Tuesday, July 17, 2012

Tamil BhagavadGita -04
 ஸ்ரீ மத் பகவத்கீதை 


Srimad Bhagavad Gita 
21. சிறந்த பாஷ்யம் எது?

அத்தனைவித வர்ணனைகளுக்கும் ஞாயிறு இடங்கொடுக்கும்.

"ஸ்ரீ கிருஷ்ணபகவான் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையே அவருடைய கூற்றுக்கு ஒப்பற்ற விளக்கமாகிறது". 

மனத்தகத்திருந்து கச்மலத்தைக் களைந்து விடு என்று அவர் புகட்டினார். சூரியனிடத்து எப்படி இருள் இருக்க இடமில்லையோ அப்படி அச்யுதனிடத்துக் கீழ்மை குடிகொள்ள இடமில்லை. "ஆற்றல் படைத்தவனாய் எழுந்திராய்" என்று இயம்பினார் அவர். பின்பு, ஆற்றல்கள்  அனைத்துக்கும் அவரே இருப்பிடமாய் இலங்கினார். "உயிர்களிடத்து அன்பு பூண்டு ஒழுகுக" என்று அவர் உபதேசித்தார். தாமே அன்பின் வடிவினராய் நன்கு மிளிர்ந்திருந்தார்.

மற்ற உயிர்கள் போன்று அவர் அழக்கிடையாது; ஏமாற்றம் அடையக்கிடையாது; வியப்படையக்கிடையாது; கவலைப்படக் கிடையாது; துயருறக் கிடையாது. யாண்டும் நிறைநிலையிலேயே இருந்தார். கண்ணனை அறிபவர் கீதையை அறிவார்கள். கண்ணனே கீதைக்குச் சிறந்த பாஷ்யம்.

22. பாஷ்யங்களின் பாகுபாடுகள்
அத்வைத சம்பிரதாயத்துக்குச் சிறந்த முன்மாதிரியாயிருப்பவர் ஸ்ரீசங்கராச்சாரியர் ஆவார். விசிஷ்டாத்வைதிகள் அனைவர்க்கும் பிரதிநிதியாயிருப்பவர் ஸ்ரீ ராமானுஜாச்சாரியர். துவைத மதவாதிகள் எல்லார்க்கும் முன்னணியில் இருப்பவர் ஸ்ரீ மத்வாச் சாரியர். பகவத்கீதைக்கு இம்மூவரும் பாஷ்யங்கள் இயற்றியிருக்கின்றனர். இம்மூவரும் தென்னிந்தியாவில் தோன்றியவர்கள் என்பதும்.

23. வேதாந்தம்

 நமக்குப் புலப்படுவது இவ்வுலகம் அல்லது ஜகத் என்பதாம். இதில வாழ்ந்திருக்கும் உயிர்களுக்கு ஜீவர்கள் என்று பெயர். ஜகத்தையும், ஜீவர்களையும் தாங்கியிருக்கும் பெரிய பொருளுக்குப் பரம் என்று பெயர். 

பிறவிகள் வாயிலாக அவைகள் மேலான நிலைக்குப் போவதும் உண்டு; கீழான நிலைக்கு இறங்குவதும் உண்டு. புண்ணியம் மேல்நிலைக்கு எடுத்துச் செல்லுகிறது; பாபம் கீழ்மையில் ஆழ்த்துகிறது. 

பிரபத்தி என்பதும், சரணாகதி என்பதும், அடைக்கலம் என்பதும் ஒரே கருத்தைக் குறிக்கும் பல சொற்களாம். அவர் அருளால் ஜீவன் தன்னை அவருடைய ஓர் அவயவம் என்று அறிந்திருப்பது முக்தி.

நதி கடலில் லயமாவது போன்று ஞானமடைந்த ஜீவன் பரத்தில் கலக்கிறான். இது அத்வைதம் புகட்டும் முக்தி. 
24. கிருஷ்ணனது பான்மை

லோக ஹிதத்தின் பொருட்டு உடல் என்னும் அங்கியை அவன் விளையாட்டுக்காக அணிந்தவன் ஆகிறான். அவன் துவைதியுமல்லன், விசிஷ்டாத்வைதியுமல்லன், அத்வைதியுமல்லன். இம் மூன்று சம்பிரதாயங்களும் அவனுக்குச் சேவை புரிகின்றன. அவனைக் காணவும், உணரவும், இணக்கம் கொள்ளவும் அம் மூன்று மதங்களும் தம்தம் போக்கில் முயலுகின்றன. மூன்று மதங்களையும் அவன் தன்னகத்து அடக்கியிருக்கின்றான்; பிறகு அவைகளுக்கு அப்பாலுமிருக்கிறான். 

"ஆத்மபோதம் அடையப்பெற்றவன் ஆவாயாக. உனது பேரியல்பில் நிலைபெற்றிரு. பேராற்றல் படைத்துள்ள நீ கரவாது உன் கடமையைச் செய். வெறும் புன்மையனாகப் பிழைத்திருக்க நீ இந்தப் பூலோகத்துக்கு வந்துள்ளவனல்லன். உலகுக்கும் உனக்கும் தொடர்வுண்டு. அதை நிலைநாட்டுவது யோகம். தூக்கி வினைசெய்து அத்தொடர்வை நிரூபிப்பாயாக. ஆத்ம சொரூபத்தில் அனைத்தையும் அடக்கிக்கொள்வாயாக. மலரானது மணம் வீசுவது போன்று உன் அன்புக்கு அனைத்தும் இலக்காகட்டும். ஒளிவீடும் ஞாயிறு போன்று உன் அறிவு ஓங்கியிருப்பதாகுக. பிறகு அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய மதங்கள் தங்களுக்குரிய ஸ்தானங்களை உன் ஆத்ம சொரூபத்தில் பெறுகின்றன." இங்ஙனம் யோகேசுவரன் உயிர்களை யோகிகள் ஆகும்படி தூண்டுகிறான். 

