன் தொழுவோர், தே மயி ச அஹம் தேஷு அபி-அவர்கள் என்னிடமும் நான் அவர்களிடமும் (காணக் கூடியவனாக இருக்கிறேன்).

பொருள் : நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன். எனக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை. ஆனால் என்னை அன்புடன் தொழுவோர் – அன்னவர் என்னகத்தமர்ந்தார்; அவரகத்து நான் உளேன்.

நல்லது கெட்டது என்று வேற்றுமை பாராட்டாது எல்லாப் பொருள்கள் மீதும் சூரிய வெளிச்சம் சமனாகப் படிகிறது. அவ் வெளிச்சத்தைப் பயன்படுத்திக்கொள்ளுதல் அந்தந்தப் பொருள்களின் இயல்பைப் பொறுத்ததாகும். கருமணல், வெண்மணல், கண்ணாடி ஆகிய இவை யாவும் ஒரு பொருளின் வெவ்வேறு தோற்றங்கள். சூரிய வெளிச்சம் இவைகளின் மீது ஒரே விதமாகப் படிகிறது. ஆனால் சூரியனுடைய சான்னித்தியத்தைக் கண்ணாடியில் காண்பது போன்று வெண்மணலில் காண முடியாது; வெண்மணலில் காண்பதுபோன்று கருமணலில் காண முடியாது. ஈசுவர சான்னித்தியம் ஓரளவு அதுபோன்றது. சூரியன் மணலுக்கு வெகுதூரத்தில் இருக்கிறான். ஆனால் ஈசுவரன் ஜீவனுக்குப் புறம்பாயில்லை. தீப்பற்றி எரியும் தன்மை மரமெங்கும் வியாபகமாயிருக்கிறது. பச்சை மரத்திலும் அவ்வியல்பு மறைந்துள்ளது. அது உலரவேண்டும். பிறகு தொடர்ந்து உராய்வதால் அல்லது தீயோடு தொடர்வு வைப்பதால் மரக்கட்டை பற்றி எரிகிறது. அவ்வேளையில் விறகுக்கட்டை வேறு, தீ வேறு அல்ல. விறகே தீ; தீயே விறகு.

நீக்கமற எங்கும் நிறைந்துள்ள இறைவன் இமைப்பொழுதும் நீங்காது நெஞ்சத்தில் குடிகொண்டிருக்கிறான். உள்ளத்தைத் தூயதாக்காதவர்களுக்கு அவ்வுண்மை விளங்குவதில்லை. அனன்ய பக்தியால் மனதைப் பண்படுத்தியவர்களுக்கு அது விளங்குகிறது. யாண்டும் பகவானுடைய முன்னிலையிலேயே அத்தகைய பக்தர்கள் வாசம் செய்கிறார்கள். கண்ணாடியில் சூரியன் போன்றும், உலர்ந்த விறகுக்கட்டையில் தீப்போன்றும் கருவி கரணங்கள் ஓய்ந்த தொண்டர்களிடத்து பகவான் வீற்றிருக்கிறான்.

எல்லா மனிதர்களிடத்தும் ஈசுவரன் இருக்கிறான். ஆனால் ஈசுவரனிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை. இதுதான் அவர்கள் துன்பப்படுவதற்குக் காரணம்.

பக்தியின் சிறப்பு எத்தகையது என்பது விளக்கப்படுகிறது :

30. அபி சேத்ஸுதுராசாரோ பஜதே மாமநந்யபாக் 
ஸாதுரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்வ்யவஸிதோ ஹி ஸ:  

ஸுதுராசார: அபி-மிகவும் தீய நடத்தை உள்ளவனானாலும், அநந்யபாக்-வேறு எதிலும் நாட்டமின்றி என் பக்தனாக ஆகி, மாம் பஜதே சேத்-என்னை வழிபடுவானாகில், ஸ: ஸாது: ஏவ மந்தவ்ய:-அவன் நல்லோனென்றே கருதுக, ஹி ஸ: ஸம்யக் வ்யவஸித:-ஏனெனில் அவன் நன்கு முயல்கின்றான்.

பொருள் : மிகவும் கொடிய நடையோனாயினும் பிறிது வழிபடாதே என்னை வழிபடுவோன் நல்லோனென்றே கருதுக. ஏனெனில், நன்கு முயல்கின்றான் ஆதலின்,

தர்மத்தை முறையாகச் செய்கின்றவர்களும் இந்திரிய நிக்கிரகம் நன்கு செய்கிறவர்களும் சதாசாரம் உடையவர்கள் ஆகின்றனர். கொலை, களவு முதலிய பாபச் செயலைச் செய்கின்றவர்களும் மனம் அடங்காது இந்திரியங்கள் வழியாக விஷயங்களில் மூழ்குபவரும் துராசாரம் உடையவர் ஆகின்றனர். அன்னவர் மேலும் மேலும் அதோகதியை அடைகின்றனர். அத்தகைய கீழ் மக்களும் விரைவில் மேன்மக்கள் ஆதற்கு வழியுண்டு. எண்ணமே பெருமைக்கும் சிறுமைக்கும் முதற்காரணம். இடையறாது இறைவனிடத்துப் பக்தி பண்ணவேண்டும் என்ற எண்ணம் வலுக்கும் போது முன்பு பாபச் செயல்களைப்பற்றியும் கீழான விஷய போகங்களைப்பற்றியும் எண்ணிய எண்ணங்கள் அடிபடுகின்றன. பகவானைப் பற்றிய நல்லெண்ணம் ஒன்றே பாக்கியிருக்கிறது. சுடர் வெளிச்சமுள்ள வீட்டுக்குள் திருடன் நுழையான். அது போன்று பகவத் சிந்தனையுள்ள மனதில் துராசாரத்துக்கு ஏதுவான எண்ணங்களுக்கு இடமில்லை. நற்செயலுக்கும் நல்லியல்புக்கும் வித்தாவது நல்லெண்ணம். ஆக, இடையறாது இறைவனைப் பஜிக்கத் தீர்மானம் செய்கிற வளவில் கேடுடைய ஒருவன் சாதுவாகிறான். சிறப்பு அனைத்தும் அதினின்று வருமாதலால் அவன் நன்கு தீர்மானித்தவன் ஆகிறான்.

எல்லாவற்றையும் பரித்தியாகம் செய்துவிட்டு, ஈசுவரனுடைய பாதாரவிந்தங்களில் சேரவேண்டுமென்று செய்யும் உபதேசங்களை உலகப்பற்றுள்ளவர்கள் கேட்கமாட்டார்கள். இப்படிப் பட்டவர்களை எப்படி நல்வழிக்குக் கொண்டுவரலாமென்பதை நன்றாக ஆலோசனை செய்து தெளிந்த கௌராங்க சுவாமியும் நித்தியானந்த சுவாமியும், ஜனங்களே! வாருங்கள்; பகவந் நாமத்தை வாய்விட்டுப் பாடினால் உங்களுக்கு நல்லுணவும் நாரியர் போகமும் கிடைக்கும் என்று ஆசைகாட்டி அழைத்தனர். அநேகர் அவ்வுணவையும் போகத்தையும் அடையலாம் என்ற நோக்கத்தோடு பகவந் நாமத்தைச் சொல்ல ஓடிவந்து அவர்களை திரளாகச் சூழ்ந்துகொண்டனர். ஆகவே அவர்கள் எல்லாரும் வலைக்குள் அகப்பட்டுக்கொண்டனர். பகவந் நாமமாகிய அமிர்தத்தின் இன்பத்தைச் சிறிது சிறிதாகச் சுவைத்ததும் அவர்கள் நித்தியானந்த சுவாமி சொன்ன வார்த்தைகளின் உட்கருத்தை யறிந்துகொண்டனர். ஈசுவரனிடம் பூரண பக்தி செய்வதாலுண்டாகும் ஆனந்த பாஷ்பந்தான் நல்லுணவு; பக்தி பரவசமானவன் தன்னையறியாமல் இள நங்கையாகிய தரையைத் தழுவிப் புரளுவதுதான் நாரியர் போகம்.

எத்தனை பிறவிக்குப் பிறகு சாதகன் சாது ஆகிறான் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு விடை வருகிறது.