 எந்த சமயத்தையோ சம்பிரதாயத்தையோ நிலைநாட்டுதற்கு என்று அல்லாது, யோக சாஸ்திரம் என்கிற முறையில் ஸ்ரீமத் பகவத் கீதையை விளக்க ஈண்டு முயன்றுள்ளோம்.


25. சொரூப லக்ஷணம்

பரம்பொருள் மனம் மொழிக்கு எட்டாதது. அது பிரபஞ்ச மயமாக வடிவெடுக்குமிடத்து அதை ஸத் சித் ஆனந்தம் என்று சொல்லலாம். 

காலத்தால், இடத்தால், செயலால் மாறுபடாதிருப்பது ஸத். காலதேச வர்த்தமானதைக் கடந்திருப்பது பரம்பொருள். அதே ஸத் பொருள் காலத்திலும், இடத்திலும், செயலிலும் தன்னை விளக்கிக் கொண்டிருக்கும்போது எண்ணிறந்த ஜீவகோடிகளாகக் காட்சி கொடுக்கிறது. 
இனி, கர்மத்துக்கு அடிப்படையாயிருப்பது சங்கற்பம் அல்லது தீர்மானம்.  கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களும் ஸத்சொரூபத்தை விளக்குதற்கான சாஸ்திரமாகும். 

உணர்ச்சி விதவிதமான வடிவெடுக்கிறது. விருப்பு வெறுப்பு, நட்பு பகை, ஆசை சினம், பொறை பொறாமை, பாராட்டுதல் புறக்கணித்தல் ஆகிய இவையாவும் உணர்ச்சியின் வெவ்வேறு தோற்றங்களாம். 

பகவத்கீதையில் ஏழாவது அத்தியாயத்திலிருந்து பன்னிரண்டாம் அத்தியாயம் வரையில் கடவுள் சொரூபத்தை விளக்குவதோடு பக்தியையும் அப்பகுதி வளர்க்கிறது. 

அன்பே கடவுள் என்பது அதன் கருத்து. அன்பு என்னும் கவர்ச்சி ஓங்குதற்கு ஏற்ப இனிமை மிளிர்கிறது. அது ஆனந்தமாகப் பரிணமிக்கிறது. ஆனந்தம் வளர வளர அது உலப்பில்லா ஆனந்தமாகிறது. ஆனந்தமே பிரம்மம். பரமாத்மாவின் சொரூபம் ஆனந்தம். இந்த ஆனந்தத்தை நாடியே உயிர்கள் வாழ்க்கையில் பற்றுவைக்கின்றன. ஆனந்தம் இல்லாவிட்டால் உயிர்கள் கணப்பொழுதும் வாழ்ந்திருக்கமாட்டா. ஆக, ஆனந்தம் என்னும் ஆத்மசொரூபத்தை வளர்ப்பது கீதையின் இரண்டாவது ஷட்கத்தின் நோக்கமாகும். 

உணர்வுக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்வு உண்டு. 

கடவுள்பால் அன்பு கொள்ளுமளவு பக்தன் கடவுளை அறிகிறான். அவரை அறியுமளவு அவனுக்குப் பக்தி அதிகரிக்கிறது. 

26. பொது நூல்

மொழியை முன்னிட்டு மனிதன் மேலோன் ஆகான். பின்பு ஒழுக்கமே மேன்மைக்கு முதற்காரணம்.

மனிதனை நிறைமனிதன் ஆக்குவது கீதையின் கோட்பாடாகும். உறுதியான உடலும் உயர்ந்த உள்ளமும் தெளிந்த அறிவும் நிறைநிலைக்கு இன்றியமையாத உறுப்புகளாகும். பேராற்றல் படைத்திருப்பது முதல் கோட்பாடு. ஒழுக்கம் ஆற்றலில் அடங்கி விடுகிறது. நலத்தைச் செய்யும் செய்விக்கவும் ஆற்றல் உடையவனுக்கே சாலும். 


அதைப் பாங்குடன் வளர்க்க மனிதன் கடமைப்பட்டிருக்கிறான். ஆக, ஆற்றலையும் அன்பையும் அறிவையும் ஒருங்கே அடையப்பெற்றிருப்பவனுக்கு மேலும் பெறவேண்டிய பேறு ஒன்றுமில்லை. அவன் நிறைமனிதன் ஆகிறான். அவனுக்கே நிறை நிலை சொந்தம். நிறைநிலையெய்தி நிறைமனிதன் ஆக விரும்புபவர் அனைவர்க்கும் ஸ்ரீமத் பகவத்கீதை பொது நூலாகும். சமயங்கள் அனைத்துக்கும் அதைப் பொது நூலாக வைத்துக்கொள்வதும் சாத்தியமாகிறது.


தொடரும்.... 
Thanks & Regards

Harimanikandan.V
H/P   :+91 9841267823

                 

ஓம் சிவசிவ ஓம்

                   Kagapujandar - Siva Panjatcharam Mp3
ஓம் சிவயநம‌யநமசிவ‌வயநமசி , நமசிவய‌,சிவயசிவ‌ ஓம்

(-)o-o(-)(Be Good & Do Good)(-)o-o(-)

No comments:

Post a Comment