31. க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஸஸ்வச்சாந்திம் நிகச்சதி 
கௌந்தேய ப்ரதி ஜாநீஹி ந மே பக்த: ப்ரணஸ்யதி  

க்ஷிப்ரம் தர்மாத்மா பவதி-விரைவிலேயே தர்மாத்மாவாக ஆகிறான், ஸஸ்வத் ஸாந்திம் நிகச்சதி-நித்திய சாந்தியு மெய்துவான், கௌந்தேய-குந்தி மகனே, மே பக்த:-என்னுடைய பக்தன், ந ப்ரணஸ்யதி-அழிவதில்லை, ப்ரதி ஜாநீஹி-சத்தியத்தை உறுதியாக அறிந்து கொள்.

பொருள் : அன்னவன் விரைவிலே அறவானாவான்,நித்திய சாந்தியு மெய்துவான்.
குந்தி மகனே; குறிக்கொள்! என தன்பன் சாகமாட்டான்.

வால்மீகி, கண்ணப்பர் முதலாயினோர் முதலில் துராசாரமுடையவர்களாயிருந்தார்கள். ஏனென்றால் மேலோர்களால் ஆமோதிக்கப்படாத வாழ்க்கை முறை அவர்களிடத்திருந்தது. பகவத்பக்தியில் அவர்கள் மனது திரும்பியது. அதே பிறவியில் அதிவிரைவில் அவர்களது வாழ்க்கை மாறியது. அறச்செயலுக்கு அவர்கள் இருப்பிடமானார்கள். முன்பு அறிந்திராத நித்திய சாந்தியும் அவர்களுக்கு உண்டாயிற்று. அவர்கள் கேடு அனைத்தும் நீங்கப்பெற்று, நலம் அனைத்தும் அடைவாராயினர்.

கண்ணனிடத்து மாறாத பக்தி பூண்டு வாழ்ந்தவர்கள் பாண்டவர்கள். அவர்கள் ராஜ்யத்தை இழந்தார்கள்; ஆபத்துக்கள் பல நேர்ந்தன; கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் வந்தது; வனவாசத்தில் படாத பாடுபட்டனர். ஆனால் பக்தியை மட்டும் அவர்கள் கைவிடவில்லை. கிருஷ்ணனைச் சார்ந்து இருந்தது ஒன்றே அவர்களுக்கு எல்லா வல்லமையையும் ஊட்டியது. நித்திய வாழ்க்கையை அவர்களே பெற்றனர். பிரஹ்லாதன், அப்பர் முதலாயினோர் வாழ்க்கையும் இதற்குச் சான்றாகும். பக்தர்களுக்கு அழிவில்லையென்பதைப் பக்தர்களுடைய வாழ்க்கையே விளம்பரம் செய்கிறது.

கடைத்தரமான பாபிகளும் கடைத்தேற முடியும் என்று சொல்லியான பிறகு இடைத்தரமானவர்களைப் பற்றிய பேச்சு வருகிறது. அதாவது :

32. மாம் ஹி பார்த வ்யபாஸ்ரித்ய யேऽபி ஸ்யு: பாபயோநய: 
ஸ்த்ரியோ வைஸ்யாஸ்ததா ஸூத்ராஸ்தேऽபி யாந்தி பராம் கதிம்  

ஹி பார்த-ஏனெனில் பார்த்தா, ஸ்த்ரிய: வைஸ்யா: ஸூத்ரா:-பெண்களாயினும் எந்த வர்ணத்தவராயினும், ததா-அதே போல, பாபயோநய:-பாவிகளானாலும், யே அபி ஸ்யு:-எவர்களாக இருந்தாலும், தே அபி மாம் வ்யபாஸ்ரித்ய-அவர்களும் என்னை தஞ்சமடைந்து, பராம் கதிம் யாந்தி-மேலான கதியை அடைகிறார்கள்.

பொருள் : பாவிகளென்னைப் பணிவாராயினும், மாதரேனும், வைசியரேனும், சூத்திரரும் பரகதி பெறுவார்.

மனபரிபாகத்துக்கு ஏற்றாற்போல பிறவி மேலானது அல்லது கீழானது ஆகிறது. ஈண்டு இயம்பப்பட்ட மூவரும் கீழான பிறவியரே. எக்குலத்தில் பிறந்தவராயினும், இயல்பாக மாதர் உறுதியான உள்ளம் உடையவர் அல்லர். பேதைமையே பெண்டிரது இயல்பு. திண்மை வாய்ந்திருக்கும் தையலர் மிகக் குறைவு. அத்தகைய சிறுபான்மையர் விதிக்கு விலக்கானவர் என்றே சொல்லாம். ஆக, பொதுவாகப் பெண்மக்களைக் கீழான பிறவியர் என்பது இயற்கைக்கு ஒத்ததொரு சொல்லாகும்; இழிச்சொல் அல்ல.

இவ்வுலக வாழ்க்கைக்குப் பயன்படுகிற பொருளைச் சேகரிப்பதிலேயே மனதை வைப்பவர்கள் வைசியர்கள். அருளை நாடாது, பொருளை நாடுதலே அவர்களது போக்கு. ஜடப்பொருளை எண்ணுகின்றவளவு ஜட புத்தியே அவர்களிடத்து வலுக்கிறது. அத்தகைய பிரவிருத்தியையுடைவர்களெல்லாம் கீழான பிறவியை யுடையவர்களாகக் கருதப்படுகின்றனர். அதிலும் கீழ்ப்பட்டவர் சூத்திரர். ஏனென்றால் பிறரிடத்து அடிமைத்தொழில் செய்தல் ஒன்றுதான் அவர்களுக்கு இயலும். ஜீவனோபாயத்தின் பொருட்டுத் தம் வாழ்க்கையை யார் பிறரிடத்து ஒப்படைக்கின்றனரோ அவரே சூத்திரர். இவ்வுலகம் ஒன்றைமட்டும் அறிந்து, அதைச் சார்ந்திருக்கும் அன்னவர் இறைவனைச் சார்கிறதில்லை. அழுக்குப் படிந்த உடல் நீராடுவதால் சுத்தியடைகிறது. பரமனைப் பக்தியுடன் போற்றுவதால் சித்தமலம் அகலுகிறது; மனம் குவிகிறது; பரபோதம் ஓங்குகிறது; பரகதியும் கைகூடுகிறது.

கீழான பிறவி ஒருநாளும் பக்திக்கு இடைஞ்சல் அல்ல. கடலை அடையும் நதிகளெல்லாம் கடல் மயம் ஆகின்றன. புண்ணியநதி, சாக்கடை ஆகிய அனைத்தும் கடலில் ஒரே பதவியைப் பெறுகின்றன. அங்ஙனம் கடவுளைக் கருதும் மனிதர்களெல்லாம் கடவுள் மயம் ஆகின்றனர். செயலில் அல்லது பிறவியில் கீழோரும் பக்தியால் மேலோர் ஆகின்றனர். கடவுளின் அருள் அவர்களை மேலோர் ஆக்குகிறது. கடவுளை அடையத்தகாதார் என்பார் எவருமில்லை.

புயற்காற்று அடிக்கும்போது அரசமரம் இன்னது, ஆலமரம் இன்னது என்று வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. அதுபோல பக்தி என்னும் புயற்காற்று ஒருவனுக்குள் அடிக்கும்போது அவனிடம் ஜாதிபேதம் இருக்க முடியாது.

இனிப் பாரமார்த்திகத்துக்கென்றே பிறந்து வாழ்ந்திருப்பவர் நிலை யாது?

33. கிம் புநர்ப்ராஹ்மணா: புண்யா பக்தா ராஜர்ஷயஸ்ததா 
அநித்யமஸுகம் லோகமிமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்  

புண்யா:-புனிதமான, ப்ராஹ்மணா: ராஜர்ஷய: பக்தா:-அந்தணரும் ராஜரிஷிகளும் எனக் கன்பராயின், கிம் புந:-சொல்லவும் வேண்டுமோ! அநித்யம் அஸுகம்-நிலையற்றதும் இன்ப மற்றதுமாகிய, இமம் லோகம் ப்ராப்ய-இவ்வுலகப் பிறவி யெய்திய நீ, மாம் பஜஸ்வ-என்னை வழிபடக் கடவாய்.

பொருள் : அப்படியிருக்கத் தூய்மை யார்ந்த அந்தணரும் ராஜரிஷிகளும் எனக் கன்பராயின், என்னே! ஆதலால்; நிலையற்றதும் இன்ப மற்றதுமாகிய இவ்வுலகப் பிறவி யெய்திய நீ என்னை வழிபடக் கடவாய்.

மேலே சொன்ன பாபயோனிகளுக்கு எதிரிடையாக இங்குப் புண்ணியவான்கள் பகரப்படுகின்றனர். அவை கீழான பிறவிகளாவது போன்று, இவை மேலான பிறவிகளாகின்றன. ஏனென்றால் பிரம்மரிஷிகளும் ராஜரிஷிகளும் சர்வேசுவரனிடத்து அனன்னிய பக்தி பண்ணுவதையே லட்சியமாகக் கொண்டிருக்கின்றனர். அறம் வளர்ப்பவர் அந்தணர் ஆகின்றனர். அறம் வழங்குபவர் அரசர் ஆகின்றனர்.

கேணியில் நீர் ஊறவும் வேண்டும்; உண்ணுதற்கு அதை உலகுக்கு எடுத்து வழங்கவும் வேண்டும். மரம் காய்த்துப் பழுக்கவும் வேண்டும்; அதை உலகுக்கு உணவாகக் கொடுக்கவும் வேண்டும். திரவியத்தை மணலுக்கு ஒப்பாகத் தள்ளி விட்டுத் தவத்தையே தனமாகத் தேடுபவர், ஈசுவர சேவையிலேயே கண்ணுங் கருத்துமாயிருப்பவர், ஈசுவர பக்திக்குப் புறம்பாகிய எதற்கும் சிந்தையில் இடங்கொடாதவர் அந்தணர் ஆகின்றனர். அவர்களது நல்வாழ்க்கையால் அறம் வளர்கிறது. உயிர்களை அல்லும் பகலும் அறநெறியில் ஓம்புதலே அரசர் செயல். அதுவும் சிறந்த ஈசுவர சேவையாகின்றது. ஆக, கடவுள் வழிபாட்டுக்கென்றே பிறந்து வாழ்ந்திருப்பவர் கடவுளையடைதற்குச் சந்தேகம் யாதுளது?

கீழான மனதையுடையவர் நிலையற்ற உலகத்தை நிலைபெற்ற உலகம் என்று எண்ணி, அதில் பற்று வைக்கின்றனர். இயற்கையில் எவ்வுயிரை அல்லது எப்பொருளைப் பார்த்தாலும் அது அழியும் தன்மையுடையது என்ற உண்மையையே அது ஓயாது புகட்டிக்கொண்டிருக்கிறது. வளரும் வாலிபன் மரணத்தை நோக்கி வேகமாய் ஓடிக்கொண்டிருக்கிறான் அல்லவா? நேற்றுப் பச்சிலையாயிருந்தது இன்று உதிர் சருகு ஆகின்றது. அணு முதல் அண்டம் வரையில் எல்லாம் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. அவைகளிடத்து அமையும் மாறுதலே இன்பத்தைத் துன்பமாகச் சமைக்கிறது.

இன்று பிள்ளை பிறந்தான் என்ற பூரிப்பானது நாளை அவன் இறந்தான் என்ற வாட்டமாகிறது. வெற்றி என்ற மகிழ்ச்சி, தோல்வி என்ற துன்பமாக மாறுகிறது. தவளையின் பின்னங்காலைப் பாம்பு பிடித்துக்கொண்டது; அதை விழுங்கவும் ஆரம்பித்துவிட்டது. அதற்கிடையில் தன்னெதிரே வந்த பூச்சியொன்றைத் தவளை பிடித்துத் தின்று திருப்தியடைகிறது. இங்ஙனம் மனிதனை நமன் பற்றிக்கொண்டான்; காலத்தைக்கொண்டு அளந்து அவனை விழுங்கவும் ஆரம்பித்துவிட்டான். அதைப் பொருட்படுத்தாது உலகம் தருகிற இன்பத்தை நுகர்ந்து அவன் இறுமாந்திருக்கிறான். அறிவுடையோனுக்கு இது பொருந்தாது. அநித்தியமும் அசுகமுமான இவ்வுலகைப் பெற்றதனால் ஆய பயன் ஒன்றே உளது. அது யாது எனின், இதைப் பொருட்படுத்தாது சர்வேசுவரனைப் பஜித்தலேயாம். அதுவே செயற்கரிய செய்கையாகும்.

எந்த வழியாக நமக்கு ஈசுவர தரிசனம் கிடைக்கும்?

உருகிய உள்ளத்துடன் அவனுக்காக உன்னால் கதறியழ முடியுமா? மனைவி, மக்கள், பொன், பொருள் இவைகளுக்காக மக்கள் குடம் குடமாகக் கண்ணீர் உகுக்கிறார்கள். ஆனால் இறைவன் வேண்டும் என்று அழுபவர் யார்? குழந்தை விளையாட்டுப் பொருள்ளோடு ஈடுபட்டிருக்கும் வரையில் தாய் தன் சமையல் வேலைகளையும் இதர அலுவல்களையும் கவனிக்கிறாள். விளையாட்டுக் கருவிகள் பசியை நீக்குகின்றதில்லை. எனவே குழந்தை அவைகளை வீசி எறிந்துவிட்டுத் தாயை வேண்டிக் கோவென்று கத்தி அழுகின்றது. உடனே தாய் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும், சாதத்தின் கஞ்சி வடித்துக்கொண்டிருந்தாலும் கூட எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்து குழந்தையை எடுத்துத் தன் மார்போடு அணைத்துக்கொள்கின்றாள். இறைவன் அங்ஙனம் பக்தனை ஓம்புகிறான்.

அவனைப் போற்றும் விதம் வருமாறு :

34. மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு 
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண:  

மந்மநா: பவ-மனத்தை எனக்காக்கி விடு, மத்பக்த:-பக்தியை எனக்காக்கு, மத்யாஜீ-என்னைத் தொழு, மாம் நமஸ்குரு-என்னை வணங்கு, ஏவம் ஆத்மாநம் யுக்த்வா-இவ்வாறு மனம், புலன்களுடன் கூடிய உடலை (என்னிடம்) ஈடுபடுத்தி, மாம் ஏவ ஏஷ்யஸி-என்னையே அடைவாயாக.

பொருள் : மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள். இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.

மனது முழுதும் ஈசுவர எண்ணத்தால் நிறையப் பெறவேண்டும். ஒருவனை வெறுத்தால் அல்லது ஒருவனுக்கு அஞ்சினால் மனது முழுதும் அவனைப்பற்றிய எண்ணமுடையதாகிறது. அப்படிச் செய்யாது பக்தியோடு கூடிய பேரன்பு ததும்பிய எண்ணமாயிருக்கவேண்டும். சிறுவன் ஒருவனுக்குத் தன் தாயினிடத்து அத்தகைய நிறைமனதும் பேரன்பும் உண்டாகின்றன. ஆனால் அவனுக்கு ஆகவேண்டிய காரியங்களையெல்லாம் தாய் செய்து முடிக்க வேண்டும் என்று அச்சிறுவன் எதிர்பார்க்கிறான். அர்ஜுனா, நீ அப்படிச் செய்யாதே, என்னிடத்து பக்தி பண்ணுவதோடு சேர்த்து எனக்கு யாகம் செய். அதாவது நீ வாங்கிப் பிழைப்பவனாக உலகத்தில் வாழாது பெருங்கொடையாளியாயிரு. அப்படி எங்கு யாருக்கு எதைக் கொடுத்தாலும் அதை என்னுடைய ஆராதனையாகக் கருது. நான் கொடையாளி என்ற கர்வம் வராதிருத்தற்பொருட்டு, உன் கொடையை ஏற்றுக்கொள்பவர்களையெல்லாம் என் சொரூபமாகக் கருதி நமஸ்காரம் செய்.

பகவானை அடைதல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பக்தியும் பூஜையும் சேவையும் சர்வகாலமும் செய்துவரவேண்டும். அதனால் உள்ளம் யோகத்தில் உறுதியடைகிறது. துரு நீங்கப்பெற்ற இரும்பு காந்தத்தினிடத்தில் சேர்வதுபோன்று பக்தியில் பண்பட்ட மனது பகவானிடம் சேர்கிறது.

இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
ராஜவித்யா ராஜகுஹ்யயோகோ நாம
நவமோ அத்யாய:

பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின்கண் ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் என்ற ஒன்பதாம் அத்தியாயம்.





தொடரும்... 


நன்றிவணக்கம் 
ஹரிமணிகண்டன்
 Harimanikandan .V
H/P   :+91 9841267823

                 

ஓம் சிவசிவ ஓம்

                   Kagapujandar - Siva Panjatcharam Mp3
ஓம் சிவயநம‌யநமசிவ‌வயநமசி , நமசிவய‌,சிவயசிவ‌ஓம்

(-)o-o(-)(Be Good & Do Good)(-)o-o(-)

No comments:

Post a Comment